ஜன.23., இன்று தமிழக சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டம் ஒரே நாளில் இரண்டாவது முறையாக மாலை 5 மணிக்கு கூடியது.
அப்போது “2017-ஆம் ஆண்டு விலங்குகள் வதை தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) சட்ட முன் வடிவு” ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, ஜல்லிக்கட்டுக்கான தடை விலக்க சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை வரவேற்று மஜக பொதுச்செயலாளர்
M. தமிமுன் அன்சாரி MLA பேசிய உரையின் சுருக்கம் பின்வருமாறு:
மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே…
மாண்புமிகு முதல்வர் அவர்களே… உங்கள் தலைமையிலான அமைச்சர்களே.. உங்களுக்கு முதலில் என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
உலகத் தமிழர்கள் எதிர்பார்த்த ஒரு சட்டத்தை இன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றியதற்காக அதிமுக அரசை பாராட்டுகிறேன்.
5 ஆயிரம் ஆண்டுகால தமிழினத்தின், பாரம்பர்ய பண்பாடுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டை டெல்லியில் உள்ள சிலரால் புரிந்துக் கொள்ள முடியவில்லை.
அதனால்தான் இன உரிமை காக்க, மாணவர்களும், இளைஞர்களும் களத்தில் இறங்கி போராடினார்கள். இதுவரை இல்லாத அளவுக்கு உலகம் எங்கும் வாழக்கூடிய தமிழர்கள் தங்கள் நாடுகளில் இதற்காக போராடினார்கள்.
அவர்களின் உணர்வுகளை எல்லாம் புரிந்துக் கொண்டு இன்று இயற்றப்பட்ட சட்ட முன்வடிவை வரவேற்கிறேன்.
ஜல்லிகட்டு வெவ்வேறு பெயர்களில் உலகின் பல நாடுகளில்.. ஸ்பெயின், மெக்ஸிகோ போன்ற நாடுகளில் நடைபெறுகிறது. வெளிநாடுகளில் போட்டி முடிந்ததும் காளைகளை கொன்று விடுவார்கள். ஆனால் தமிழகத்தில்தான் ஜல்லிகட்டு போட்டியை நடத்தி வெற்றிபெறும் காளைகளுக்கு பரிசளித்து மகிழ்கிறார்கள். அப்படிப்பட்ட ஜல்லிகட்டு போட்டிக்கு இன்று சட்ட திருத்த முன்வடிவு கிடைத்து அங்கிகரித்திருப்பதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதுபோல தமிழக அரசு பீட்டா, புளுகிராஸ் போன்ற அமைப்புகளை கண்காணிக்க வேண்டும் என்றும், தடைசெய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.
இவ்வாறு மஜக பொதுச்செயலாளர்
M. தமிமுன் அன்சாரி MLA பேசினார்.
தகவல்;
மஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு (IT WING)
23-01-17