கத்தாரை தனிமைப்படுத்துவது நல்லதல்ல .!

image

(மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் இணையதள பதிவு)

வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தாருடன் அரசியல் உறவுகளை சவுதி, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் ஆகிய நான்கு நாடுகள் திடீரென துண்டித்துக் கொண்டுள்ளது பன்னாட்டு அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அந்த நான்கு நாடுகளும் கூறும் காரணங்கள் ஏற்புடையதாக இல்லை. 

ஈரானின் புதிய அதிபர் ஹஸன் ரவுஹானியை கத்தார் இளவரசர் தமிம் பின் ஹமத் அல்தானி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததை ஒரு குற்றமாக அந்நாடுகள் கூறியுள்ளன.

இதற்கு பின்னால் இருக்கும் அரசியல் தந்திரங்களும், திட்டங்களும் கூர்ந்து கவனிக்கத்தக்கவை. இந்த நான்கு நாடுகளும் அமெரிக்காவுடன் மிகவும் நெருக்கமாக இருப்பவை. கத்தார் அமெரிக்காவுடன் ஒரு இடைவெளியை கடைப்பிடிக்கிறது.

இது தவிர எகிப்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட மொர்ஸி அவர்களின் ஆட்சி கவிழ்ப்பை அந்த நான்கு நாடுகளும் ஆதரித்தன. அமெரிக்காவும் ஆதரித்தது. ஆனால் கத்தார் எதிர்த்ததையும் இங்கே கவனிக்க வேண்டும் .

கத்தார், பாலஸ்தீன போராட்டத்திற்கு துருக்கியை போலவே குறிப்பாக ஹமாஸ் விடுதலை இயக்கத்திற்கு ஆதரவு தரும் நாடு .

மேலும் CNN, BBC  ஊடகங்களுக்கு மாற்றாக அல்ஜெஸிரா எனும் வலிமையான ஊடகத்தை கத்தார் வழிநடத்தி வருவது அமெரிக்காவின் கண்களை உறுத்திவந்தது.  இந்நிலையில் ஈரானுடன் ஒரு சுமூக உறவை, கத்தார் மேற்கொண்டது அமெரிக்காவிற்கு பிடிக்கவில்லை.
வளைகுடாவில் நிரந்தர அமைதி வேண்டுமெனில் , அரபு மொழி பேசும் GCC நாடுகளும் , பெர்ஸிய மொழி பேசும் மக்களைக் கொண்ட ஈரானும் நல்லுறவை கடைப்பிடிக்க வேண்டும் என்பதே ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகளின் விருப்பமாகவும் இருக்கிறது.

இந்நிலையில், கத்தாருடன் சவுதி உள்ளிட்ட நான்கு GCC நாடுகளும் ராஜ்ய உறவுகளை துண்டித்ததோடு மட்டுமின்றி வான் மற்றும் கடல் வழிப் போக்குவரத்தையும் நிறுத்தியது வளைகுடா வாழ் மக்களிடமும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.

குறிப்பாக புனித ரமலான் மாதத்தில் ஏற்படுத்திய தடையால், கத்தாரில் உணவுப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இது மனிதாபிமானமற்ற அணுகுமுறை என்பதில் ஐயமில்லை .

இஸ்ரேலை எதிர்ப்பதிலும் , அமெரிக்காவுடன் சரணாகதி ஆவதை தவிர்ப்பதிலும் கத்தார் கடைப்பிடித்து வந்த அரசியல் நிலைப்பாடு அதற்கு சிக்கலை ஏற்படுத்தியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

இன்று கத்தார் நெருக்கடியை சந்தித்தாலும், சவுதி, எகிப்து, அமீரகம், பஹ்ரைன் நாடுகளை விட பொருளாதாரத்தில் வலுவாக உள்ளது. தற்போதைய பங்கு சந்தை வீழ்ச்சியை சரிசெய்யும் பொருளாதார பின்னணி அதற்கு இருக்கிறது.

இன்று வளைகுடா நாடுகளில் உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட பணக்கார நாடு என்ற அந்தஸ்தை கத்தார் பெற்றிருக்கிறது. மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தையே பின்னுக்கு தள்ளி முன்னுக்கு வந்திருக்கிறது. உலகின் கவனம் கத்தாரின் பக்கம் திரும்பியதை மேற்கத்திய நாடுகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

உலகிலேயே 3வது எண்ணெய் வளம்மிக்க நாடு கத்தார்.  உயர்தர எரிவாயு கத்தாரில்தான் கிடைக்கிறது. பெட்ரோல், டீசல் உபயோகத்திலிருந்து எரிவாயு பயன்பாட்டுக்கு உலகம் மாறி வரும் நிலையில், அமெரிக்காவின் வழக்கமான சூழ்ச்சி கத்தாரை இப்போது குறி வைத்திருக்கிறது என சர்வதேச அறிவுஜீவிகள் கூறுகிறார்கள் .

திடீரென்று கத்தார் மீது   ‘தீவிரவாத பழி’ திட்டமிட்டு சுமத்தப்படுவதாக அந்நாட்டு மக்கள் குமுறுகின்றனர்.

அதாவது முன்பு ரசாயன ஆயுதங்கள் இருப்பதாக ஈராக் மீது அமெரிக்கா குற்றம் சாட்டி அரபு நாடுகளை அணிதிரட்டியது. சதாமைக் கொன்றது. பிறகு ஈராக்கில் ரசாயன ஆயுதங்கள் ஏதுமில்லை என்றது. இப்போது கத்தார் விசயத்திலும் அதுதான் நடக்கிறது.

அமெரிக்கா அதிபர் ட்ரெம்ப் சவுதி வந்து சென்ற பிறகு மேற்கு ஆசியாவில் ஏற்பட்டிருக்கும் இக்குழப்பங்களுக்கு பின்னணியில் அமெரிக்காவின் CIA, இஸ்ரேலிய மொசாத் உளவு அமைப்புகளின் கூட்டுசதி இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுப்பதிற்கில்லை.

கத்தாருக்கு எதிராக நான்கு அரபு நாடுகளையும் அமெரிக்கா தூண்டி விடுவதாகவும், அரபு – GCC ஒற்றுமையை சீர்குலைக்க முயல்வதாகவும் அரபுலக ராஜதந்தீரிகள் சந்தேகிக்கிறார்கள்.

இந்நிலையில் இந்தியாவை சேர்ந்த 1 லட்சம் தமிழர்கள் உள்ளிட்ட 6 லட்சத்திற்குமேற்பட்ட மக்கள் கத்தாரில் தொழில் மற்றும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களால் இந்தியாவுக்கு அந்நிய செலாவணி வருவாய் கிடைத்து வருகிறது . அதற்கும் ஆபத்து ஏற்படும் போல் தெரிகிறது.

இந்த அரசியல்  நெருக்கடிகளால், சர்வதேச எண்ணெய் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை சந்தித்திருக்கிறது. இதை வளரும் நாடுகள் விரும்பவில்லை.

இச்சூழலில் சவுதி உள்ளிட்ட நான்கு அரபு நாடுகளுக்கும் , கத்தாருக்கும் இடையில் சுமூக உறவை ஏற்படுத்த இரு தரப்புக்கும் பொதுவாக இருக்கும் சீனா, துருக்கி, குவைத், மலேசியா போன்ற நாடுகள் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

அரபு நாடுகள் ஒன்றுசேர்ந்து ISIS பயங்கரவாதிகளுக்கு எதிராக போராட வேண்டிய இத்தருணத்தில், தங்களுக்குள் மோதிக்கொள்வது புத்திசாலித்தனம் ஆகாது.

இவ்விசயத்தில் சவுதி மன்னர் சல்மான் அவர்கள் பெருந்தன்மையோடும், நிதானத்தோடும் செயல்படவேண்டும். OIC நாடுகளின் கூட்டம் உடனடியாக கூட்டப்பட்டு சுமூக தீர்வு ஏற்பட வேண்டும்.

இவண்

M.தமிமுன் அன்சாரி MLA
07.06.2017