(மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரிMLA அவர்களின் சமூக இணையதள பதிவு)
பா.ஜ.க தலைவர் அமித்ஷா அவர்கள் , பிரதமர் மோடியின் மனசாட்சி ஆவார் . மோடியின் எண்ண ஓட்டங்கள் பிரதிபலிப்பவர். இப்போதைய அவரது காந்தி குறித்த கருத்து நாட்டையே உலுக்கியிருக்கிறது .
நேதாஜி, அம்பேத்கார் , பகத்சிங் ஆகியோரின் விவகாரங்களில் காந்தியின் மீது நமக்கும் பல அரசியல் விமர்சனங்கள் உண்டு . ஆயினும் அவர் அனைவருக்குமான ஒரு தலைவர் என்பதிலும் அகிம்சை எனும் புதிய கொள்கை மூலம் இந்தியாவுக்கான புதிய அடையாளத்தை உருவாக்கியவர் என்பதிலும் ஐயமில்லை.
இந்திய விடுதலைக்கு அவரது தலைமை தான் இறுதி வடிவத்தை பெற்றுக்கொடுத்தது.
அவர் நல்லிணக்கமிக்க ஒரு சமூக அமைப்பை உருவாக்க வேண்டும் என்பதில் அக்கறை காட்டி அதில் உறுதியாக செயல்பட்டார். அதனாலேயே RSS அமைப்பின் ஆதரவாளரான கோட்சே அவரை கொலை செய்தான்.
காந்தியாரின் மீதான காழ்ப்புணர்ச்சி, கோட்சேயின் கொள்கை வழி பேரப்பிள்ளைகளிடம் இது மிக அதிகமாக இருக்கிறது.
அந்த காவிக்கோபத்தில்தான் மார்ஸிய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீத்தாராம் எச்சூரியை தாக்கினார்கள் .
அதன் இன்னொரு வடிவமாக பா ஜ க தலைவர் அமித்ஷா அவர்கள் காந்தியை ஒரு வியாபாரி என்று விமர்சித்திருக்கிறார்கள் . நல்லவேலையாக அவரை கூலிப்படை தலைவர் என்று சொல்லாததற்க்காக மகிழ்ச்சியடைய வேண்டும் .
காந்தி பிறந்த பனியா சமூகம் , வணிகம் செய்வதில் அனுபவம் பெற்ற ஒரு சமுதாயம் .அதற்காக காந்தி ஒரு அரசியல் வியாபாரி என்பதுப் போல அமித்ஷா அவர்கள் கருத்து கூறியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது .
இதன் மூலம் காந்தியாரின் கல்லறையை காயப்படுத்தியிருக்கிறார்கள். காவி அரசியலுக்கு எதிராக செயல்பட்ட ஒரே காரணத்தினால் , அவர் மீண்டும் , மீண்டும் படுகொலை செய்யப்படுகிறார் .
இவண் ;
M.தமிமுன் அன்சாரி MLA
12.06.2017