பேராசிரியர் அன்பழகன் மரணம், திராவிடஇயக்கத்தின் தீபம் அணைந்தது! முதமிமுன்அன்சாரி MLA இரங்கல்!

தந்தை பெரியாரின் மாணவராகவும், பேரறிஞர் அண்ணாவின் அன்புத் தம்பிகளில் மூத்தவராகவும், கலைஞரின் உற்ற நண்பராகவும், திராவிட இயக்க போராளியாகவும் திகழ்ந்த பேராசிரியர் அன்பழகன் அவர்கள் இன்று மறைவுற்றார் என்பது தமிழ் உலகிற்கு ஒரு துயரச் செய்தியாகும்.

தஞ்சை சமவெளியாம் நாகை மாவட்டத்தில் பிறந்து, அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பயின்று, பெரியாரின் ஈரோட்டு பாசறையில் பொதுவாழ்வை தொடங்கியவர்.

திருவாரூரில் நடைப்பெற்ற மீலாது விழா மாநாட்டில் தான் பேராசிரியர் அன்பழகன் அவர்களும், கலைஞர் அவர்களும் முதன் முதலாக சந்தித்துக் கொண்டனர். அந்த இனிய நட்பு அவர்களை உற்ற கொள்கை நண்பர்களாக மாற்றியது.

43 ஆண்டு காலம் திமுகவின் பொதுச் செயலாளராகவும், பல்வேறு துறைகளின் அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர் என்பதெல்லாம் அவரது சிறப்புகளை உணர்த்தினாலும், திராவிட இயக்க கொள்கைகளை அணையாமல் பாதுகாத்த மாவீரர் என்பதே அவரது பெருமையை பறைசாற்றும்.

எந்த நிலையிலும் கொள்கையை விட்டுக் கொடுக்காத சுயமரியாதை போராளியாக அவர் வாழ்ந்து மறைந்திருக்கிறார்.

ஆதிக்க எதிர்ப்பு போராட்டங்களில் ஏவுகணையாய் செயல்பட்ட அவரது தீரமும், தமிழர் வாழ்வுரிமைகளில் அவர் காட்டிய அக்கறையும், பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளில் சமரசம் செய்யாத முனைப்பும் அவரை தமிழர்களின் இனமானப் பேராசிரியர் என போற்ற காரணங்களாய் அமைந்தது.

“இனம் வாழ்ந்தால் நாமும் வாழ்வோம்” என்று முழங்கிய கொள்கையாளர் அவர்.

சிறந்த பேச்சாளர், பன்னூல் ஆசிரியர், திராவிட இயக்க ஆய்வாளர், நீண்ட கால பொது சேவையாளர் என பல அடையாளங்கள் அவரது சிறப்புகளை கூறுகிறது.

அவரது உயர்வான அணுகுமுறைகளின் காரணமாக, அரசியலில் அவருக்கு எதிர் திசையில் அமர்ந்திருந்தவர்கள் கூட அவரை மிகுந்த மரியாதையோடு போற்றியது அவரது மாண்பினை காட்டுகிறது.

பெரியார், அண்ணா, காயிதே மில்லத், காமராஜர் , நாவலர் நெடுஞ்செழியன் போன்ற தலைவர்களிடம் நெருங்கிய பழகிய அனுபவசாலியான அவர், தான் ஏற்றுக் கொண்ட பணிகளில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றை பேணியவர்.

சமூக நீதிக்கு ஆபத்து ஏற்பட்ட பொழுதெல்லாம் ஆர்த்தெழுந்து முழங்கிய திராவிட இயக்க தீபம் இன்று அணைந்து விட்டது.

அரசியலில் அமைதியும், பண்பும், அறிவும், கொள்கையும், ஆற்றலும் கொண்ட ஒரு மூத்த தலைவரை தமிழகம் இழந்திருக்கிறது.

வகுப்புவாத – பிற்போக்கு சக்திகளின் ஆதிக்கம் ஒங்கியிருக்கும் இருண்ட காலத்தில் தீப்பந்தமாய் இருக்க வேண்டிய சூழலில், அன்னாரைப் போன்ற பெருந்தகையின் இழப்பு ஆழமான வருத்தங்களைத் தருகிறது.

இளம் தலைமுறை படிக்க வேண்டிய திராவிட இயக்கத்தின் நடமாடும் நூலகமாக திகழ்ந்த அன்னாரின் இழப்பின் துயரில் மனிதநேய ஜனநாயக கட்சி உணர்வுப்பூர்வமாக பங்கேற்கிறது.

அவரை இழந்து வாடும் திராவிட முன்னேற்ற கழகம் உள்ளிட்ட தோழமைகள், அவரது குடும்பத்தினர் மற்றும்
அனைத்து திராவிட இயக்க உணர்வாளர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி MLA,

பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி
07.03.2020