தமிழ் இனத்தின் போராளி மறைந்துவிட்டார்! கலைஞர் மறைவு குறித்து மஜக இரங்கல்!

(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் இரங்கல் செய்தி)

பெரியாரின் பெருந்தொண்டராய்; பேரறிஞர் அண்ணாவின் அன்பு தம்பியாய்; தமிழ் இனத்தின் போர் குரலாய் 80 ஆண்டு கால பொதுவாழ்வுக்கு உரியவராய் திகழ்ந்த கலைஞர்; இன்று முதுமை காரணமாக தனது 95 ஆம் வயதில் மரணமடைந்தார் என்ற செய்தி இடியோசையாய் தமிழர்களின் செவிகளில் விழுந்திருக்கிறது.

எண்ணிக்கை பலம் குறைந்த, மிக மிக பின்தங்கிய சமூகத்திலிருந்து உருவாகி, தமிழக அரசியலை புரட்டிப் போட்ட அவரது ஆளுமை அனைவருக்கும் ஒர் அரசியல் அரிச்சுவடியாகும்.

இதழியல், இலக்கியம், கவிதை, கலை, பண்பாடு, அரசியல், எழுத்து, திரையுலகம், நிர்வாகவியல் என அவர் பல்துறை வித்தகராகவும்; அவற்றில் புதுமையை புகுத்திய முற்போக்கராகவும் 80 ஆண்டு காலம் வலம் வந்திருக்கிறார்.

அவரது எழுத்து தமிழர்களை எழுச்சி பெற செய்தது, அவரது பேச்சு அவர்களை சிந்திக்க செய்தது. அவரது திரைப்பட வசனங்கள் தமிழ் சமூகத்தை வீறு கொள்ள செய்தது. அரசியலை தாண்டியும் அவரது தமிழ் அனைவரையும் ஈர்த்தது.

அவரோடு அரசியலில் ஓடத் தொடங்கிய பலர் ஓட்டத்தை பாதியிலேயே நிறுத்திக் கொண்டனர். பலர் ஓட முடியாமல் ஓடி விட்டனர். பலர் ஓடிக் கொண்டே திணறினர். ஆனால் இவர் மட்டும் ஓய்வெடுக்காமல் ஓடிக் கொண்டே இருந்தார். அவரது உழைப்பை எதிராளிகளும் பாராட்டினர்.

அரசியல் சாணக்கியத்தனங்களை வெளிக் காட்டிய ராஜா தந்திரி என ஒரு பக்கம் புகழப்பட்டார். இன்னொரு புறம் தன் உதட்டுச் சுழிப்பால் அவர்களையும் அன்பால் கட்டிப் போட்டார்.

உடன் பிறப்பே… என்ற ஒற்றை சொல்லாடலில் தான் உயிருக்குயிராய் நேசித்த தொண்டர்களை கண்ணசைவில் உயிர்ப்போடு வைத்திருந்தார்.

மிகவும் பின்தங்கிய சமுகங்களின் விடுதலைகிதமாக அவர் திகழ்ந்தார்.

* முதன் முதலில் பிற்படுத்தப்பட்டோர், மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கான தனி துறையை உருவாக்கினார்.

* குடிசை வாழ் ஏழைகளின் மீது பாசம் கொண்டு குடிசை மாற்று வாரியம் அமைத்தார்.

* முஸ்லிம்களுக்கும், கிரித்தவர்களுக்கும், அருந்ததியர் மக்களுக்கும் தனி உள் இட ஒதுக்கீடு கொடுத்தார்.

* பெண்களுக்கு சொத்துரிமை சட்டத்தை அமல்படுத்தினார்.

* ஈழத் தமிழர்களுக்காக இரு முறை ஆட்சியை இழந்தார்.

*தமிழுக்கு செம்மொழி அங்கீகாரத்தை பெற்று கொடுத்தார்.

* கொங்கு வேளாளர் இனத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும், வன்னியர் சீர் மரபினரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும் சேர்த்தார்.

* தாழ்த்தப்பட்ட மக்கள் தலை நிமிர திட்டங்கள் பல தந்தார்.

இப்படி சமூக நீதியின் குரலாய் சமரசமின்றி உழைத்துக் கொண்டேயிருந்தார்.

அவர் தமிழக அரசியலை கடந்து தேசிய அரசியலையும்,சர்வதேச அரசியலையும் அன்றாடம் உற்று நோக்கி வந்தார்.

அதனால் தான் அவரால் சேரன் செங்குட்டுவனையும்,சேகுவேராவையும் பற்றி எழுத முடிந்தது.

குறளோவியம் முதல் தொல்காப்பிய பூங்கா வரை எழுதிய அவர்தான் மார்ஸிம் கார்க்கியுன் ,தாய் நாவலையும் தனது இலக்கிய தரத்தோடு தமிழில் தந்தார்.

சிறுபான்மை மக்களை’சவலைப் பிள்ளைகள்’ என்று கூறி அவர்கள் மீது பரிவு காட்டினார்.

நேரு தொடங்கி அவரது பேரன் ராகுல் காந்தி வரை அரசியல் செய்த ஒரே இந்திய பெருந்தலைவர் அவர் மட்டுமே. பிரதமர் மோடி வரை சுதந்திர இந்தியாவின் அனைத்து பிரதமர்களோடும் அரசியல் செய்தவரும் அவர் மட்டுமே.!

வி.பி.சிங்கை பிரதமராக்கிய போது, தானே பிரதமர் பதவியில் அமர்ந்தது போல பரவசமடைந்தார். பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசின் கல்வி, வேலை வாய்ப்புகளில் 27 % மண்டல கமிஷன் இட ஒதுக்கீட்டை அவர் மூலமாக நடை முறைப்படுத்தினார்.

முரசொலியில் அவர் கடிதங்கள், அன்றாட தமிழக அரசியலை உயிர்ப்போடு வைத்திருந்தது, அவரது கவிதைகள் இலக்கிய அறியாதவர்களையும் ரசிக்க வைத்தது.

தமிழக செய்தி ஊடகங்களில் அதிகமாக முதல் பக்க செய்தியிலும், முதன்மை செய்திகளில் இடம்பெற்ற அவர் தனது மரணத்தின் மூலமாக மீண்டும் தலைப்பு செய்தியாகி இருக்கிறார்.

இந்தியா வகுப்புவாதிகளின் கையில் சிக்கியிருக்கும் மோசமான ஒரு காலக்கட்டத்தில், அவர் ஒரு அரசியல் போர் கருவியாக இருக்க வேண்டிய சூழலில் அவர் மறைந்தது இந்திய அரசியலுக்கு ஒரு பேரிழப்பாகும்.

அவரோடு மேடையில் பேசிய நினைவுகள் வாட்டுகின்றன. அவரும் உறுப்பினராக இருந்த 15 வது சட்டப் பேரவையில் நானும் இடம்பெற்றது ஒரு வரலாற்று வாய்ப்பு என கருதுகிறேன்.

அவரது இழப்பால் வாடும் திமுக உறவுகள், கலைஞரின் குடும்பத்தினர், தமிழ் சமூகத்தினர் என அனைவரோடும் மனிதநேய ஜனநாயக கட்சி துயரத்தை பகிர்ந்து கொள்கிறது.

யாருக்கு யார் ஆறுதல் கூறுவது என்றே தெரியவில்லை ஆறுதல் கூற வலிமையும் இல்லை.

இவண்,
#மு_தமிமுன்_அன்சாரி_MLA
பொதுச்செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
07/08/2018.