#சிறைவாசிகள்_விடுதலை #குறித்து #மஜக_பொதுச்செயலாளர்
#M_தமிமுன்_அன்சாரி_MLA
#சட்டசபையில் #உருக்கமாக #வேண்டுகோள்!
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,
பெரும் மரியாதைக்குரிய பொன்மனச் செம்மல் ஐயா எம்.ஜி.ஆர். அவர்களுடைய நூற்றாண்டு விழாக் காலம் இது. தமிழக அரசு சிறப்பான முறையிலே இந்த நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்திலே மிகுந்த தாழ்மையோடு ஒரு கோரிக்கையை இந்த அவையிலே முன் வைக்கக் கடமைப்பட்டிருக்கின்றேன்.
எனக்கு முன்பாக அண்ணன் திரு.தனியரசு, சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் 14 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் தண்டனை கைதிகளை சாதி, மத அரசியல் பாரபட்சமின்றி விடுதலை செய்ய வேண்டுமென்று வலியுறுத்தினார்கள்.
அந்தக் கருத்தை நான் ஏற்கனவே இந்த அவையிலே தெளிவாக வலியுறுத்தியிருக்கின்றேன். நான் அதை மீண்டும் இப்போது வலியுறுத்துகின்றேன்.
மாண்புமிகு முன்னாள் முதல்வர் அம்மா அவர்களின் தலைமையில் இந்தப் புதிய அவை அமைந்த பிறகு, வெற்றிபெற்ற பிறகு, நான்கு முறை நான் அவர்களை சந்தித்திருக்கின்றேன்.
அதிலே, இரண்டு முறை 14 ஆண்டுகளை நிறைவு செய்த அனைத்து ஆயுள் தண்டனை கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டுமென்று நான் அவர்களிடம் கோரிக்கை வைத்தேன்.
நிச்சயமாக பரிசீலிப்பதாக சொன்னார்கள். கடைசியாக, அவர்கள் இந்த அவையிலே பேசிவிட்டு சென்ற பிறகு, அந்த இடத்திலேயே நான் அவர்களை சந்தித்தப்போது, நான் கொடுத்த மனுவின்மீது, ‘நிச்சயமாக நான் இதை கனிவோடு பரிசீலிக்கிறேன்’ என்று சொன்னார்கள்.
எனவே, மாண்புமிகு அம்மா அவர்கள் கனிவோடு பரிசீலிக்கிறேன் என்று சொன்ன, இந்த மாபெரும் கோரிக்கையை நீங்கள் பரிசீலிக்க வேண்டுமென்று மீண்டும் மீண்டும் நான் கேட்டுக் கொள்கிறேன்.
காரணம் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இதிலே மிகுந்த வேதனையில் துடித்துக் கொண்டிருக்கின்றனர். அந்தக் குடும்பங்களை நேரில் சென்று பார்த்தால் தற்கொலை செய்யக்கூடிய மனநிலையில் இருந்துக் கொண்டிருக்கின்றனர்.
அவர்கள், ஒன்று ‘நமது வீட்டு ஆண்களுக்கு விடுதலை வேண்டும்; இல்லாவிட்டால் மரணம் வேண்டும்’ என்ற நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்.
எனவே, தயவுகூர்ந்து, மனிதாபிமானத்தோடு, உங்கள் அத்தனை பேர்களுடைய இரண்டு கரங்களையும் நான் பற்றி பிடித்துக்கொண்டு, கண்ணீரோடு அழுவதாக தயவுசெய்து எடுத்துக்கொள்ளுங்கள்.
14 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் தண்டனை கைதிகளை, சாதி, மத பாரபட்சமில்லாமல், அரசியல் பாரபட்சமில்லாமல், கருணையின் அடிப்படையில் ஐயா எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி விடுதலை செய்ய மாண்புமிகு அம்மா அவர்கள் உருவாக்கிய இந்த அரசு பரிசீலிக்க வேண்டுமென்று இங்கே பேரவைத் தலைவர் வாயிலாக மாண்புமிகு முதல்வர் அவர்களிடம் நான் கேட்டுக் கொள்கிறேன்.
தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING)
01.02.17