ஜொகூர் இஃப்தார் நிகழ்ச்சி

மலேசியாவின் ஜொகூரில் உள்ள மஸ்ஜித் இந்தியாவில் நடைபெற்ற இஃப்தார் ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்றார்.

அவருடன் துணைப் பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா அவர்களும் வருகை தந்தார்.

இஃப்தாருக்கு பிந்தைய கலந்துரையாடலில் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பேசியதாவது…

மலேசியாவில் வாழும் நீங்கள் இந்த நாடு சந்தித்து வரும் மாற்றங்களுக்கு ஏற்ப உங்களையும் மாற்றிக்கொள்ள வேண்டும்.

உணவகங்கள், மளிகை கடைகள், பலசரக்குக் கடைகள் என்ற வட்டங்களை தாண்டி புதிய தொழில்களில் ஆர்வம் காட்டவேண்டும்.

பிள்ளைகளை உயர்கல்விக்கு அனுப்பும்போது வணிகம், கணினி, பொருளாதார துறைகள் மட்டுமின்றி சட்டம், ஊடகம் என பிற துறைகளிலும் பயில அவர்களை ஊக்குவியுங்கள்.

நீங்கள் இந்த நாட்டுக்கு குடிமகன்கள். இங்கு உங்கள் வளங்களை உறுதிப்படுத்துங்கள். இங்கேயே எதிர்காலத்தை பற்றி திட்டமிடுங்கள்.

மார்க்கம் காட்டும் கலாச்சாரங்களை, வழிகாட்டல்களை பின்பற்றி புதிய உலகில் வாழ கற்றுக்கொள்ளுங்கள்.

தாயக உறவுகளை பேணுங்கள்.அது நல்லது. பண்பாடுகளை பரிமாறுவதும் நல்லது.

ஆனால் ஊரில் தேவைக்கு அதிகமாக சொத்துக்களை வாங்கிட ஆசைப்படாதீர்கள். இது குறித்து நிரம்ப யோசியுங்கள்.

அது உங்களுக்கு தேவையில்லை என்பதே என் ஆலோசனையாகும்.

காரணம் நீங்கள் அதை பராமரிக்க முடியாது . உங்கள் வாரிசுகள் அதை ஆளப்போகும் வாய்ப்பும் குறைவு.

ஏனெனில்அவர்கள் அதிகமாக ஊருக்கு உங்களைப் போல வரப்போவதும் இல்லை.

அந்த சொத்துகள் கவனிக்கப்படாத சூழல் வரும்போது, எதிர்காலத்தில் அது சிலரால் ஆக்ரமிக்கப்படலாம். அதை மீட்பதற்கு நீங்கள் சிரமப்படலாம்.

சிங்கப்பூர், மலேசியாவை சேர்ந்த பலர் இதை அனுபவித்துக் கொண்டுள்ளனர்.

எனவேதான் எனது ஆலோசனையாக இதை கூறுகிறேன்.

அதே சமயம் ஊரில் தொழில் தொடங்கலாம். அதன் மூலம் வேலைவாய்ப்பை கொடுங்கலாம்.

உங்கள் உழைப்பும், பொருளாதாரமும் முறையான வழியில் பாதுகாத்திடும் வகையில் சிந்தியுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜொகூர் மனிதநேய கலாச்சாரப் பேரவை சேர்ந்த அட்டாக் சுல்தான், அமீனுதீன், பீக்கர் அலி, சாகுல், ஆழியூர் யூசுப் மற்றும் பலரும் நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.

பொந்தியன் உள்ளிட்ட ஜொகூரின் பல பகுதிகளை சேர்ந்தவர்களும், சிங்கப்பூரை சேர்ந்த மனிதநேய சொந்தங்களும் நிகழ்வுக்கு வருகை தந்து கலந்துரையாடினர்.