மதச்சார்பற்ற ஜனதா தள தமிழக தலைவர் முகம்மது இஸ்மாயில் மரணம்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA இரங்கல்!


மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தமிழக தலைவர் முகம்மது இஸ்மாயில் அவர்கள் மரணம் அடைந்த செய்தியறிந்து ஆழ்ந்த வேதனையடைந்தோம்.

காமராஜரால் ஈர்க்கப்பட்டு அரசியல் களத்துக்கு வந்த அவர், தனது 60 ஆண்டு கால பொது வாழ்வில் எளிமையானவர், நேர்மையாைவர் என்ற புகழுடன் விடை பெற்றிருக்கிறார்.

முன்னாள் ஜனதா தள பிரதமர்கள் மொரார்ஜி தேசாய், வி.பி. சிங், சந்திரசேகர், தேவகவுடா ஆகிய பிரதமர்களுக்கு மிகவும் நெருக்கமான தமிழக தலைவராக திகழ்ந்தார்.

இந்திய அரசியலில் உச்சத்திலிருந்த தலைவர்களான ஜார்ஜ் பெர்ணாண்டஸ், மது தண்டவதே, ராமகிருஷ்ண ஹெக்டே மற்றும் எஸ் ஆர் பொம்மை ஆகியோருடன் சம காலத்தில் தேசிய அரசியலில் பயணித்த ஆளுமையாளர் என்பது அவரது சிறப்புகளை வரிசைப்படுத்துகிறது.

எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, 1980 ல் பத்மனாபபுரம் தொகுதியிலிருந்து MLA வாக தேர்வாகி சிறப்புடன் செயல்பட்டார். MGR அவர்களுக்கு மிகவும் நெருக்கமான தலைவர்களுள் ஒருவராகவும் இருந்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் 1991 மற்றும் 1996 ல் ஜனதாதளம் கட்சியின் சார்பில் இரு முறை போட்டியிட்டார்.

ஐந்தாண்டுகள் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்த அவர், ஜனதாதளத்தின் சிதறல்களுக்கு பிறகு
மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தமிழக தலைவராக கடந்த பத்தாண்டுகளாக பதவி வகித்து வந்தார்.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்களுடன் பயணித்த போதும், அப்பழுக்கின்றி சுயநலமின்றி பொது வாழ்வில் பயணித்திருக்கிறார் என்பது அவர் மீதான மதிப்பீட்டை உயர்த்துகிறது.

கடந்த 2016 ஆண்டு நாகர்கோவிலில் பெரியவர் கொடிக்கால் ஷேக் அப்துல்லா தலைமையில் எனது தேர்தல் வெற்றியை சிறப்பிக்கும் வகையில் எனக்கு ஒரு பாராட்டு விழா தொண்டு அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டது.

அதில் பங்கேற்று வாழ்த்தி பேசிய அவர், பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

அவரது மறைவு பொது வாழ்வில் கண்ணியமாக பயணிக்க விரும்பும் அனைவருக்கும் பேரிழப்பாகும்.

அன்னாரை இழந்து தவிக்கும் அவரது கட்சியினர், குடும்பத்தினர், ஆதரவாளர்கள் அனைவருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.

இறைவன் அவரது பிழைகளை மன்னித்து, அவரது மறு உலக வாழ்வு சிறக்க பிரார்த்திக்கிறோம்.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி MLA,
பொதுச் செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி.
18.11.2020