சிறுவாணி நதி நீர் குறித்து கேரளா அரசு மற்றும் மத்திய அரசின் போக்குக்கு எதிராக முதல்வர் கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரித்து மஜக பொதுச்செயளாலர் M_தமிமுன் அன்சாரி MLA 2_09_16_அன்று சட்டமன்றத்தி ஆற்றிய உரை.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே:
இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள் காவிரி நதியின் உப நதியான சிறுவாணி நதி நீரில் கேரள அரசின் சூழ்ச்சியினை வேரறுக்கும் வகையிலும், தமிழ்நாட்டின் உரிமைகளை நிலை நாட்டும் வகையிலும் இந்த மாமன்றத்திலே கொண்டு வந்திருக்கும் சிறப்பான தீர்மானத்தை வழிமொழிகிறேன்.
உலகின் பிரம்மாண்டமான நதிகளில் பிரம்மபுத்திரா ஒன்று. பிரம்மபுத்திரா திபெத்தில் உருவாகி, சீனாவை கடந்து இந்தியாவில் நுழைந்து பங்களாதேஷ் வழியாக வங்க கடலில் கலக்கிறது.
நமது நாட்டில் ரஷ்யாவுடன் தயாரிக்கப்பட்ட ஏவுகனைகளில் பிரமோஸ் ஏவுகனையும் ஒன்று. அந்த கூட்டுத்தயாரிப்புக்கு பெயரை எவ்வாறு வைக்கலாம் ?என்று அப்துல் கலாம் யோசித்தார். ரஷ்யாவில் மாஸ்கோ நதி நீர் ஓடுகிறது. பிரம்மபுத்திரா நதியின் பெயரில் ஒரு பகுதியையும், மாஸ்கோ நதியின் பெயரில் ஒரு பகுதியையும் இணைத்து ‘பிரமோஸ்’ என்று பெயர் வைத்தார்.
அந்த அளவுக்கு நாம் நேசிக்கும் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே பன்னாட்டு விதிகளை மீறி சீனா அணைகளை கட்டி வருகிறது.அதற்கு நடுவண் அரசு பல கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது.
இந்த நடுவண் அரசை பார்த்து நாம் கேட்கக்கூடிய கேள்வி : பிரம்மபுத்திரா நதியிலே சீனாவை பார்த்து கேள்வி கேட்கிறீர்கள். அந்த கேள்வியில் நாங்களும் இணைந்தே நிற்கிறோம் தேசிய நலனில் அரசியல் பேதங்களை பின்பற்றுவதில்லை.
ஆனால் உள்நாட்டு விவகாரத்தில் , அதுவும் தென்னாட்டு விவகாரத்தில் எங்கள் பெரியாரும், பேறரிஞர் அண்ணாவும் பிறந்திட்ட: நமது முதல்வர் அம்மா அவர்கள் ஆளும் தமிழ்நாட்டு விவகாரத்தில் தண்ணீரிலே வஞ்சகம் செய்ய முயலலாமா? எங்கள் மக்களை ஏமாற்ற துணியலாமா?
கேரளாவை சேர்ந்த அதிகாரிகள் டெல்லியிலே ; ஆதிக்க அவைகளில் நிரம்பி இருக்கிறார்கள். லாபியிங் செய்கிறார்கள். அதற்காக அவர்களுக்கு ஆதரவாக பணிந்து விடுவீர்களா?
உடம்பில் கொழுப்பு அதிகமாக இருந்தால் அது சிறிய அளவிலே இருக்கும் மூளையை விட சிறந்ததாக கருதி, அதற்கு முக்கியத்துவம் கொடுத்து விட முடியுமா?
“சாரே ஜஹாங்சே அச்சா
ஹிந்துஸ்தானே ஹமாரா…ஹமாரா”
என்று அல்லாமா இக்பால் அவர்கள் பாடினார்கள்.
அவரது பாடலை பாரதியார் அவர்கள்
“பாருக்குள்ளே… நல்லநாடு… எங்கள் பாரத திருநாடு”
என்று தமிழிலே மொழிபெயர்த்தார்கள்.
நடுவண் அரசுக்கு… இறுதியாக : அம்மா அவர்களின் ஆணித்தரமான தீர்மானத்தை வலியுறுத்தி ஒன்றை சொல்லி நிறைவு செய்ய விரும்புகிறேன்.
இந்திய திருநாட்டின் புகழைப்பாடும் எங்களை ஏமாற்றி விடாதீர்கள். ஒட்டு மொத்த தமிழகத்தின் எண்ண உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக முதல்வர் அம்மா அவர்கள் கொண்டு வந்திருக்கும் தீர்மானத்தை ஏற்று செயல்படுத்துங்கள்.
நாங்கள் இந்தியர்கள். நாங்க தமிழர்கள்.
நாங்கள் கடலில் மிதக்கும் கட்டுமரங்கள் என்று நினைத்துவிடாதீர்கள். தேவைப்பட்டால் நீதிக்காக., உரிமைக்காக அலை கடலை கிழித்து செல்லும் போர் கப்பலாக புறப்படுவோம்.
காற்றுள்ள பந்து தண்ணீரில் மூழ்காது., தமிழ்நாடு என்றும் தோற்காது.
இவ்வாறு மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA பேசி அமர்ந்ததும், அவையில் இருந்த அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஒரு சேர மேசையை தட்டி உற்சாக படுத்தினர்.
குறிப்பாக முதல்வர் அவர்கள் அவரது முழு பேச்சையும் உன்னிப்பாக கவனித்து ரசித்தது குறிப்பிடத்தக்கது.
தகவல்;
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்