ஆக:31., புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான ஊட்டி மார்கெட்டில் உள்ள கடைகளை முன்னறிவிப்பின்றி சீல் வைத்து வணிகர்களுக்கும், மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் ஊட்டி நகராட்சி ஆணையர் செயல் பட்டிருக்கிறார்.
ஊட்டி நகராட்சி மார்கெட்டில் 1700 வியாபாரிகள் மற்றும் 1500 பணியாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் செயலாற்றி வருகின்றனர்.
கடந்த 2007ல் நிர்ணயிக்கப்பட்ட மொத்த வாடகை தொகையில் 50 விழுக்காடு உயர்த்தி நகரமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
பிறகு ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு இந்த தீர்மானத்தை ரத்து செய்து ஊட்டி நகராட்சி கடைகளின் வாடகை மொத்த தொகையாக இருந்த ஒரு கோடியே 92 லட்சத்தை, 13 கோடி ரூபாயாக உயர்த்தியது.
இது வணிகர்களை சிரமத்தில் ஆழ்த்தியது.
இதனை ஏற்க மறுக்கும் கடைகளை ஏலம் விடவும் அதிமுக அரசு ஏற்பாடு செய்தது.
ஊட்டி நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி அவர்கள் தான் , அன்றும், இன்றும் ஊட்டி நகராட்சியின் ஆணையாளராக தொடர்கிறார்.
இவரது அணுகுமுறைகள் வணிகர்களாலும், மக்களாலும் கண்டிக்கப்படுகிறது.
இவர் எவ்வித முன்னெச்சரிக்கை அறிவிப்பையும் விடாமல், மார்கெட்டில் உள்ள அனைத்து கடைகளுக்கும் சீல் வைத்து உள்ளார்.
ஏற்கெனவே கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஊட்டி மார்க்கெட் வியாபாரிகளும், இந்த மார்க்கெட் வியாபாரத்தால் வருமானம் ஈட்டும் விவசாயிகளும் ஊட்டி நகராட்சி ஆணையாளரின் நடவடிக்கைகளினால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
தமிழக அரசின் நற்பெயரைக் கெடுக்கும் நோக்கில் செயல்படும் ஊட்டி நகராட்சி ஆணையர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும், ஊட்டி நகராட்சி மார்க்கெட் வணிகர்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலிக்கு மாறும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இவண்,
மு.தமிமுன் அன்சாரி,
பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி,
31.08.2021