வண்ணாரப்பேட்டை தாக்குதல் சம்பவம்..! முதமிமுன்அன்சாரி MLA கடும் கண்டனம்..!

நேற்று சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக போராடிய மக்களின் மீது நடத்தப்பட்ட கொடும் தாக்குதல் சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.

தங்கள் வாழ்வுரிமைகள் குறித்த அச்சத்தில் தவிக்கும் மக்கள் தொடர் அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட விரும்பும்போது, அவர்களின் உணர்வுகளை கவனமாக எதிர்கொள்ள வேண்டியது அரசின் கடமையாகும்.

அமைதி வழியில் மக்கள் தொடர்ச்சியாக போராட ஒரு இடத்தை ஒதுக்கி தாருங்கள் என பல முறை கேட்டும் காவல்துறை அதை செவிமடுக்கவில்லை.

இந்நிலையில் நேற்று வண்ணாரப்பேட்டையில் கூடிய மக்கள் மீது மூர்க்கத்தனமாக காவல்துறையினர் நடத்திய தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது.

அது தொடர்பாக வரும் காணொளி காட்சிகளை பார்க்கும் போது, பெண்களை குறிவைத்து தாக்குதல் நடந்திருப்பது தெள்ளத் தெளிவாகிறது.

காவல்துறை தரப்பில் வெளியான முதல் கட்ட செய்திகள் யாவும் தவறானவை என்பதும், இத்தாக்குதல் மூர்க்கத்தனமாக நடைப்பெற்றிருக்கிறது என்பதும் காணொளி காட்சிகள் மூலம் உறுதியாகிறது.

தடியடியை கண்ட அதிர்ச்சியில் 70 வயது முதிர்ந்தவர் உயிரிழந்த செய்தி மேலும் வேதனையளிக்கிறது.

எனவே தடியடிக்கு உத்தரவிட்ட காவல் துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

தடியடியைக் கண்ட அதிர்ச்சியில் உயிர் துறந்த முதியவரின் குடும்பத்திற்கு ஆறுதல் உதவியாக 50 லட்சம் ரூபாயை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் போராட்டங்களை ஒடுக்க முனையாமல், எங்கெல்லாம், தொடர் காத்திருப்பு போராட்டங்களை அமைதி வழியில் நடத்த மக்கள் விரும்புகிறார்களோ, அங்கெல்லாம் காவல்துறை ஒரிடத்தை ஒதுக்கி கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

ஒடுக்குமுறைகள் மூலம் மக்களின் உணர்வுகளை அடக்கி விட முடியாது என்பதை ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் உணர வேண்டும் என்பதை நினைவூட்டுகிறோம்.

அது போல் மிகுந்த கவனத்தோடு போராட்ட களத்தை தொடர்ச்சியாக ஜனநாயக வழியில் முன்னெடுத்து செல்லும் வகையில் நன்கு திட்டமிட்டு அனைவரும் போராட்டத்தை ஒன்றுபட்டு வழி நடத்த வேண்டும் என்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,
மு.தமிமுன் அன்சாரி MLA
#பொதுச்_செயலாளர்,
#மனிதநேயஜனநாயககட்சி
15.02.2020