அயோத்தி தீர்ப்பு! , நாட்டு மக்கள் அமைதி காக்க வேண்டும்!

#மனிதநேய_ஜனநாயக_கட்சி யின் பொதுச் செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA., அறிக்கை!

பாபர் மசூதி இடம் யாருக்கு சொந்தம் ? என்ற வழக்கின் தீர்ப்பை உலகமே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

இத்தீர்ப்பு என்பது நம்பிக்கைகளின் அடிப்படையில் அமைய கூடாது. மாறாக ஆவணங்கள் மற்றும் சட்டத்தின் அடிப்படையிலேயே அமைய வேண்டும் என நீதியை விரும்பும் அனைவரும் எதிர்ப்பார்க்கிறார்கள்.

இதற்காக நீண்ட நெடிய அறப்போராட்டங்களை நடத்தி வந்திருக்கிறோம்.

இது பற்றி விவாதங்கள் அதிகமாகி எதிர்பார்ப்புகள் பெருகியுள்ளது.

வரலாறு அனைத்தையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது என்பதை உச்ச நீதிமன்றம் அறியும் என நம்புகிறோம்.

எனினும், இன்றைய அரசியல் சூழல் மோசமானது என்றும், நீதிமன்றங்கள் மறைமுக நெருக்கடிகளை சந்திக்கின்றன என்றும் எழுப்பப்படும் விவாதங்கள் ஒருபுறம் கவலையளிக்கிறது.

இருப்பினும் எல்லாவற்றையும் விட நாட்டு மக்களின் ஒற்றுமையும், பொது அமைதியும் முக்கியமானது.

கடந்த காலங்களில் இப்பிரச்சனைகளால் ஆயிரக்கணக்கான அப்பாவிகளின் உயிர்கள் பறி போயிருக்கின்றன. கலவரங்களில் பல நூறு கோடி ரூபாய் சொத்துகள் அழிக்கப்பட்டிருக்கின்றன.

இனி இது போன்ற சம்பவங்கள் எதுவும் நடக்க கூடாது என்பதே அனைவரின் விருப்பமாகும்.

தீர்ப்புக்கு பின் அது குறித்த வெற்றி ஆரவாரங்கள் அல்லது கண்டன போராட்டங்கள் ஆகியன நாட்டின் அமைதியை குலைத்து விடும் என்பதால், சகல தரப்பும் உணர்ச்சி வசப்படாமல் நிதானத்துடன் தீர்ப்பை எதிர்கொள்ள வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி யின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

மக்களை பிளவுப்படுத்தும் தீய சக்திகளின் சூழ்ச்சிகளுக்கு யாரும் இரையாக கூடாது என்பதே எங்களின் நிலைபாடாகும்.

சகிப்புத்தன்மை, ஒற்றுமை, அரவணைப்பு, பொறுமை, மன்னிப்பு ஆகியன மனித குலத்தின் மிகச் சிறந்த பண்புகள் என்பதை இந்திய சமூகம் உலகிற்கு காட்டிட வேண்டிய தருணம் இது என்பதை அனைவருக்கும் நினைவூட்டுகிறோம்.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி MLA.,

பொதுச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
08.11.2019