மலாக்கா இஃப்தார் நிகழ்வு..

மலேஷியாவின் புராதான நகரமான மலாக்காவில் இன்று மலாக்கா இந்திய முஸ்லிம் சங்க கட்டிடத்தில்- மலாக்கா முஸ்லீம் லீக்கின் சார்பில்- இஃப்தார் நோன்பு துறப்பு ஒன்றுகூடல் நிகழ்வு நடைபெற்றது.

முக்கிய சமூக ஆர்வலர்கள் பங்கேற்ற இந்நிகழ்வில், தாயகத்திலிருந்து வருகை தந்திருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்றார்.

அவருடன் துணைப்பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷாவும் வருகை தந்திருந்தார்.

நிகழ்வுக்கு பொறியாளர் ஜபருல்லாஹ் தலைமை வகித்தார். சகோ. ஷபியுல்லாஹ், மவ்லவி கமாலுதீன் ஹஜ்ரத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நோன்பு துறப்பு மற்றும் மஹ்ரிப தொழுகைக்குப் பிறகு நடைபெற்ற வரவேற்பை ஏற்றுக்கொண்டு பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேசியதாவது…

தென்கிழக்காசியாவின் தொன்மையான நகராகவும், மலேசியாவின் பழைய தலைநகராகவும் மலாக்கா திகழ்ந்தது.

வணிக கப்பல்கள் சந்திக்கும் நீரிணையாக இப்பகுதி இருந்தது.

அதனால் அரபு வணிகர்கள் சந்திப்பு என பொருள்படும் முலாக்கத் என்ற சொல்லை இப்பகுதிக்கு பயன்படுத்தினர். அது திரிபு பெற்று மலாக்கா என பெயர் ஆனது.

ஆங்கிலேயர்கள் Straight Settilement மூலம் பினாங்கு, மலாக்கா, சிங்கப்பூர் போன்ற துறைமுக நகரங்களை ஆண்டனர்.

மலாக்கா காலம் தோறும் வளர்ச்சிப் பெற்று வந்தது.

இங்கு 18-ஆம் நூற்றாண்டிலேயே தமிழ்நாட்டு முஸ்லிம்களும், செட்டியார் சமூக மக்களும் வருகை தந்து வாணிபம் செய்தனர்.

இங்கே செட்டியார் சமூகத்தில் கணிசமானோர் பல இன மக்களுடன் கலந்தனர். அதனால் ‘மலாக்கா செட்டி’ என்ற ஒரு சமூகமே உருவானது.

கணிசமான தமிழ்நாட்டு முஸ்லிம்களும் மலாய் இன மக்களுடன் கலந்து விட்டனர்.

இங்கே தமிழ்நாட்டிலிருந்து வந்த முஸ்லிம்கள் கட்டிய இரண்டு மசூதிகள் உள்ளது.

குடும்பத்தை இங்கு கொண்டு வந்து குடியமர்த்தாததால், ஆயிரத்திற்கும் கீழே தமிழ்நாட்டு முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது.

தற்போது இங்கு மதரஸா மூலம் மார்க்க கல்விவியும், தமிழ்மொழி கல்வியும் கற்றுத்தரப்படுவது பாராட்டத்தக்கது.

நமது பண்பாடுகள் அழியாமல் அடுத்த தலைமுறையை வளர்த்தெடுக்க வேண்டும்.

பிள்ளைகளை உயர்கல்வி படிக்க வைத்து, அரசு வேலைகளில் அமர்த்துங்கள். போட்டிமிக்க உலகில் அதற்கு ஈடுகொடுக்க தயாராகுங்கள்.

அடிக்கடி சமூக ஒன்றுகூடல்களை நடத்தி உங்களது உறவுகளை பகிர்ந்துக்கொண்டு சமூகத்தின் பொதுமுள்னேற்றத்திற்கும் பாடுபடுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதன்பிறகு கலந்துரையாடலும் நடைபெற்றது.

பிறகு 200 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டு மக்கள் கட்டிய மஸ்ஜித் கில்லிங், மஸ்ஜித் கம்போங் உலு ஆகிய பள்ளிகளுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் அழைத்து சென்றனர்.

அவை தமிழக மாதிரி மினாராக்கள், நகரா (அறிவிப்பு மேளம்), மரங்கள் நிறைந்த வேலைப்பாடுகளுடன் இருக்கிறது.

அவை unesco-வால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிறகு சீனர்கள் சீன கட்டிட கலையுடன் கட்டியுள்ள பள்ளிவாசலுக்கும் அழைத்து சென்றனர்.

தமிழகத்திலிருந்து மலாக்காவுக்கு நிகழ்ச்சிக்காக வருகை தந்த முதல் அரசியல் பிரமுகர் நீங்கள்தான் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

தாயகத்தில் மஜக ஆற்றி வரும் பணிகளுக்கு அவர்கள் வாழ்த்துக்களையும் கூறினர்.