அரவிந்த் கெஜ்ரிவால் அரசாங்கத்திற்கு இல்லாத நெருக்கடியா எடப்பாடி அரசு சந்தித்துவிட்டது?- மாணவர் இந்தியா கேள்வி…

image

சென்னை.அக்.12., தோழர் வளர்மதியை பெரியார் பல்கலைக்கழகம் தேர்வெழுத அனுமதி மறுத்ததை கண்டித்து இன்று சென்னை நிருபர்கள் சங்கத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைப்பெற்றது.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய வளர்மதி தொடர்ச்சியாக பல்கலைக்கழகம் தன் மீது அடக்குமுறைகளை ஏவுவதாகவும், மற்ற மாணவர்களை அச்சுறுத்தும் விதமாக தன்னை தேர்வெழுத அனுமதி மறுப்பதாகவும், தன்னை தேர்வெழுத பல்கலைக்கழகம் அனுமதிக்க வேண்டும் என்றும் பேசினார்.

தொடர்ந்து பேசிய மாணவர் இந்தியா மாநில செயலாளர் முஹம்மது அஸாருதீன் மாணவர்களை போராட்ட களங்களுக்கு வரவிடாமல் தடுக்கவே இதுபோன்ற அடக்குமுறைகளை அரசாங்கமும், பல்கலைக்கழகமும் ஈடுபட்டு வருகிறது.

இதுவரை பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க தேர்தல் நடக்கவில்லை என்றும் தமிழகம் முழுவதும் அனைத்து பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் மாணவர் சங்க தேர்தலை நடத்த வேண்டுமென்று கூறினார்.

டெல்லியிலும், கேரளாவிலும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களில் மாணவர் சங்க தேர்தல் நடக்கும்போது தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் ஏன் மாணவர் சங்க தேர்தல் நடக்கவில்லை என்றும், அரவிந்த் கெஜ்ரிவால் அரசாங்கம்  சந்திக்காத நெருக்கடியையா எடப்பாடி அரசு சந்தித்துவிட்டது என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும் ஏற்கெனவே இடைநீக்கம் செய்யப்பட்ட ஒருவர் தொடர்ந்த வழக்கில், உயர் நீதிமன்றம் “இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவரின் இடைநீக்கம் செய்யப்பட்ட காலத்தை கணக்கிலெடுக்காமல் அதற்குப் பிறகான காலத்தில் அவருடைய வருகை எண்ணிக்கையைவைத்துத் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும்” என்று தீர்ப்பளித்துள்ளதைக் குறிப்பிட்டு, வளர்மதி ஒரேயொரு நாள்தான் விடுப்பு எடுத்திருக்கிறார் என்பதால், அவர் தேர்வெழுதத் தகுதி உடையவர்தான் என்றும் கூறினார்.

இச்சந்திப்பில் மாணவர் இந்தியா மாநில பொருளாளர் ஜாவித் ஜாஃபர் மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துக் கொண்டனர்.

தகவல்;
ஊடக பிரிவு
மாணவர் இந்தியா
12.10.17