முக்குலத்து புலியும், மூன்று புத்தகங்களும்…

▪மு.தமிமுன் அன்சாரி

கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பிறகு , 8 மாதம் கழித்து நானும் முக்குலத்தோர் புலிப் படை தலைவர் சகோதரர் கருணாசு அவர்களும் சந்திந்துக் கொண்டோம்.

இடையில் அவ்வப்போது அலைபேசி வழியாக நலன் விசாரித்துக் கொள்வோம். சந்திக்கும் வாய்ப்புகள் அமையவில்லை.

அரசியலில் வெவ்வேறு அணிகளில் இருக்கலாம். தனித்தனி கருத்துகள் இருக்கலாம்.அது வேறு.

அரசியலை விட பண்பாடு ஒரு படி உயர்ந்தது அல்லவா?

அரசியலை கடந்து தனியரசு, கருணாசு என நாங்கள் மூன்று பேரும் சகோதரத்துவத்தை பேணி வருகிறோம். தமிழ் சமூகங்களின் ஒற்றுமைக்கு வலு சேர்க்கும் பாலமாக அந்த உறவை வளர்த்து வருகிறோம்.

இன்று நானும், அவரும் தஞ்சையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒன்றாக அமர்ந்து உணவருந்தினோம்.

தேவர் குருபூஜை காரணமாக அவர் விரதம் இருப்பதால் அது சைவ விருந்தாக அமைந்தது.

சட்டமன்ற விடுதியில் எனது அறைக்கு வரும் போது எப்போதுமே அசைவம்தான் வேண்டும் என விரும்புவார். இன்று விரதம் காரணமாக விதிவிலக்கு.

சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றில் அவர் நடித்த சங்கத் தமிழன் என்ற படத்தை பற்றி அவரிடம் பேசினேன். அவர் சமுத்ரகனியுடன் இணைந்து போராட்டக்காரராகவும்: தொழிற்சங்கவாதியாகவும் சிறப்பாக நடித்திருந்தார்.

தற்போது நிறைய படங்களில் நடித்து வருவதாகவும், தனது சினிமாத்துறையில் முழு ஈடுபாடு காட்டுவதாகவும், ஒரு படத்தில் பீர் ராவுத்தராக நடிப்பதாகவும் கூறினார்.

இப்படி எங்களின் பேச்சு கலை, இலக்கியம், நட்பு என சுவராஸ்யமான உரையாடலாக போய்க் கொண்டிருந்தது.

அப்போது அவர் , மரியாதை நிமித்தமாக ஐயா. நல்லக்கண்ணுவை சந்தித்ததாகவும், அவர் தா.பாண்டியன் எழுதிய இரண்டு நூல்களை தந்து படிக்க சொன்னதாகவும், தான் பயணங்களின் போது அதை ஆர்வமுடன் படித்து வருவதாகவும் கூறினார்.

மேலும் பல புத்தகங்கள் குறித்தும் பேசினார்.

அவர் நிறைய வாசிக்கத் தொடங்கியிருப்பது, அவரது நலன் விரும்பி என்ற வகையில் எனக்கு மகிழ்ச்சியை தந்தது.

அதை ஊக்குவிக்கும் வகையில் இன்று மூன்று புத்தகங்களை அவருக்கு வழங்கி பயணங்களில், ஒய்வு நேரங்களில் வாசியுங்கள் என்று கொடுத்தேன்.

ஏற்கனவே விடுதிக்கு வரும் தருணங்களில் சே குவேரா போன்றோரின் நூல்களை அவருக்கு கொடுத்திருக்கிறேன்.

இன்று
ஐ.பி.கனகசுந்தரம் தொகுத்த ‘விவேகானந்தரின் அமுத மொழிகள் ‘
( வெளியீடு : திருவள்ளுவர் வாழ்வியல் மன்றம் – 9962 46 16 32 )

பேரா.கே.எஸ் ராமகிருஷ்ணராவ் எழுதிய ‘முஹம்மது நபி (ஸல்) ‘
( வினியோகம் : சாஜிதா புக் சென்டர்- 98409 7758)

ஆகிய சிறு நூல்களை கொடுத்தேன்.

அத்துடன் தற்போது நான் ஆவலோடு படித்துக் கொண்டிருக்கும் ம.சோ.விக்டர் என்ற தமிழரின் ஆய்வு நூலான ‘இசுலாம் தமிழர் சமயம்’ என்ற நூலையும் கொடுத்தேன்.

(வெளியீடு : தமிழம் பதிப்பகம் – 94422 48351)

நான் வாசித்து முடித்த பிறகு ,இந்த ஆய்வு நூலை முதலில் திராவிடர் கழகத் தலைவர் ஐயா. வீரமணி அவர்களுக்கும்,நாம் தமிழர் கட்சி தலைவர் அண்ணன் சீமான் அவர்களுக்கும், தமிழ் தேசிய பேரியக்க தலைவர் அண்ணன் பெ.மணியரசன் அவர்களுக்கும், திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் அண்ணன் பேரா.சுப.வீரபாண்டியன் அவர்களுக்கும், தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் அண்ணன் தனியரசு அவர்களுக்கும் , தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் நண்பர் வேல்முருகன் அவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என எண்ணியிருந்தேன்.

ஆனால் அண்ணன் கருணாசு அவர்கள் அதை முதலில் பெற்றுக் கொண்டுள்ளார். அது எதிர்பாராத ஒரு மகிழ்ச்சி.

காரணம் அவர் ஆன்மீகவாதி மட்டுமல்ல.. பசும்பொன் தேவர் திருமகனார் வழியில் எல்லா மதங்களையும் கொண்டாடும் பண்பாளர்.

கீதை , பைபிள் , திருக்குறள் ஆகியவற்றை வாசிக்கும் அவர் தேவர் திருமகன், நேதாஜி, பாரதி, அண்ணா என பல்வேறு ஆளுமைகள் குறித்தும் தீவிரமாக படித்து வருகிறாராம்.

அவர், பேரா.மார்க்ஸ் எழுதிய ‘நான் புரிந்துக் கொண்ட நபிகள் ‘ என்ற நூலை அவரது காரின் முன்பகுதியில் வைத்திருந்ததை பார்த்தேன்.

தலைவர்கள், கலைஞர்கள், படைப்பாளிகளை புத்தகங்களே அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தி செல்கிறது.

சகோதரர் கருணாசு சமூக நீதி, மனிதநேயம், தமிழர் பண்பாடு குறித்த தேடலை தொடங்கியிருப்பதாக கருதுகிறேன்.

அது தமிழ் சமுதாயத்தின் வலிமைக்கு சிறப்பு சேர்க்கட்டும் என அவரை வாழ்த்துகிறேன்.