மாணவி அனிதா தற்கொலை! மஜகவின் இரங்கல் அறிக்கை.!!

image

(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை)

நீட் தேர்வில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், அன்புத் தங்கை அனிதா தற்கொலை செய்துக் கொண்டது பேரதிர்ச்சியை தருகிறது.

அனிதா அவர்கள் தன் சக மாணவ, மாணவிகளுடன் சட்டமன்ற விடுதிக்கு வந்து என்னையும், சகோதரர் தனியரசு MLA , கருணாஸ் MLA அவர்களையும் சந்தித்து பேசினார். நாங்கள் இது குறித்து தமிழக முதல்வரிடமும் , சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடமும் வாதிட்டோம்.

பள்ளிக் கல்விக்கான பொது மேடை அமைப்பின் தலைவர் தோழர் . பிரின்ஸ் கஜேந்திரன் அவர்களுடன் டெல்லி சென்று உச்சநீதிமன்றம் வரை அனிதா போராடினார்.

சமூக நீதிக்கு எதிராக செயல்படும் மத்திய அரசின் கொள்கைகளின் காரணமாக நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மாணவ சமுதாயம் ஏமாற்றப்பட்டு விட்டது.

அந்த விரக்தி காரணமாக இன்று தங்கை அனிதா தற்கொலை செய்துக் கொண்டிருக்கிறார்.

அந்த குடிசை வீட்டு தங்கையின் கனவும் பொசுங்கிவிட்டது. அவரது வாழ்வு கடும் துயரில் முடிந்திருக்கிறது.

அதிகார திமிரில் இருப்பவர்கள் இந்த அநீதிக்கு பதில் சொல்லியாக வேண்டும். இதற்கு முழுக்க , முழுக்க மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். அதே சமயம் தமிழக அரசும் தன் பொறுப்பை தட்டிக் கழித்துவிடக்கூடாது.

அந்த தங்கை கண்ணீரோடு என்னிடம் முறையிட்டது என் இதயத்தை இப்போது நொறுக்குகிறது.

இதற்கு தீர்வு காணும் விதத்தில் , தமிழக சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்கள் நிறைவேற்றிய இரண்டு மசோதாக்களை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி, தமிழகத்திற்கு ‘நீட்’ தேர்வில் விதிவிலக்கு பெற தமிழக அரசு , மத்திய அரசை நிர்பந்திக்க வேண்டும்.

அனிதாவை இழந்து தவிக்கும் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லை. தமிழகமே அவர்களுக்காக உருகி நிற்கிறது.

அவரின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகையும் , குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கி அவர்களது துயரத்தை தமிழக அரசு குறைக்க முயற்சி எடுக்க வேண்டும்.

இவ்விவகாரத்தில் அனிதாவின் தற்கொலை முயற்சி முதலும் , இறுதியுமானதாக இருக்க வேண்டும். நீட் தேர்வில் பாதிக்கப்பட்ட மாணவ , மாணவிகள் நம்பிக்கை இழக்காமல் போராட உறுதியேற்க வேண்டும் என்றும் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

இவண்

M.தமிமுன் அன்சாரி MLA
பொதுச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
01.09.2017