(மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சமூக இணையதள பதிவு)
மஜகவின் சார்பில் நானும், கொங்கு இளைஞர் பேரவை சார்பில் அண்ணன் தனியரசு MLA அவர்களும் குமரி மாவட்டத்தில் புயலால் பாதித்த பகுதிகளையும், காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தினரையும் பார்க்க சென்றிருந்தோம். அங்கே கருணாஸ் அவர்கள் வருவதாக கூறியிருந்தார், ஆனால் கடைசி நேரத்தில் வர இயலாமல் போய்விட்டது.
எங்களோடு வருகை தந்த மஜக சொந்தங்களோடு கடலோர பகுதிகளுக்கு சென்றப் போது, அங்கு நிலவிய கொந்தளிப்புகளை நேரில் கண்டோம்.
எங்கும் துக்கமயமாக இருந்தது, அழுகுரல் கேட்டுக் கொண்டே இருந்தது. வெவ்வேறு குரல்கள் ஒரே மொழியில் கதறின. அவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்தோம்.
தமிழக முதல்வர் உடனடியாக இங்கு வந்து இம்மக்களை நேரில் சந்தித்து பேச வேண்டும்; கேரளா அரசு கொடுத்தது போல, இங்கும் 20 லட்சம் ரூபாயை நிவாரண உதவியாக கொடுக்க வேண்டும்; இறந்த மீனவர்களின் வீட்டுக்கு ஒரு அரசு வேலை வழங்க வேண்டும்; கடலுக்கு போகாத நாட்களை கணக்கிட்டு அவர்களுக்கு இழப்பீடுகளை வழங்க வேண்டும், என கோரிக்கைகளை அரசுக்கு வைத்துவிட்டு, உளவுத்துறை அதிகாரிகளிடமும் இதை மேலிடத்தில் கூறுங்கள் என்று கேட்டுக் கொண்டோம்.
எங்கள் கோரிக்கைகளை ஏற்கும் விதமாகவும், மீனவர்களின் உணர்வுகளை மதிக்கும் விதத்திலும் முதல்வர் குமரிக்கு வருகை தந்து, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது ஆறுதல் தருகிறது. முதல்வருக்கு நன்றி கூறுகிறோம்.
ஆனால், முதல்வர் போராட்டக் களத்திற்கு சென்று, பொது மக்களை சந்தித்து ஆறுதல் கூறியிருந்தால், அது அவருக்கு மேலும் சிறப்பு சேர்த்திருக்கும்.
அவர் மக்கள் கோபத்துக்கு அஞ்சி தவிர்த்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. பா.ஜ.கவிற்கும், மீனவர்களுக்கும் அங்கு பகிரங்கமாக பனிபோர் நடந்து வரும் நிலையில் எதற்கு வம்பு ? என இப்படி நடந்துக் கொண்டாரா ? என்ற கேள்வியும் எழுகிறது.
அங்கு சென்ற முதல்வர் அவர்கள், மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்பினர் மீதும், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மீதும் போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெறுவதாக அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. அது பற்றி அவர் வாய் திறாக்காதது வருத்தம் அளிக்கிறது.
கிருஸ்துமசுக்கு முன்னதாக டிசம்பர் 22 தேதிக்குள், காணாமல் போன 700 மீனவர்களும் திரும்ப வருவார்கள் என்ற நம்பிக்கை நிறைவேற வேண்டும். இல்லையேல் மீனவ மக்களின் கேள்விகளுக்கும், குமுறல்களுக்கும் யாராலும் பதில் அளிக்க முடியாது. நல்லதே நடக்க பிராத்திப்போம்.
இவண்,
M.தமிமுன் அன்சாரி MLA
14/12/2017.