E.அஹ்மத் சாஹிப் மரணம்…

#தமிழக_மீனவர்களின்_நலனுக்காக_பாடுபட்டாவர்!

(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA இரங்கல் செய்தி)

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான E.அஹ்மத் சாஹிப் அவர்கள் இன்று அதிகாலை மரணமடைந்தார் என்ற செய்தி ஆழ்ந்த வருத்தத்திற்குரியது.

கேரளாவின் செல்வாக்கு பெற்ற தலைவர்களுள் ஒருவராக திகழ்ந்த E.அஹ்மத் அவர்கள், சிறுபான்மை மக்களின் வலிமை மிக்க குரலாய் நாடாளுமன்றத்தில் திகழ்ந்தார். கேரள மக்களின் தேசிய குரலாகவும், பன்னாட்டு அறிவுமிக்க தலைவராகவும் அவர் விளங்கினார்.

கேரளாவில் 1967 முதல் 5 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை அமைச்சராகவும் பணியாற்றியதோடு, பல்வேறு வாரியங்களுக்கு தலைவராகவும் செயல்பட்டுள்ளார். 1991 முதல் தற்போது வரை தொடர்ந்து 7 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டு வந்திருக்கிறார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் வெளியுறவுத் துறையிலும், ரயில்வே துறையிலும் இணை அமைச்சராகவும் செயல்பட்டார். இந்தியவின் சார்பில் 6 முறை ஐ.நா.வின் பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டார். 5 முறை இந்திய ஹஜ் கமிட்டியிலும் பொறுப்பு வகித்துள்ளார்.

அவர் வெளியுறவுத்துறையில் இணை அமைச்சராக இருந்தப் போது, தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் தாக்கப்பட்ட போதெல்லாம் அதில் தலையிட்டு, தமிழக மீனவர்களை மீட்டெடுக்க அரும்பாடுபட்டார்.

தமிழக தலைவர்களோடு நட்பு பாராட்டியவர், தமிழகத்தில் ஏராளமான நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.

சிறந்த படிப்பாளியாகவும், பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் திகழ்ந்தவர். ஆங்கிலம் மற்றும் மலையாளத்தில் நூல்களையும் எழுதியுள்ளார்.

2014-ஆம் ஆண்டில் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக, ‘CERI’ என்ற இந்திய தேர்தல் சீரமைப்பு குழுவினருடன் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் அவரை சந்தித்து உரையாடினேன். விகிதாச்சார தேர்தல் முறை குறித்து அவர் தெளிவாக கொள்கைகளை வைத்திருந்ததை அப்போது அறிய முடிந்தது.

நீண்ட அரசியல் மற்றும் பொதுவாழ்வு அனுபவம் கொண்ட ஒரு தலைவரை, கேரளா இழந்துள்ளது. இப்ராஹிம் சுலைமான் சேட், குலாம் முகம்மது பனாத்வாலா போன்ற தலைவர்களுக்கு பின் அவர்களது பணிகளை முஸ்லிம் லீக்கின் சார்பில் நாடாளுமன்றத்தில் எதிரொலித்த அவரது இழப்பு, இந்திய முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு இழப்பு என்பதில் ஐயமில்லை.

அவரை இழந்து வாடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினருக்கும், கேரளா மக்களுக்கும் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அவருக்காக இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.

இவண்;

M. தமிமுன் அன்சாரி MLA,
பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.
01.02.17