அண்ணன் ம.நடராஜன் அவர்களின் கருத்து கூர்ந்து கவனிக்கத்தக்கது

(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் இணைய தள பதிவு)

நேற்று(16-01-2017) தஞ்சாவூரில் நடைபெற்ற பொங்கல் விழா நிகழ்ச்சியில் புதிய பார்வை ஆசிரியர் அண்ணன் ம.நடராஜன் அவர்களின் பேச்சு தமிழக அரசியலில் புதிய அதிர்வுகளை உருவாக்கியிருக்கிறது.

மத்திய அரசும், பாஜகவும் தமிழக அரசை கபளீகரம் செய்ய முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் ஒருபுறம் வலுப்பெற்று வந்த வண்ணம் உள்ளது.

சமீபத்தில் துக்ளக் ஆண்டு விழாவில் திரு.ரஜினிகாந்த் அவர்கள் தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவும் தருணத்தில் சோ அவர்கள் இருந்திருக்க வேண்டும் என்று பேசி சர்ச்சையை உருவாக்கினார்.

இந்நிலையில், அண்ணன் ம.நடராஜன் அவர்கள், தமிழக அரசை கலைக்க மத்திய பாஜக அரசு சதி செய்வதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். அத்தோடு நில்லாமல் RSS சிந்தனையாளர் ஆடிட்டர் குருமூர்த்தி அவர்களின் மீது கடும் விமர்சனம் செய்துள்ளார். ஆடிட்டர் குருமூர்த்தி அவர்கள் RSS சார்பு சுதேசி இயக்கத்தில்  பொறுப்பாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனக்கு பிராமண நண்பர்கள் உண்டு என்றும், பாஜக  ஆதரவு பிராமணர்கள் தங்களுக்கு எதிராக செயல்படுவதாகவும் குமுறியுள்ளார். சாதி,மதம் பேதமில்லாத தமிழகத்தில் கலவரத்தை உருவாக்கப்பார்க்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார்.

இதில் மேலும் கவனிக்கத்தக்கது என்னவெனில், தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை மாற்ற முடியாது என்றும், தமிழ்நாட்டை காவிமயமாக்க அனுமதிக்க முடியாது என்றும் அவர் எச்சரித்திருப்பதாகும்.

அவரது அதிரடியான பேச்சு தமிழக அரசியலில் நிலவிவந்த ஒரு மெளனத்தை உடைத்திருக்கிறது.

அடிப்படையில் அண்ணன் ம.நடராஜன் அவர்கள் திராவிட இயக்கவாதி மட்டுமல்ல, ஒரு தமிழ் தேசிய உணர்வாளர்.

எந்த நிலையிலும் தனது ஈழ ஆதரவு நிலைபாட்டை மாற்றிக் கொள்ளாதவர். தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் முற்றம் அமைய, ஐயா. பழ.நெடுமாறன்  அவர்களுக்கு பின்னால் உறுதியாக நின்றவர்.

இன்று தமிழக அரசியலில் கூர்ந்து கவனிக்கத்தக்க தலைவராக உயர்ந்திருப்பதும், உரிய நேரத்தில் தீய சக்திகளுக்கு எதிராக உறுமியிருப்பதும் வரவேற்கத்தக்கது.

திராவிட கொள்கைகள், தமிழ் தேசிய சிந்தனைகள், சமூகநீதி, மதச்சார்பின்மை ஆகிய கொள்கைகளைக் காக்க அவர் மேலும் துடிப்போடு செயல்படுவார் என்ற நம்பிக்கை உருவாகியிருக்கிறது.

இவண்,

M.தமிமுன் அன்சாரி MLA,
பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.
17-01-2017