தமிழ் உணர்வாளர்களை கைது செய்வதை கைவிட வேண்டும்! கம்பத்தில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பேட்டி!

தேனி.ஜூன்.24., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) தேனி மாவட்ட செயலாளர் ரியாஸ் அவர்களின் இல்ல திருமணத்தில் பங்கேற்பதற்காக வருகை தந்த மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் கம்பத்தில் பத்திரிக்கையாளர்ளை சந்தித்தார்கள், அப்போது கூறியதாவது.

இயக்குனர் கவுதமனை தமிழக காவல்துறை கைது செய்திருப்பது தேவையற்றது. தமிழ் உணர்வாளர்களை குறிவைத்து இது போன்ற கைதுகளை நடத்துவதை ஏற்க முடியாது.

மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் ஆய்வுகளை நடத்தி வரும் கவர்னருக்கு எதிராக, நாமக்கலில் திமுகவினர் கருப்பு கொடி ஆர்ப்பாட்டதை நடத்தியுள்ளனர். இது ஒரு ஜனநாயக செயல்பாடாகும். இதில் ஈடுபட்ட 192 திமுகவினர்களை கைது செய்து சிறையில் அடைத்திருப்பது தேவையற்றது. தமிழக அரசு அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம், காவிரி உரிமை போராட்டம், மீத்தேன்-ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டம் ஆகியவற்றில் ஈடுப்பட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.

சேலம்- சென்னை 8 வழி பசுமை சாலை திட்டத்தை நாங்கள் எதிர்க்க வில்லை. விமான நிலையங்கள், அகல சாலைகள், ரயில் இருப்பு பாதைகள் ஆகியவை மக்களின் வசதிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் அவசியமானவை. அதே சமயம், இந்த பசுமை வழி சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் மக்களின் உணர்வுகளை மத்திய, மாநில அரசுக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இழப்பை சந்திக்கும் விவசாயிகளுக்கு அவர்கள் கேட்கும் முழுமையான நஷ்டஈட்டை வழங்கிவிட்டு இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

தேனி மாவட்டத்தில் #நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த கூடாது என்று மஜக சார்பில் தொடர்ந்து வழியுறுத்தி வருகின்றோம். காரணம் மேற்கு தொடர்சி மலை என்பது இயற்கை தந்த அருட் கொடையாகும். இத்திட்டத்திற்காக இங்குள்ள காடுகளை அழிப்பதையும், முல்லை பெரியாறு தண்ணீரை உறிஞ்சுவதையும் அனுமதிக்க முடியாது.

இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மதுரை- லோயர் கேம்ப் வரையிலான அகல ரயில் பாதை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.

பிறகு, உத்தமபாளையத்தில் மஜக நகர அலுவலகத்தை திறந்து வைத்து, இரண்டு இடங்களில் கட்சி கொடியையும் ஏற்றி வைத்தார்.

இந்நிகழ்வில் மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக், மாநில கொள்கை விளக்க அணி துணை செயலாளர் சாந்து முகம்மது, மாநில செயற்குழு உறுப்பினர் கம்பம் கரிம், மாவட்ட செயலாளர் ரியாஸ். மாவட்ட பொருளாளர் ஷேக், துணை செயலாளர் கம்பம் கலீல், நகர செயலாளர் அஜ்மீர், உத்தமபாளையம் நகர செயலாளர் பீர் மெய்தீன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி.
#MJK_IT_WING
#மஜக_தேனி_மாவட்டம்.
24.06.18