உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும்! மு.தமிமுன் அன்சாரி MLA பேச்சு…!

பிப்.27,
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைப்பெற்று வருகிறது.

இதில் பங்கேற்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., பேசியதாவது…

CAA சட்டத்தில் ஈழத் தமிழர்களை ஏன் புறக்கணிக்கிறீர்கள்? என கேட்கிறோம். அதில் மத பாகுபாடுகளை ஏன் காட்டுகிறீர்கள்? என்கிறோம். இது தவறா?

அஸ்ஸாமில் NRC சட்டத்தை அமல்படுத்தியதால் 19 லட்சம் மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டுள்ளது. இதில் 12 லட்சம் பேர் இந்து சமுதாய மக்கள். இதை யாரும் பேசுவதே இல்லை.

நாம் முன்னெடுப்பது அனைவருக்குமான போராட்டம். சமூக நீதியை காப்பதற்கான, ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான போராட்டம்.

அமைதியாக ஓரிடத்தில் கூடி மக்கள் ஆர்ப்பரிப்பது, தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது ஆகியன உச்ச நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்டவை.

இதை சீர்குலைக்கவும், வன்முறை மூலம் மிரட்டவும் சிலர் முயற்சிக்கிறார்கள்.

அவர்கள் தான் டெல்லியில் வன்முறையை உருவாக்கியிருக்கிறார்கள்.

அங்கு இதற்கு முன்பு 3 முறை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டார்கள். அப்போதே டெல்லி காவல்துறை உரிய நடவடிக்கைகளை எடுத்திருந்திருக்க வேண்டும். அவர்கள் அதை செய்யவில்லை.

சங்பரிவார் ஆதரவு கும்பல் செய்த கலவரங்களுக்கு காவல்துறையின் ஒரு பிரிவும் சேர்ந்து துணைப் போயிருக்கிறது.

அவர்கள் CCTV கேமராக்களை உடைக்கும் காணொளி காட்சிகள் வெளியாகி இருக்கிறது.

தவறுகளை, கலவர ஆதாரங்களை மூடி மறைக்க டெல்லி போலிஸ் துணைப் போயிருக்கிறது.

டெல்லி பற்றி எரிவதற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி காவல்துறையின் தவறான போக்குகள் தான் காரணம்.

பாஜக பிரமுகரான கபில் மிஸ்ராவின் ட்விட்டர் பதிவுதான் கலவரம் உருவாக காரணமாகும்.. அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா?

டெல்லி கலவரத்திற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும்.

உடனடியாக டெல்லியில் அமைதியை நிலை நாட்ட இராணுவத்தை அனுப்ப வேண்டும்.

எத்தனை வன்முறைகளை ஏவினாலும், கறுப்பு சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்கி விட முடியாது. எவ்வளவு கோபமூட்டினாலும், சீண்டினாலும் நாங்கள் உணர்ச்சிவசப்பட மாட்டோம். அமைதி வழியில் , ஜனநாயக முறையில் தொடர்ந்து போராடுவோம். எல்லா மக்களையும் ஒருங்கிணைப்போம்.

இது நீண்ட கால போராட்டம் என்பதால் இதற்கு கட்டுப்பாடுகளும், ஒழுங்குகளும் தேவை.

எனவே, காத்திருப்பு போராட்ட களங்களுக்கு வரும் பேச்சாளர்களை கவனமாக, கட்டுப்பாட்டுடன் பேச சொல்லுங்கள்.

யாரையும் காயப்படுத்தும் முழக்கங்களை யார் எழுப்பினாலும் அதை தடுத்து விடுங்கள்.

எல்லா மக்களையும் சந்தித்து கோரிக்கைகளை விளக்குங்கள். போராட்ட களத்தை பொதுமைப் படுத்துங்கள். அதுதான் வெற்றிக்கு வழிவகுக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மனிதநேய ஜனநாயக வணிகர் சங்க (MJVS) மாநில செயலாளர் யூசுப் ராஜா, தஞ்சை வடக்கு பொறுப்புக்குழு தலைவர் அப்துல்லாஹ், கொள்கை விளக்க அணி மாநில துணை செயலாளர் காதர் பாஷா, முன்னாள் மாவட்ட செயலாளர் மஹ்ரூப் உட்பட திரளான மஜக வினரும் இதில் பங்கேற்றனர்.

தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தஞ்சைவடக்குமாவட்டம்.
26/02/2020