பாபர் மஸ்ஜித் வழக்கு தொடர்பான தீர்ப்பு; மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!

இந்திய நீதித்துறை வரலாற்றில் நீண்ட நெடுங்காலமாக நடைபெற்று வந்த பாபர் மஸ்ஜித் வழக்கில், உச்ச நீதி மன்றம் இன்றைய தினம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

இத் தீர்ப்பு என்பது சட்டம் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் அமைய வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி வந்தோம்.

இப்போது நம்பிக்கைகள் மற்றும் சாஸ்திரங்களை மேற்கோள் காட்டி தீர்ப்பின் வாசகங்கள் அமைத்திருக்கிறது.

தீர்ப்பின் பல இடங்களில் சமரசம் மற்றும் இணக்கம் கருதி நீதிபதிகள் கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள் என்பது தெரிகிறது.

ஆனால்,அந்த இடம் சம்மந்தமான தீர்ப்பு இப்போது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

அதில் ஒன்றுக்கொன்று முரண்கள் இருப்பதாக சட்ட வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

அந்த மசூதியில் உள்ளே முஸ்லிம்களும், வெளியே இந்துகளும் வழிபாடு நடத்தியதாக கூறும் உச்சநீதி மன்றம் ; தொழுகையை நடத்துவதற்கான உரிமையை முஸ்லிம்களை முழுமையாக இழக்கவில்லை என்றும் கூறியுள்ளது.

அப்படி கூறிவிட்டு, அது சர்சைக்குரிய இடம் என்றும் சொல்லிவிட்டு, அதை ஒரு தரப்புக்கு மட்டும் சொந்தம் என கூறியிருப்பது விநோதமாக இருப்பதாகவும் சட்ட வல்லுனர்கள் கருத்து கூறி உள்ளனர்.

இந்த வழக்கில் முஸ்லிம்கள் தரப்பில் வாதாடிய சன்னி வக்பு வாரியம், இத்தீர்ப்பில் அதிருப்தி இருப்பதாக கூறியிருக்கிறது.

நாங்கள், தேசிய அளவிலான இவ் விவகாரத்தில் கொந்தளிப்பான ஒரு சூழலில், இத்தீர்ப்பை நிதானமாக அணுகுகிறோம்.

அதே நேரத்தில், அயோத்தியில் கோவிலை இடித்துவிட்டு, அந்த இடத்தில்தான் பாபர் மசூதி கட்டப்பட்டது என்று தொல்லியல் துறை எந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை என்று நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள். இதன் மூலம் , சங்பரிவார அமைப்புகளால் முஸ்லிம்கள் மீது போடப்பட்டு வந்த பெரும் பழி நீங்கிருக்கிறது.

மேலும் 1992 டிசம்பர் 6 அன்று பாபர் மசூதியை இடிந்தது சட்ட விரோதம் என்றும் நீதிபதிகள் இத்தீர்ப்பில் தெரிவித்திருக்கிறார்கள்.

இவற்றை இந்த தீர்ப்பின் முக்கிய அம்சங்களாக பார்க்கிறோம்.

மசூதியை இடித்தவர்கள் மீது என்ன சட்ட நடவடிக்கை என்ற கேள்வியும் இப்போது எழுகிறது.

‌அதே சமயம் இடம் தொடர்பான இத்தீர்ப்பால் யாரும் நம்பிக்கை இழக்கவேண்டியதில்லை .

இத்தீர்ப்பு வெளியானதும், பெரும்பாலான இந்து சமுதாய உறவுகள் முஸ்லிம்களை நோக்கி ; ஆதரவு கரம் நீட்டி, ஆறுதல் கூறி வருவது நெகிழ்ச்சியளிக்கிறது.

இத்தீர்ப்பு குறித்து அவர்களே ஆரோக்கியமான விமர்சனங்களை முன்வைப்பதும் கவனிக்கத்தக்கது.

எனவே,இக்கட்டான இத்தருணத்தில் அனைத்து தரப்பும் ஒருவருக்கொருவர் நம்பிக்கை வைத்து அமைதி காக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

‌அரசியல் சாசன ‌சட்டம், சமூக நீதி, மதச்சார்பின்மை, நல்லிணக்கம், ஆகியவற்றை காக்க , தொடர்ந்து ஜனநாயக சக்திகளோடு இணைந்து நின்று பணியாற்றுவோம் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

‌இவண்,
‌மு.தமிமுன் அன்சாரி MLA,
‌பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி,
09.11.19