நீராதாரத்தை பெருக்க வேண்டும் .! சட்டபேரவையில் M.தமிமுன் அன்சாரி MLA பேச்சு…

(பகுதி -6)

மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே …

142 ஆண்டுகளில் இல்லாத வறட்சியை தமிழ்நாடு சந்தித்திருக்கிறது. இவ்வாண்டு பருவ மழை 60% குறைவாக பெய்திருக்கிறது. தண்ணீர் பற்றாக்குறை நிலவும் சூழலில், அரசு இதற்காக எடுத்திருக்கும் முன் முயற்சிகளை வரவேற்கிறேன்.

அடுத்த 10 ஆண்டுகளில் உலகம் முழுக்க இப்பிரச்சினை புதிய சவாலாக உருவாகும் எனத் தெரிகிறது. எனவே நீர் மேலாண்மையில் நாம் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும்.

தண்ணீரை மறு சுழற்சி செய்து பயன்படுத்தும் முறையை நாம் பின்பற்ற வேண்டும்.  அதுபோல மழைநீர் சேகரிப்பை மக்கள் இயக்கமாக முன்னெடுக்க வேண்டும்.

தமிழகத்தில் 39,202 ஏரிகள் இருப்பதாக பழைய புள்ளி விபரங்கள் கூறுகின்றன. அதில் இப்போது எத்தனை இருக்கிறது என்று தெரியவில்லை.

தெலுங்கானாவில் 22 ஆயிரம் கோடியில் அரசு தொடங்கியிருக்கும் ‘மிஷன் காகதீயா’ எனும் இயக்கம் மூலம் 8 ஆயிரம் நீர்நிலைகளை மீட்டுருவாக்கி சாதனை செய்திருக்கிறார்கள். இதை நாம் பின்பற்றலாம். நிறைய நீராதாரங்களை மீட்டெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

அதுபோல் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு இனி முன்னுரிமை கொடுக்க வேண்டும். மேலும் கடலில் கலக்கும் நதிநீரை தடுக்கும் வகையில் தடுப்பணைகளை கட்டுவதோடு, தமிழக நதிகளை இணைக்கும் திட்டத்திற்கும் செயல்வடிவம் கொடுக்க வேண்டும்.

இதன்மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு தண்ணீர் மிகை மாநிலமாக மாறி இந்தியாவுக்கு வழிகாட்டும்.

இவ்வாறு நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி சட்டப்பேரவையில் பேசினார் .

தகவல் :

நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்
26-03-2017