இன்பத் தமிழின் இனிய முகவரி மணவை முஸ்தபா!

(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் பத்திரிகை அறிக்கை)

அறிவியல் தமிழை வளர்த்தெடுத்து 8 லட்சம் புதிய தமிழ் சொற்களை தமிழ் கூறும் நல் உலகிற்கு வழங்கிய பேரறிஞர். மணவை முஸ்தபா தனது 82 வயதில் மரணமடைந்திருக்கிறார். (இன்னா லில்லாஹி …)

தன் வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் தமிழுக்காக அர்ப்பணித்தவர். தமிழை இவர் காதலித்தாரா? தமிழ் இவரை காதலித்ததா? என்ற கேள்விகளுக்கு யாராலும் விடை சொல்ல முடியாது.

தமிழ் செம்மொழி அந்தஸ்தை பெறுவதற்கு அரும்பாடுபட்டவர். இதற்காக தமிழக அரசுக்கு பல அரிய ஆலோசனைகளை திரட்டிக் கொடுத்தார்.

யுனெஸ்கோ கூரியர் தமிழ் பதிப்பில் 35 ஆண்டுகாலம் ஆசிரியராக பணியாற்றியதோடு, ஆனந்த விகடனின் என்சைக்ளோபீடியா பிரிட்டானிகாவின் தமிழ் பதிப்புக்கு தலைமை பொறுப்பாசிரியராகவும் செயல்பட்டார்.

அவர் எழுதிய “மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்” நூலுக்கு தமிழக அரசின் முதல் பரிசும், “இஸ்லாமும், சமய நல்லிணக்கமும்”  நூலுக்கு தமிழக அரசின் இரண்டாம் பரிசும், “அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி” க்கு அனந்தாச்சாரி பௌண்டேஷன் ஆப் இந்தியாவின் முதல் பரிசும் கிடைத்தது.

ஆங்கிலம், மலையாளம் போன்ற பிற மொழிகளிலிருந்து ஏராளமான  நூல்களை அவர் மொழிப் பெயர்த்துள்ளார். அதில் உலகின் தலைச்சிறந்த நூறு மனிதர்கள் என்ற மைக்கேல் ஹார்ட்டின் நூலும் சான்று. அது தமிழ் கூறும் நல் உலகின் அறிவுக்களஞ்சியம் என்றால் அது மிகையாகாது.

திரு. MGR ஐயா , திரு . கலைஞர் ஐயா ,செல்வி ஜெயலலிதா  அம்மா ஆகிய மூன்று முதல்வர்களால் 5 விருதுகளைப் பெற்ற ஒரு தமிழறிஞர் இவர்தான் என்பதும் ஒரு சிறப்பாகும் .

என் ஊருக்கு அருகில் உள்ள குருகுலம் என்ற பெண்கள் பள்ளிக் கூடத்திற்கு , ஒரு மீலாது விழாவுக்கு அவர் வந்தபோது அவரை சந்தித்துப் பேசினேன்.  தமிழ்பற்று, சமூக நல்லிணக்கம், மாற்றுப்பார்வை ஆகிய குணாதிசயங்களை அவரிடம் கண்டேன்.

அவரது மறைவு செம்மொழி தமிழுக்கும், உலக தமிழினத்திற்கும் பெரும் இழப்பாகும். அவர் கண்டுபிடித்த 8 லட்சம் புதிய தமிழ் சொற்களும் அவரது தமிழ் பற்றை பேசிக் கொண்டேயிருக்கும்.

அவர் இன்பத் தமிழின் இனிய முகவரியாக வருங்காலமெல்லாம் திகழ்வார் என்பதில் ஐயமில்லை.

அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் , நண்பர்களுக்கும் , தமிழின சொந்தங்களுக்கும் மனிதநேய ஜனநாயக கட்சி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவருக்காக இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.

இவண்,

M.தமிமுன் அன்சாரி MLA,
பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.
07-02-2017