இளையான்குடி நகருக்கு மத்தியில் பள்ளிவாசல், கோயில் மற்றும் பொதுமக்களுக்கு பெரிதும் பயன்பட்டு நகரின் முக்கிய நீர் ஆதாரமாக இருந்த தேவூரணி என மக்களால் அழைக்கப்படும் தெய்வ புஷ்ப ஊரணி கடந்த 50 ஆண்டுகளாக முறையாக பராமரிக்கப்படாமல் கருவேலை மரங்களும், முட்களும், புதர்களும் மண்டிக்கிடந்தன. இதனால் நீர் வழிகள் அடைக்கப்பட்டு ஊரணியை சுற்றியுள்ள கரைகள் ஆக்கிரமிக்கப்பட்டன.
சமீபத்தில் இளையான்குடியில் உள்ள கருவேல மரங்களை அகற்ற மஜக சார்பில் பெரும் முயற்சி மேற்கொள்ளப் பட்டு அதன் விளைவாக தாசில்தார் அலுவலகம் மூலம் குத்தகைக்கு விடப்பட்டது. தேவூரணியில் உள்ள கருவேல மரங்களை வெட்ட குத்தகைக்கு எடுத்தார் தப்பாத்தை சாகுல் என்ற இளைஞர்.
சாகுலும், அவரோடு இணைந்து கான்சா உஸ்மானும் மஜகவினர் ஒத்துழைப்போடு தேவூரணியில் உள்ள கருவேல மரங்களை அகற்றும்போது தான் கடுமையான ஆக்கிரமிப்புகளினாலும், குப்பைகள், வேஸ்ட் மணல் கொட்டுவதாலும் ஊரணி மூடி மறையும் அபாயம் தெரிய வந்தது.
கருவேல மரங்களை அகற்றியதோடு, மணல்களையும், குப்பைகளையும் அகற்றினர். அப்போது 50 ஆண்டுகளுக்கு முன் புதையுண்ட படுக்கட்டுகள் வெளியே தெரியவந்து அது அப்படியே மீட்கப்பட்டு வண்ணம் பூடப்பட்டு தற்போது ஊரணி மிக அழகாக காட்சியளிக்கிறது.
24.1.2017 அன்று இளையான்குடி வருகை தந்த மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது அவர்கள் சுத்தம் செய்யப்பட்ட ஊரணியை பார்வையிட்டு ஊர் நலனில் அக்கரை கொண்ட இளைஞர்களை பாராட்டி கௌரவித்தார். மேலும் அவர் கூறும்போது.. “எனக்கு 43 வயதாகிறது தேவூரணி அருகில் தான் என் வீடு என் வாழ்நாளில் படிக்கட்டுடன் ஊரணியை பார்த்ததில்லை. இதை இன்னும் ஆழப்படுத்தவும், அகலப்படுத்தவும் செய்தால் ஊரின் நீராதாரம் பெருகும். சுயநல மின்றி ஊருக்காக உழைக்கும் இந்த இளைஞர்களின் சேவைகளை மனதாரப் பாராட்டுகிறேன். இவர்களின் பணிகளை இறைவன் பொருந்திக் கொள்ளட்டும்.” என்று கூறினார்.
இப்பணிகளை சமூக ஊடகங்கள் மூலம் தெரிந்த பலர் தாமாக முன்வந்து பொருளாதார உதவிகளை செய்து வருகின்றனர். இதுவரை இரண்டரை லட்சம் ரூபாய் வரை செலவழித்துள்ளனர். பொருளாதார ரீதியாக நாம் அனைவரும் ஒருங்கிணைந்து உதவி செய்தால் ஊரின் நிரந்தர நீராதாரமும், நன்மையும் நமக்கே கிடைக்கும்.