பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் ஆலோசிக்கவேண்டும்! முதமிமுன் அன்சாரி MLA அறிக்கை!

கொரோனோ வைரஸ் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை வரவேற்கிறோம்.

நாடும், மக்களும் இத்துயரத்திலிருந்து விரைந்து மீள வேண்டும் என்பதே அனைவரின் இதயப்பூர்வமான விருப்பமாகும்.

அரசியல், சாதி, மதம், இனம், வட்டாரம் என பேதங்களை கடந்து மக்கள் யாவரும் ஒரே மனநிலையில் அணிவகுத்து நிற்கிறார்கள்.

மக்கள் சோதனையான ஒரு சூழலில் தவிக்கும் போது, நிவாரணம் மற்றும் நிதி உதவிகளில் மத்திய அரசு இறுக்கமான போக்குடன் இருப்பது நல்லதல்ல.

ஆலை தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்கள், மீனவ தொழிலாளர்கள், சினிமா துறை தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், கட்டிட தொழிலாளர்கள், பிற மாநில தொழிலாளர்கள், சிறு கடை ஊழியர்கள், வாடகை வாகன ஓட்டிகள், சுமை தூக்குவோர், மாற்றுத்திறனாளிகள், பத்திரிக்கையாளர்கள், புகைப்படக்காரர்கள், கொரியர் போன்ற சேவை பிரிவில் பணியாற்றியோர் என ஒரு நாளைக்கு 1000 ரூபாய்க்கு குறைவாக சம்பாதித்த அனைவரும் பெரும் வருவாய் இழப்புக்கு ஆளாகி உள்ளனர்.

பசியும், வறுமையும் கெளரவ தற்கொலைகளையும், பட்டினி சாவுகளையும் ஏற்படுத்தி விடக் கூடாது என்பதில் மத்திய அரசு பொறுப்புணர்வுடன் அக்கறை காட்ட வேண்டும்.

GST உள்ளிட்ட வரிகளை பெருமளவில் சேமித்து வைத்திருக்கும் மத்திய அரசு , இடைக்கால நிவாரணமாக ஒவ்வொரு ரேஷன் அட்டைக்கும் குறைந்தபட்சம் தலா 5 ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும்.

மனிதாபிமான அடிப்படையில் ரேஷன் அட்டை இல்லாதோர்க்கும் மாற்று வழிகளில் உதவிட முன் வர வேண்டும்.

அசாதாரண இந்த சூழலில் நாட்டின் நலன் கருதி, விருப்பு வெறுப்புகளை கடந்து பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் அவர்கள் ஒரு சிறப்பு கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க வேண்டும்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் நிதியமைச்சர்கள் ப.சிதம்பரம், யஸ்வன் சின்ஹா, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர்கள் ரகுராம்ராஜன், உர்ஜித் படேல், ரங்கராஜன் மற்றும் நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுனர் அமர்த்தியா சென் போன்றோருடன் ஆலோசிக்க வேண்டும். இது நிலைமையை சீராக்கவும், நல்ல முடிவுகளை எடுக்கவும் உதவும்.

இம் முயற்சி அனைத்து தரப்பு மக்களாலும் வரவேற்கப்படும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் சுட்டிக் காட்டுகிறோம்.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி MLA.,

பொதுச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
12.04.2020