தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம்: இந்தியாவின் பாரம்பரியத்திற்கு ஏற்பட்ட வரலாற்று அவமானம் மு தமிமுன் அன்சாரி கடும் கண்டனம்

இன்று நாடாளுமன்றத்தில் தேசிய குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருக்கிறது.

பாகிஸ்தான்,பங்களாதேஷ், ஆப்கனிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வந்த அகதிகள் 5 ஆண்டுகள் தங்கியிருந்தால்,உரிய மூல ஆவணங்கள் இல்லாவிடினும்,அவர்கள் இந்திய குடியுரிமை பெறலாம் என புதிய சட்டம் கூறுகிறது.

இதில் இந்து, பெளத்தர், சீக்கியர், ஜைன, கிரித்தவர் உள்ளிட்டோர் அடங்குவர் என கூறியிருப்பதில் மாற்று கருத்துகள் இல்லை. ஆனால் இதில் முஸ்லிம்களையும், இலங்கை தமிழர்களையும் சேர்க்காதது ஏன்? என்ற கேள்வி வலிமையாக எழுகிறது.

பங்களாதேஷ் சுதந்திர நாடாக உருவானபோது அங்கு சென்ற வங்கம், அஸ்ஸாமி, பீகாரி, ஒரிய மொழி பேசும் முஸ்லிம்கள் மீண்டும் தங்கள் தாய் நாடு திரும்பினர். இப்போது அவர்களின் நிலை என்ன? அவர்கள் இந்திய முஸ்லிம்களாக பிறந்தது தான் குற்றமா? என்ற கேள்விகள் முக்கியமானவை.

அது போல் இலங்கை தமிழர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக மண்ணில் அகதிகளாக வாழ்கின்றனர். அவர்கள் இந்திய குடியுரிமை கேட்டு வரும் போது, அவர்களும் புறக்கணிக்கப்பட்டிருப்பது யாரை திருப்திப்படுத்த? என கேட்கின்றோம்.

அமெரிக்கா போன்ற நாடுகளை பகைக்க கூடாது என்பதற்காக கிரித்தவர்களை அப்பட்டியலில் சேர்த்திருக்கிறார்கள் என தெரிகிறது.

மதத்தாலும், மொழியாலும் காழ்ப்புணர்ச்சியை காட்டும் ஒரு சட்டத்தை ஆதரித்த அனைவரும் இந்தியாவின் பாரம்பரிய கண்ணியத்திற்கு இழுக்கையும், வரலாற்று அவமானத்தையும் தேடிக் கொடுத்துள்ளனர்.

கெளதம புத்தர், திருவள்ளுவர், மகாவீரர், கனியன் பூங்குன்றனார், விவேகானந்தர் , காந்தி, அப்துல் கலாம், போன்ற உலகம் போற்றும் ஆளுமைகளை தந்த தேசத்தில் தான் நாம் வாழ்கிறோமா? என்ற ஐயம் ஜனநாயக சக்திகளுக்கு ஏற்பட்டிருக்கிறது.

ஏற்கனவே அஸ்ஸாமில் இச்சட்டத்தின் பழைய வடிவம் செயல்படுத்தப் பட்டப் போது, கணவனுக்கு குடியுரிமை இல்லை ; ஆனால் மனைவிக்கு உண்டு என்றும், அண்ணனுக்கு குடியுரிமை உண்டு; தங்கைக்கு இல்லை என்றும் கூறப்பட்டதும், இதனால் ராணுவ அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் கூட அந்நியப்படுத்தப்பட்டதும் நாடு தழுவிய விவாதங்களையும், நெருக்கடிகளையும் உருவாக்கியது.

இப்போது புதிய சட்டம் நாடு தழுவிய அளவில் குழப்பங்களை ஏற்படுத்தப் போகிறது.

அதனால் தான் வடகிழக்கு மாநிலங்களில் இப்போதே போராட்ட அறிவிப்புகள் அதிர்கின்றன.

நாட்டின் பொருளாதார சீர்குலைவு பற்றி மக்களை சிந்திக்க விடாமல் தடுக்க, இவர்கள் செய்யும் வகுப்புவாத அநீதிகளாக இதை பார்க்க வேண்டியுள்ளது.

இந்த புதிய திருத்த சட்டம் மூலம், பாஜக கடும் பின் விளைவுகளை சந்திக்கும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரித்திருப்பதை தேசத்தின் குரலாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

எனவே மத்திய அரசு இச்சட்டத்தை திருத்தி முஸ்லிம்கள்,இலங்கை தமிழர்கள் உள்ளிட்டோர் பயன் பெறும் வகையில் அனைத்து மதத்தினர், மொழியினர் என்ற உள்ளடக்கத்தோடு
மாற்றியமைத்திட வேண்டும் அல்லது இதை திரும்பபெற வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

இச்சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமரசமின்றி எதிர்த்து ஆணித்தரமான வாதங்களை முன்வைத்த எதிர்கட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கும் எமது நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,
மு.தமிமுன் அன்சாரி MLA,
பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி
10.12.19