பிள்ளைகளை பிராய்லர் கோழிகளாக உருவாக்கக் கூடாது! பள்ளிக்கூடவிழாவில் தமிமுன்அன்சாரி MLA பேச்சு!

மார்ச்.15,
பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் உள்ள மாடர்ன் பள்ளியில் இரண்டாம் ஆண்டு விழா நடைபெற்றது.

அதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்று உரையாற்றினார். அவர் பேசியதாவது..

நகர்ப்புற மக்கள் அனுபவிக்கும் நவீன கல்வியை கிராமங்களில் தனியார் கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன என்பது நிராகரிக்க முடியாத உண்மையாகும்.

அரசு பள்ளிக் கூடங்களும் இதே அளவில் சேவை செய்ய வேண்டும்‌ என விரும்பினாலும் தனியார் கல்வி நிறுவனங்கள் அதில் முன்னணியில் இருக்கின்றன என்பது உண்மை‌.

இப் பள்ளிக்கூடத்தின் சிறப்பு என்னவெனில், கற்பித்தல் என்ற வட்டத்தையும் தாண்டி , மரம் நடுதல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, பொதுச்சேவைகளை ஊக்குவித்தல் என்று பிள்ளைகளை பன்முகத் தன்மையோடு உருவாக்குவதாகும்.

அதுபோல் வசதிமிக்கவர்களிடமிருந்து நல்ல ஆடைகளை பெற்று ஏழைகளுக்கு அதை வினியோகிப்பது மனிதாபிமானப் பணிகளில் ஒன்றாகும்.

மேலும் இந்த ஊரில் உள்ள பொதுநல சேவகர்களை கண்டறிந்து வருடந்தோறும் விருது வழங்கி சிறப்பிப்பதும் பாராட்டுக்குறியதாகும்.

ஒரு கல்வி நிறுவனம் கற்பித்தலையும் தாண்டி சமூக பொறுப்புணர்வுடன் செயல்பட்டு, மாணவ மாணவிகளையும் அவ்வாறு உருவாக்குவது வரவேற்கத்தக்கது.

இன்று ஒருபுறம் கல்வி வணிகமயமாகி வரும் நிலையில், நியாயமான கட்டணத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும் என்பதே நமது விருப்பமாகும். இன்றைய நிலையில் சேவை என்ற பெயரில் நட்டத்தில் கல்வி நிறுவனங்களை நடத்த முடியாது.அப்படி செய்தால் சம்பளம் கொடுக்க முடியாமல் ஆசிரியைகள் வேலை இழப்புகளுக்கு ஆளாகி விடுவார்கள். நிறுவனத்தை நடத்தவும் முடியாது.

எனவே சேவை கருதி குறைந்த லாபத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும்.

இன்று எளிய மக்களிடமிருந்து கல்வியை பிடுங்க நினைக்கிறார்கள்.

“நீட்” போன்ற நுழைவுத் தேர்வுகளை திணித்து எளிய மக்களின் மருத்துவக் கனவை கலைத்து விட்டார்கள் ‌.

உயர்கல்விக்கு நுழைவுத்தேர்வுகள் மூலம் திட்டமிட்டு வடிகட்டல்களை செய்து, பின் தங்கிய மற்றும் கிராமப்புற பிள்ளைகளை ஆரம்ப நிலையிலேயே தடுத்து விடுவது ஒரு சதிச் செயலாகும்.

நகர்ப்புற மக்கள்,வசதி மிக்கவர்கள், குறிப்பிட்ட உயர்சாதியினர் மட்டுமே உயர்கல்வி பெற முடியும் என்ற நிலையை உருவாக்குவது கவலை அளிக்கிறது.

காமராஜர், எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா அம்மா ஆகியோர் நமது மண்ணில் எல்லோரும் உயர்கல்வி படிக்க வேண்டும் என்பதற்காக இலவசத் திட்டங்களை அறிவித்து பிள்ளைகளை ஊக்கப்படுத்தினார்கள்.

இலவச சீருடை, புத்தக பைகள் மிதிவண்டி, கல்வி உபகரணங்கள், இலவச காலணிகள்,இலவச மடிக்கணினிகளை வழங்கி எல்லோரும் படிக்க வேண்டும் என திட்டமிட்டார்கள்.

ஆனால்
இன்று ஒரு ஆதிக்க கூட்டம் எல்லோரும் படிக்க கூடாது என சதி திட்டம் போடுகிறது. அதுவும் அதிகாரத்தில் இருந்து கொண்டு போடுகிறது. இந்நிலையில் நாம் போராடி கல்வி உரிமையை பாதுகாக்க வேண்டும்.

அதுபோல் இந்த இளம் பிஞ்சுகளை ஆரோக்கியமான சிந்தனை கொண்ட ஆற்றல் மிக்கவர்களாக உருவாக்க வேண்டும்.

அவர்களின் மனதில் சாதிவெறி, மதவெறி ஆகியவற்றை வளர்க்கக்கூடாது. பரந்த மனம் கொண்டவர்களாக அவர்களை உருவாக்க வேண்டும்.

அதுபோல் பிள்ளைகளை மிரட்டி அச்சுறுத்தி படிக்க வைக்கக் கூடாது .அவர்களை மனப்பாட இயந்திரங்களாகவும் உருவாக்க கூடாது.

கல்வி என்பது அவர்களுக்கு சுகமாக இருக்க வேண்டும் அவர்களுக்கு ஆர்வம் ஊட்டுவதாக இருக்கவேண்டும் .புத்தக மூட்டைகளை சுமப்பவர்களாக பிள்ளைகளை மாற்றிவிடக் கூடாது அவர்களை மிரள செய்யக்கூடாது.

உலகிலேயே பின்லாந்தில்தான் தரமான, இலகுவான, செயல்வழிக்கற்றல் கல்வி ஆரம்பப்பள்ளி கூடங்களில் போதிக்கப்படுகிறது‌.

அதனால் அங்கு விடுமுறை நாட்களிலும் பிள்ளைகள் பள்ளி செல்லத் துடிக்கிறார்கள். ஆசிரிய, ஆசிரியைகள் பிள்ளைகளுக்கு இரண்டாவது பெற்றோர்களாக அங்கே வாழ்கிறார்கள்.

அதுபோன்ற ஒரு கல்விச் சூழலை ஆரம்பப் பள்ளிகளில் வழங்க வேண்டும்.அதை நமது கல்வி நிறுவனங்கள் செய்ய வேண்டும்.

அதை நோக்கிய சிந்தனைகளை உருவாக்க வேண்டும்.

இங்கே சிறப்பாக செயல்படும் உங்கள் மாடர்ன் பள்ளிக்கூடத்திற்கு என் இரண்டாம் ஆண்டு வாழ்த்துக்களை கூறி விடை பெறுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#பெரம்பலூர்_மாவட்டம்.
14.03.2020