நாகைக்கு மருத்துவ கல்லூரி தேவை! நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள், எழுப்பிய தொகுதி கோரிக்கைகள்…!!

(பாகம் – 10 )

தனி தாலுக்கா

எனது தொகுதியிலுள்ள “திருமருகலை” தனி தாலூகாவாக அறிவிக்க வேண்டும். இது எனது தொகுதியின் 30 ஆண்டுக்கால கோரிக்கையாகும்.

மீனவர்கள் படகுகள்

நாகப்பட்டினம் மீனவர்களின் படகுகள், இலங்கை அரசால் சிறைப் பிடிக்கப்பட்டிருக்கிறது. அவற்றை மத்திய அரசு மூலம் மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

கடற்கரை மேம்பாடு

நாகை – நாகூர் கடற்கரைப் பகுதிகளை சுற்றுலாத் துறைமூலம் மேம்படுத்தித் தர வேண்டும்.

சுற்றுச் சூழல்

புதுவை மாநிலம் காரைக்கால் அருகில் உள்ள மேல வாஞ்சூரில் உள்ள மார்க் துறைமுகத்தில் நிலக்கரி, இறக்குமதி செய்யப்படுவதால் தூசுகள் கிளம்பி சுற்றுச் சூழல் மாசு அடைகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதைப்பற்றி நான் ஏற்கனவே இந்த அவையில் பேசிருக்கின்றேன். தமிழக அரசு சுற்றுச் சூழல் அமைச்சகம் மூலம் இந்நிறுவனத்தினிடம் கலெக்டர் வழியாக பேச்சு வார்த்தை நடத்த வேண்டும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

சிக்கல் கோயில்

சிக்கல் சிங்காரவேலர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வசதியாக இந்து சமய அறநிலைத் துறை சார்பில் தங்கும் விடுதி ஒன்றை கட்டித் தர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

பசுமை வழி சாலை

நாகப்பட்டினம் – சென்னை இடையே விவசாய நிலங்கள் பாதிக்காத வகையில் 8 வழி பசுமை சாலை அமைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

மருத்துவக் கல்லூரி

நாகப்பட்டினத்தில் அரசு மருத்துவக் கல்லூரி ஒன்று அமைய சிறப்பான ஒரு முன் முயற்சியை எடுக்குமாறு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

மறைமலை அடிகளுக்கு மரியாதை

நாகையில் மறைமலை அடிகளார் பெயரில் தனித்தமிழ் ஆராய்ச்சி கூடத்தை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

” நாகை பப்ளீக் ஆபீஸ் சாலை ” யின் பெயரை மறைமலையடிகளார் சாலை என பெயர் மாற்றம் செய்ய வேண்டும். அவரது பிறந்த நாளான ஜூலை 15 ஐ அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்ததற்காக எனது பாராட்டுகளையும், நன்றிகளையும் அரசுக்கு தெறிவித்துக்கொள்கிறேன்.

பெண்கள் கல்லூரி

நாகூருக்கு அருகே அனைத்து சமூக மாணவிகளும் பயன் பெறும் வகையில் வக்பு வாரியத்தின் சார்பில் அன்னை ஆயிஷா பெயரில் மகளிர் கல்லூரி ஒன்றை தொடங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

தடுப்பணைகள் தேவை

தேவாநதியில் உத்தம சோழபுரம் மற்றும் நரிமணம் அருகே தடுப்பணைகளை கட்டித்தர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இதன் மூலம், அப்பகுதியில் நிலத்தடி நீர் உயரும், விவசாய சாகுபடி பெருகும் என்பதால் துரிதமாக இதில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு

நாகை – திருவாரூர் இடையே தேசிய நெடுஞ்சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. இதை, அந்தத் துறை சார்ந்த NHAI மூலம் சீர்செய்ய வலியுறுத்துமாறு இந்த அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

மேற்கண்ட கோரிக்கைகளை நாகப்பட்டினம் தொகுதிக்காக நமது சட்டமன்ற உறுப்பினர் #மு_தமிமுன்_அன்சாரி அவர்கள் கடந்த 29/06/2018 அன்று வலியுறுத்தி பேசியுள்ளார்.

வெளியீடு:
#நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம்.