இன்று MGR இருந்திருந்தால் அவரது குடியுரிமையை பறித்திருப்பார்கள்..! மயிலாப்பூரில்முதமி முன் அன்சாரி MLA பேச்சு..!

சென்னை.மார்ச்.12.,

இன்று சென்னை மயிலாப்பூரில் நடந்த குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிரான காத்திருப்பு போராட்ட களத்தில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்று பேசினார்.

அப்போது பேசியதாவது..

மத்திய பாஜக அரசு நாட்டின் அன்றாட பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் மதவாத பிரச்சனைகளில் கவனம் செலுத்தி வருகிறது.

குடியுரிமை கறுப்பு சட்டங்கள் அனைவருக்கும் எதிரானது என்பதை புரிந்த பிறகு போராட்ட களத்திற்கு பல்வேறு தரப்பு மக்களும் வரத் தொடங்கிவிட்டார்கள்.

CAA சட்டத்தில் ஈழத் தமிழர்களை ஏன் சேர்க்கவில்லை.? என்ற கேள்வியை தொடர்ந்து எழுப்புகிறோம். அதற்கு பதிலில்லை.

முன்னாள் முதல்வர் பொன்மனச் செம்மல் MGR அவர்கள் இன்று இருந்திருந்தால், அவரது குடியுரிமையை இச்சட்டத்தின் கீழ் பறித்திருப்பார்கள்.

அவர் நமது கிண்டியில் அல்ல… இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்தார் என்பது நமக்கு தெரியும். நல்லவேலையாக அப்போது இச்சட்டம் வரவில்லை.

MGR அவர்கள் ஈழத் தமிழர்கள் மீது பரிவு காட்டினார். ஆனால் CAA சட்டத்தில் அவர்களை புறக்கணிக்கிறார்கள்.

முன்னாள் முதல்வர் சமூகநீதி காத்த வீராங்கனை டாக்டர் ஜெயலலிதா அம்மா அவர்கள், 2014 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் பரப்புரையின்போது, பாஜகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட இந்த குடியுரிமை சட்டங்களை கண்டித்து பேசினார். மோடியா? இந்த லேடியா? என்று கேட்டு நாட்டையே அதிர வைத்தார்.

அவர்களின் கொள்கைகளுக்கு எதிராக அதிமுக தலைமை செயல்படுவதை, அதிமுக தொண்டர்களே விரும்பவில்லை.

பாஜக கூட்டணியில் உள்ள நிதிஷ்குமார் அவர்கள் பீகாரில் இச்சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், நீங்கள் ஏன் தமிழகத்தில் அதுபோல் தீர்மானம் நிறைவேற்ற தயங்குகிறீர்கள்? எனக் கேட்கிறோம்.

நீங்கள் தீர்மானம் நிறைவேற்றாதவரை அமைதி வழியில், யாருக்கும் தொந்தரவு இல்லாமல், போராட்டங்கள் தொடரும்.

சிலர் போராட்டங்களை முடித்து கொள்ளுங்கள் என்கிறார்கள். அது அவர்களின் நல்லெண்ணத்தை காட்டுகிறது.

பெண்கள் உட்பட மக்கள் எல்லோரும் குடும்பம் குடும்பமாக போராடுவதால்தான் இந்த பிரச்சனை விவாதமாகி, விழிப்புணர்வாகி, பரவுகிறது. களத்தில் பின் வாங்கிவிட்டால் அது புதை குழிக்குள் போய்விடும்.

ஆங்காங்கே உள்ள போராட்ட குழுக்கள் தான் களத்தை வழிநடத்துகிறார்கள்.

காத்திருப்பு போராட்டங்களின் நேரத்தை சுருக்கலாம். பகுதி நேரமாக கூட மாற்றலாம். போராட்ட வடிவங்களை கூட மாற்றலாம். ஆனால் போராட்டங்களை திரும்பபெற வாய்ப்பில்லை.

ஏனெனில் தலைவர்கள், கட்சிகள், இயங்கங்களை தாண்டி மக்கள் கரங்களுக்கு இது போய் விட்டது.

பல தரப்பினரும் களத்துக்கு வருவதால், இப்போரட்டங்களின் மேடைகளை அனைவருக்குமானதாக விரிவுபடுத்த வேண்டும்.

இங்கே குமார் வந்துள்ளார். கிருஷ்ணன் வந்துள்ளார். (அப்போது எதிரே அமர்ந்திருந்த ஒரு பெண்மணியை காட்டி உங்கள் பெயர் என்ன ? என்றதும், அவர் செந்தமிழ்செல்வி என்றார்) அதுபோல் செந்தமிழ்செல்வியும் வந்துள்ளார்.

எல்லோரும் வரத் தொடங்கிவிட்டார்கள். எனவே எல்லோரும் முழங்கும் வகையில் முழக்கங்கள் இருக்க வேண்டும். எல்லோரும் ஏற்கும் வகையில் பேச்சுகள், கருத்துகள், அறிவிப்புகள் இருக்க வேண்டும்

இங்கு வந்து கைபர், போலன் கணவாய் வழியாக சிலரை விரட்டியடிப்போம் என்றெல்லாம் சிலர் பேசுகிறார்கள். அப்படியெல்லாம் பேசக்கூடாது. பிராமண எதிர்ப்பு இங்கு தேவையில்லை.

ராகுல் காந்தி யார்? மம்தா பானர்ஜி யார்? எனவே பரந்த பார்வையின்றி பேசக் கூடாது. எல்லா சமுகத்தினரும் இதற்கு ஆதரவு தருகிறார்கள் என்பதை புரிந்து கொண்டு இயங்க வேண்டும்.

எனவே பொறுப்புணர்வோடு, முதிர்ச்சியோடு, தெளிவான சிந்தனைகளோடு, அமைதி வழியில். எல்லோரையும் உள்ளடக்கி போராட தயராக வேண்டும்.

அதுவே வெற்றியின் இலக்கை அடைய உதவும்.

இவ்வாறு அவர் பேசினார்

பொதுச் செயலாளருடன் திரளான மஜக-வினரும் பங்கேற்றனர்.

தகவல்.
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தென்சென்னைமாவட்டம்
11-03-2020