நெருக்கடியான சூழலில் மகிழ்ச்சி தருகிறது!தமிழக அரசின் பட்ஜெட் குறித்து! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வரவேற்பு!

தமிழக அரசின் 2021-22 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் PTR.பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று சட்டப்பேரவையில் சமர்ப்பித்திருக்கிறார்.

கொரோனா காரணமாக பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கும் இக்காலகட்டத்தில் மிகுந்த பொறுப்புணர்வுடனும், நுட்பத்துடனும், முன்னோக்கு பார்வையுடனும் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

தமிழக அரசின் சார்பில் பெட்ரோல் வரியாக முதல் கட்டமாக 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

தமிழகத்திற்கு என புதிய கல்விக் கொள்கை வகுக்கப்படும் என்ற அறிவிப்பு நம்பிக்கையூட்டுகிறது.

கல்விக்காக 77. 88% நிதி ஒதுக்கீடு செய்திருப்பது ஒரு தூர நோக்கு பார்வையாகும்.

உணவுக்கான மானியம் 8,437.57 கோடியாக உயர்த்தி இருப்பது, 10 புதிய கலை- அறிவியல் கல்லூரிகள் வெவ்வேறு நகரங்களில் அமைக்கப்படவிருப்பது, பரவலாக 4 புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்பட விருப்பது, அரசு பெண் ஊழியர்களுக்கு பேறுகால விடுப்பு 12, மாதங்களாக உயர்த்தப்பட்டு இருப்பது, மீனவர்கள் நல மேம்பாட்டிற்காக 1,149 கோடி ஒதுக்கியிருப்பது, அடுத்த 10 ஆண்டுகளில் ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் என திட்டமிட்டிருப்பது, கீழடியில் திறந்த வெளி அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது, நந்தம்பாக்கத்தில் 165 கோடியில் நிதி நுட்ப நகரம் அமைக்கப்படவிருப்பது, சென்னை – குமரி இடையே எட்டு வழி சாலை உருவாக்கப்படும் என்பது போன்ற அறிவிப்புகள் பட்ஜெட்டை அலங்கரிக்கின்றன.

நெருக்கடி மிகுந்த சூழலில் மக்கள் மகிழ்ச்சியடையும் விதத்தில் இந்த பட்ஜெட் அமைந்திருப்பதாக கருதி மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வரவேற்கிறோம் .

இதற்காக தமிழக அரசுக்கும், மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,

மு.தமிமுன்அன்சாரி,
பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி
13.08.2021