70-வது சுதந்திர தின வாழ்த்து : பெற்ற சுதந்திரத்தை பாதுகாப்பதே நமது கடமை.

(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுசெயலாளர் M.தமிமுன் அன்சாரி.MLA அவர்கள் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை)

நமது மகிழ்ச்சிக்குரிய ஆகஸ்ட் 15 ம் நாள் மீண்டும் வந்திருக்கிறது.

நீண்ட வரலாற்றையும்,தொண்மையான கலாச்சாரத்தையும் கொண்ட நம் இந்திய திருநாடு ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற கொள்கையோடு பயணிக்கிறது.

நாம்,சுதந்திரத்தின் தென்றலை கடந்த 70 ஆண்டு காலமாக அனுபவிக்கிறோம் எனில்,
அதற்கு நமது முன்னோர்கள் செய்திட்ட அரும்பெரும் தியாகங்கள்தான் காரணமாகும்.

ஆங்கிலேய அடக்குமுறைகளை எதிர்த்து நடைபெற்ற போர்களும்,போராட்டங்களும் வரலாற்றில் ஈரம் காயாமல் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

கேரளத்தில் குஞ்ஞாலி மரைக்காயர் தொடங்கி வைத்த வீரப்போர் காந்தியடிகளின் தலைமையில்,நேரு,அபுல்கலாம் ஆசாத் போன்றோர் முயற்சிகளில் விடுதலையாக மலர்ந்தது.

ஹைதர் அலி,திப்பு சுல்தான்,ஜான்சிராணி லட்சுமி பாய்,தாந்தியா தோபே,இரண்டாம் பகதூர்ஷா,சிராஜுத் தௌலா போன்ற தேசியத்தலைவர்களும், தமிழகத்தில் பூலித்தேவன்,தீரன் சின்னமலை,மருதநாயகம் என்னும் யூசுப்கான்,கட்டபொம்மன்,வீரன் சுந்தரலிங்கம் போன்ற நாயகர்கள் முன்னெடுத்த சுதந்திர போர்கள் சிலிர்ப்பூட்டக்கூடியவை.

இதில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நடத்திய நவீன சுதந்திர போர் ஒரு தனி வரலாறாகும்.

நாம் 70 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இத்தருணத்தில் நமது முன்னோர்களின் தியாகங்களை போற்றுவோம் ! அவர்கள் பெற்றுக் கொடுத்த சுதந்திரத்தை பாதுகாப்பதே நமது இன்றைய கடமை என்பதை உணர்வோம்.

மதவாத அச்சுறுத்தல்,சாதிய மேலாதிக்கம்,
பயங்கரவாதம்,ஊழல்,பன்னாட்டு மேலாதிக்கம் ஆகியவற்றுக்கு எதிராக ஒன்றினைந்து செயல்படுவதே நமது நாட்டிற்கு செய்யும் தொண்டாகும்.

நாட்டின் 70 வது சுதந்திரத்தை கொண்டாடும் அனைவருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

அன்புடன்

M.தமிமுன் அன்சாரி.MLA
பொதுசெயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி.