செங்கம் ஜப்பார் மரணம் !

(மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA இரங்கல்)

நீண்ட காலமாக பொதுவாழ்வில் உற்சாகத்துடன் பயணித்த அண்ணன் செங்கம்.ஜப்பார் அவர்கள் நேற்று இறந்துவிட்டார் என்ற செய்தி ஆழ்ந்த வருத்தத்தை தருகிறது .

காயிதே மில்லத் அவர்களின் கரம்பற்றி அரசியலை தொடங்கிய அவர் , 1958-ல் தன்னை இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கில் இணைத்துக் கொண்டு பொதுவாழ்வில் பயணித்தார் .

அக்காலத்தில் அவர் உருதுவிலும் , தமிழிலும் ஆற்றும் சொற்பொழிவுகள் அபாரமான தாக்கத்தை ஏற்படுத்தின . அவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் இளைஞரணி தலைவராக இருந்தபோது , அவரது பேச்சாற்றலை கண்டு ஆயிரக்கணக்கானோர் அக்கட்சியில் இணைந்தனர். பலர் அவரை வழிகாட்டியாக கருதினர் .

ஒருகாலத்தில் ஜனாப் A.K.A.அப்துல் சமது சாஹிப் , ஜனாப் அப்துல் லத்தீப் சாஹிப் ஆகியோரின் வரிசையில் அவர் இடம் பெற்றிருந்தார் .

கவிதை, நகைச்சுவை, எளிமையான உதாரணங்கள் ஆகியவற்றால் மேடைகளை அலங்கரித்தார் . அவரது பேச்சாற்றல் இந்திரா காந்தி  போன்ற தேசிய தலைவர்களையும் ஈர்க்கும் வண்ணம் இருந்தது . அவரது எழுச்சி உரைகள் அவரை ‘சிங்கம்’ ஜப்பாராக அடையாளம் காட்டியது .

உருது மொழி ஆற்றலால் அவர் பீஹார் உள்ளிட்ட வட மாநில அரசியலிலும் ஈடுபட்டார் .

தமிழகத்தில் முற்போக்கு முஸ்லிம் லீக் என்ற பெயரில் தனித்து கட்சி தொடங்கி நடத்தினார் . திரு MGR அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது , பால்வளத்துறை தலைவராக நியமிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டார் .

திமுக தலைவர் திரு.மு.கருணாநிதி அவர்களோடும் மிக நெருக்கமாக பழகினார் .

நாங்கள் மனிதநேய ஜனநாயக கட்சியை தொடங்கியபோது , தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் .

சில மாதங்களுக்கு முன்பு நானும், அவரும் சென்னை புதுக்கல்லூரியில் ஜும்மா தொழுகைக்குப்பிறகு சந்தித்துக் கொண்டோம். நீண்ட நேரம் உரையாடினோம். எனது சட்டசபை உரைகளை வெகுவாக பாராட்டினார். மஜகவின் பணிகளை வாழ்த்தினார். இன்று மஜக தனது அருமை நண்பரை இழந்திருக்கிறது .

தனது 76 வது வயதில் நேற்று இரவு இறைவனிடம் சேர்ந்திருக்கிறார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் , ஆதரவாளர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் .

அவர் அறிந்தும் , அறியாமலும் பாவங்கள் செய்திருந்தால் அவற்றை மன்னித்து , உயரிய சுவர்க்கத்தில் அவர் சேர்ந்திட இறைவனிடம் பிரார்த்திக்கிறோம் .

இவண் ;
M.தமிமுன் அன்சாரி MA MLA
பொதுச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
01.06.2017