(கல்வி மானியக் கோரிக்கை விவாதத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA ஆற்றிய உரையில் ஒரு முக்கிய பகுதி (9.8.2016) )
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே…..
மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களின் கனிவான கவனத்திற்கு மிக முக்கியமான விஷயத்தை இத்தருணத்தில் எடுத்து கூற விரும்புகிறேன்.
இந்தியாவிலேயே சமூக நீதிக்கும், பின் தங்கிய மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் முன் மாதிரியாக தமிழ்நாடு திகழ்கிறது.
ஒன்றுபட்ட இந்திய திருநாட்டில் “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற முழக்கத்தோடு வாழ்ந்து வருகிறோம்.
“மத்தியில் கூட்டாச்சி – மாநிலத்தில் சுயாட்சி” என்ற பேரறிஞர் அண்ணாவின் கொள்கை மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் என்ற கருத்தை வலிமைபடுத்துவதில் பயணித்தது.
பேரறிஞர் அண்ணாவின் கொள்கைப்படி மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்பதிலும், மாநிலங்களின் உரிமைகளை மத்திய அரசு பறிக்கக்கூடாது என்பதிலும் தமிழக முதல்வர் அம்மா அவர்கள் உறுதியாக இருக்கிறார் என்பது உண்மை.
முன்பு, மாண்புமிகு அம்மா அவர்கள் ராஜிய சபாவில் பேசிய கன்னிப் பேச்சு சிறப்பு வாய்ந்தது. அண்ணாவின் எண்ணங்களை எதிரொலிக்கும் வகையில் இருக்கிறது. எங்கள் மாநிலத்திற்க்கு POWER வேண்டும் என்றும் “POWER” வேண்டும் என்றும் பேசினார்கள். அதாவது மின்சாரம் வேண்டும் , அதிகாரம் வேண்டும் என்றார்கள்.
இப்போது மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேசிய கல்வி கொள்கை தொடர்பான வரைவு அறிக்கை என்பது மாநில அரசுகளின் உரிமைகளை பறிப்பதோடு, சமூக நீதியை இட ஒதுக்கீட்டை பாதிக்க கூடியதாக உள்ளது.
இது குறித்து மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சரும், மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் தெரிவித்த பதில் மன நிறைவை தருகிறது.
இதில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஒரே நேர் கோட்டில் சிந்திப்பதும், பயணிப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது.
மத்திய அரசின் இந்த கல்வி கொள்கையை மிகுந்த கவலையோடு, வேதனையோடு அனுகவேண்டியுள்ளது. அதற்கு பல காரணங்கள் உள்ளது.
இத்திட்டத்தால் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளின் அழிவிற்க்கும், மாநில அரசுகளின் அதிகாரங்களை பறித்து மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்க்குள் கொண்டு வருவதற்கும் அத்திட்டம் வழிவகுக்கிறது.
பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், V.P.சிங் போன்ற தேசிய தலைவர்கம் போராடி பெற்றுத் தந்த இடஒதுக்கீடு, கல்வி உதவித் தொகை, உயர் கல்வி வாய்ப்புகள் அனைத்தும் பறி போய்விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
#கல்வி_நலன்_பாதிக்கும்.
உலக வர்த்தக அமைப்பின் (WTO) கீழ், சேவை வர்த்தகத்திற்கான பொது ஒப்பந்தத்தில் (GATS) கல்வியை சந்தை பொருளாக மாற்ற தேவையான கொள்கை முன் மொழிவுகள் அந்த ஆவணத்தில் கூறப்பட்டிருக்கிறது.
மொத்தத்தில் இளம் வயது மாணவ – மாணவிகளின் படிப்பை பாதியில் நிறுத்தி கூலித் தொழிளாலர்களாக மாற்றும் சூழல் ஏற்படும் ஆபத்து இருக்கிறது.
இதனால் பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபாண்மையினர், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் என சகல தரப்பும் பாதிப்படைவார்கள்.
எனவே இந்த அநீதியை தடுத்து நிறுத்தும் மாபெரும் வலிமை மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு இருக்கிறது.
அம்மா அவர்கள் தான் 69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்காக, பெரும் போராட்டங்களை நடத்தினார்கள்.
தமிழ் சமுதாயம் பலன் பெற வேண்டும் என்பதற்காக தூர நோக்கு சிந்தனைகளுடன், கல்வி வளர்ச்சியில் சிறப்பு திட்டங்களை வகுத்து பல சாதனைகளை நிகழ்த்தி அதை எல்லாம் பாதுகாக்க பட வேண்டும்.
பெரியார், பேரறிஞர் அண்ணா, கர்மவீரர் காமராஜர், பசும்பொன் தேவர் அய்யா, கண்ணியத்துக்குறிய காயிதே மில்லத், பாரத ரத்னா எம். ஜி. ஆர் போன்ற தமிழ் சமுதாயம் போற்றும் தலைவர்களின் எண்ணங்களையும், உழைப்பையும் பாதுகாக்க இவ்விஷயத்தில், வலிமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரலாற்றில் மற்றுமொறு அத்தியாயத்தை நீங்கள் படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து உங்கள் தலைமையில் நாடு நலம் பெற வேண்டும் என்று பிரார்த்தித்து அமர்கிறேன். நன்றி.