அமைதிக்கு அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும்…

MLA_க்கள்_M.தமிமுன்_அன்சாரி_உ.தனியரசு_கருணாஸ்_வேண்டுக்கள்!

ஜல்லிகட்டுக்கு ஆதரவாக மாணவர்களும், இளைஞர்களும், பெண்களும் முன்னின்று தமிழகத்தில் நடத்திய வரலாற்று சிறப்புமிக்க இப்போராட்டத்தை உலகமே வியந்து போற்றியது.
தமிழர்களுக்கு இந்தியாவெங்கும் பெரும் மரியாதை ஏற்பட்டது.

இந்நிலையில் தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டத்தை ஆளுநர் அவர்கள் பிறப்பித்தார்கள்.
இது தன்னெழுச்சிமிக்க, நேர்மையான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

இன்று நடைப்பெற்ற சட்டமன்ற கூட்டத்தில் அவசரச்சட்டம் குறித்து ஆளுநர் உறுதியளித்து, அதன்பேரில் மாலை சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டு அதில் அவசர சட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.

இந்நிலையில், மாணவர்கள், இளைஞர்களை குறிக்கோள் நிறைவேறிய காரணத்தால் போராட்டத்தை கைவிட்டு வருமாறு காவல்துறை கேட்டுக்கொண்டது. அவர்கள் இரண்டு மணிநேரம் அவகாசம் கேட்டதாக கூறப்படுகிறது. சென்னை மெரினாவில் இதனால் மாணவர்களுக்கும், காவலர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை ஒருபுறமும், தள்ளுமுள்ளு ஒருபுறமும் நடைபெற்றது வருந்தத்தக்கது. இதில் மிகுந்த நிதானம் கடைபிடித்திருக்கப்பட்டிருக்க வேண்டும்.

இந்நிலையில் சென்னையில் சில அவசரக்காரர்கள் ஐஸ்அவுஸ் காவல் நிலையம் முன் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை தீவைத்து சேதப்படுத்தியிருக்கிறார்கள். இது கண்டிக்கதாகும்.

இதற்கு முன்பாக சென்னை, கோவை உள்ளிட்ட சில இடங்களில் மாணவர்களை வெளியேற்ற காவல்துறை எடுத்த முயற்சிகள் பொதுமக்களிடம் தவறான எண்ணங்களை உண்டு  பண்ணியிருப்பதாகவும், அதுவே பதட்டத்திற்கு வழி வகுத்ததாகவும் கூறப்படுகிறது.

இப்போது அமைதியை கட்டிக்காக்க அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்பது கட்டாயமாகும். ஒவ்வொரு உயிர்களும் விலை மதிப்புள்ளவை என்பதை அனைவரும் கருத்தில் கொள்ளவேண்டும்.

எனவே, மாணவர்களும், இளைஞர்களும் ஜல்லிகட்டுக்கு கிடைத்துள்ள வெற்றியை அங்கீகரித்து போராட்டத்தை கைவிட வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்களும் எமது வேண்டுகோளை ஏற்று அமைதிக்கு பாடுபட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

காவல்துறையினர் நிலைமையை நிதானமாக கையாள வேண்டும் என்றும், ஊடகங்களும் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

சமூக இணைய தளங்களில் செயல்படுபவர்கள், அமைதிக்கு வலுசேர்க்கும் வகையில் கருத்துகளை பதிவிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.

வரலாறு போற்றும் போராட்டத்தை தலைமை இல்லாமல், தன்னெழுச்சியாக கடந்த 1 வாரத்திற்க்கும் மேலாக நடத்திய லட்சக்கணக்கான மக்களின் உணர்வுகளை மதிக்கிறோம். அறவழியில் இரவு, பகலாக கொட்டும் பணியில் போராடிய அனைவருக்கும் எங்களின் பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்,
M. தமிமுன் அன்சாரி MLA
(மனிதநேய ஜனநாயக கட்சி)
உ.தனியரசு
(தமிழக கொங்கு இளைஞர் பேரவை)
M. கருணாஸ்
(முக்குலத்தோர் புலிப்படை)