டெல்லி ஷாஹின்பாக்கின் ஒழுங்குகளை பின்பற்றிப் போராடவேண்டும் : போராட்டக்களத்தில் முதமிமுன் அன்சாரி MLA பேச்சு!!

பிப்.24,
கோவையில் 6 வது நாளாக குடியுரிமை கருப்புச் சட்டங்களுக்கு எதிராக காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது .

இதில் பல்லாயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் கூடியிருந்து முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

சீமான், திருமுருகன் காந்தி, டாக்டர் KVS.ஹபீப் முஹம்மது உள்ளிட்டோர் அடுத்தடுத்து வருகை உரையாற்றினர்.

மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் அங்கு வருகை தந்து உரையாற்றியதாவது..

https://m.facebook.com/story.php?story_fbid=2294788540620908&id=700424783390633

நாங்கள் பிப்ரவரி 21 அன்று டெல்லியில் ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள், மாணவிகள் நடத்திய அமைதிப் பேரணியில் பங்கேற்றோம்.

அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி கட்டுக்கோப்புடன் அணி வகுத்தார்கள். வாகன ஓட்டிகள் அவர்களுக்கு வழிவிடும் வகையில் செல்கிறார்கள், பொதுமக்கள் சாலையோரங்களில் நின்று ஆதரவு அளிக்கிறார்கள். அந்த வீதிகள் எங்கும் போராட்ட முழக்க எழுத்துகளை வரைந்திருந்தார்கள்.

அதுபோல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடக்கும் ஷாஹின் பாக்குக்கும் சென்றோம் .

அன்று 69 ஆவது நாளாக ஆண்களும், பெண்களும் கூடி நின்றார்கள். சராசரியாக எப்போதும் 10 ஆயிரம் பேர் அங்கேயே இருக்கிறார்கள்.

உணர்வும், எழுச்சியுமாக மக்கள் போராடுகிறார்கள்.

அங்கே இந்து, முஸ்லிம், சீக்கிய, கிறிஸ்தவ அடையாளங்கள் பேனரில் பெரிதாக வைக்கப்பட்டுள்ளது.

காந்தி, அம்பேத்கர், நேதாஜி, அபுல்கலாம் ஆசாத், பகத்சிங் போன்ற தியாகிகளின் படங்கள் வைக்கப்பட்டு பொதுத்தன்மை முன்னிறுத்தப்படுகிறது.

அங்கு பெண்களே போராட்டத்தை வழி நடத்துகிறார்கள்.

யார் பேசுகிறார்கள்? என்ற அனுமதியை அங்கு போராட்டத்தை வழி நடத்தும் பெண்களே தீர்மானிக்கிறார்கள். பேச்சில் கட்டுப்பாடு பேணப்படுகிறது. முழக்கங்கள் ஒழுங்கு படுத்தப்படுகிறது. யாரையும் யாரும் தாக்கிப் பேச அனுமதி இல்லை.

மதம், மார்க்கம், சார்ந்த பேச்சுக்களுக்கு அறிவிப்புகளுக்கு அங்கே இடமில்லை.

அங்கேயே சமைத்து அங்கேயே பரிமாறுகிறார்கள். பல சமூக மக்களும், சமூக ஆர்வலர்களும், உணவு பழங்கள் பிஸ்கட்டுகள் வழங்குகிறார்கள்.

இந்து சமுதாய மக்களின் பங்களிப்பு பெரிதாக இருக்கிறது.

நாங்கள் போனபோது ஆச்சாரமான ஒரு பிராமண சகோதரர் உரையாற்றி விட்டு, ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்.

பஞ்சாப்பை சேர்ந்த சீக்கியர்கள் போராட்டத்தை ஆதரித்து முகாமிட்டிருந்தனர்.

சற்று தூரத்தில் ஒரு பள்ளிக்கு இஷா தொழுகைக்கு சென்றோம். ஒரு ஆச்சர்யம் .அங்கே ஒரு சீக்கியர் சகோதரர் அமர்ந்திருந்தார், அவரிடம் விசாரித்தோம் பஞ்சாபிலிருந்து வந்ததாக சொன்னார். அவர், இது இறைவனின் இல்லம் .யாரும் வரலாம் நான் இறைவனிடம் இங்கே உட்கார்ந்து பிரார்த்திக்கிறேன் என்றார். அவர் ஷாகின் பாக் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்திருந்தார்.

நாங்கள் அவரது உணர்வை மதித்து பூரித்தோம் இதுதான் மனிதம் இதுதான் பண்பாடு.

அந்த அளவுக்கு டெல்லி ஷாஹின்பாக் போராட்டக்களம் தேசிய ஒருமைப்பாட்டு களமாக மாறியுள்ளது.

அங்கு குப்பைகளை, பிளாஸ்டிக் கழிவுகளை போராட்டக்காரர்களே துப்புரவு செய்கிறார்கள். டெல்லி மாநகராட்சிக்கு கூட அவர்கள் சிரமம் கொடுக்கவில்லை.

அப்படிப்பட்ட போராட்டக்களம் போலவே நாமும் இதை வழிநடத்த வேண்டும்.

உணர்ச்சிகளை தூண்டுதை தவிர்த்து, உணர்வுகளை ஊட்ட வேண்டும். அறிவையும், விழிப்புணர்வையும் தூண்ட வேண்டும்.

அரசியல் எதிரிகள் நுட்பமாக செயலாற்றும் போது; வஞ்சகம் புரியும் போது; அதை அறிவுசார்ந்த முன்னெடுப்புகளால் எதிர்கொள்ள வேண்டும். (பலத்த கைத்தட்டல்)

அதுதான் இன்றைய தேவை.

எனவே, போராட்ட களங்களுக்கு வந்து உரையாற்றுபவர்களின் வார்த்தைகளை ஒழுங்குபடுத்த வேண்டும். ஆவேச முழக்கங்களை தடுக்கவேண்டும்.

ஒரு விவசாய சங்கத் தலைவர் போன வாரம் காலை நேரத்தில் எனக்கு போன் செய்தார். அவர் நமது நலன் விரும்பி.

அவர் டெல்டா மாவட்டத்தில் ஒரு காத்திருப்பு போராட்டக்களம் அருகே சென்று காரிலிருந்தவாறு அனைத்தையும் கேட்டிருக்கிறார்.

அப்போது ஒருவர், மாட்டு மூத்திரம் குடிக்கும் உனக்கே இவ்வளவு திமிர் என்றால், மாட்டுக்கறி சாப்பிடும் எனக்கு எவ்வளவு இருக்கும் என்ற வகையில் முழக்கம் எழுப்பியிருக்கிறார்.

அவர் வெளியிலிருந்து வந்தவர் என்று கூறினார்.

இதைக் கேட்டு விட்டு என்னிடம் பேசிய அந்த விவசாய தலைவர், பொதுமக்களின் நல் ஆதரவை இது போன்ற கருத்துக்கள் இழக்க நேரிடும். எனவே உங்கள் தலைவர்களிடம் கூறி இவற்றை ஒழுங்கு படுத்துங்கள். யாராவது ஏதாவது ஒரு அமைப்பைச் சேர்ந்தவர் போடும் தவறான ஒரு முழக்கம் போராட்டத்தின் இலக்கை பாதித்து விடக்கூடாது என்றார்.

அவரது கருத்து மிகச்சரியானது .இதை கவனத்தில் கொண்டு போராட்டக் களங்களை ஒழுங்குபடுத்த வேண்டும். யாராவது எங்கேயாவது பேசும் ஒரு பேச்சு பாதிப்பை உருவாக்கி விடக்கூடாது.

டெல்லி ஷாஹின் பாக் போராட்டக்களத்தில் பின்பற்றும் ஒழுங்குகள் எல்லா இடங்களிலும் பின்பற்றப்பட வேண்டும்.

ஏனெனில் இது நீண்டகால போராட்டமாகும். அவ்வப்போது போராட்ட வடிவங்கள் மாறும்.

2024 மே மாதம் வரை கூட அமைதி வழியில் போராட நேரலாம் .

அப்படியெனில் ஒழுங்குகளுடன் போராட தயாராக வேண்டும்.

இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், தலித்துகள் என எல்லோரையும் களத்தில் இணைத்து முன்னெடுக்கவேண்டும்.

இது அனைவருக்குமான பொது போராட்டம். இதை உணர்த்த வேண்டும். இப்போது பிற மக்களும் களத்துக்கு வரத் தொடங்கி விட்டார்கள்.

பிற மக்களின் நல்லெண்ணங்களை வென்றெடுக்காமல் இதில் வெற்றி பெற முடியாது.

இதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில் பொதுச் செயலாளருடன் துணை பொதுச்செயலாளர்கள் செய்யது முகம்மது பாரூக் மற்றும் தைமிய்யா, ஆகியோரும் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் தொழிற்சங்க மாநில செயலாளர் MH.ஜாபர்அலி, மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் கோவை சம்சுதீன், மாநில செயற்குழு உறுப்பினர் குனிசை ஷாஜகான், மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், KA.பாருக், சிங்கை சுலைமான், அபு மற்றும் நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர்.

தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கோவைமாநகர்மாவட்டம்.