14ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்யுங்கள் .!

14ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் தண்டனைக் கைதிகளை  விடுதலை செய்யுங்கள் .!

#கண்ணீரும்_துயரமும்_வேதனையும்_கலந்த_வார்த்தைகளில்_பேசுவதாக_எடுத்துக்_கொள்ளுங்கள் .!

#சட்ட_சபையில்_மஜக_பொதுச்செயலாளர்_M_தமிமுன்_அன்சாரி_MLA_உருக்கம் .!

(சிறைத்துறை மானியக் கோரிக்கை மீது 02/08/2016  அன்று மனிதநேய_ஜனநாயக_கட்சியின்_பொதுச்_செயலாளர்_தமிமுன்_அன்சாரி அவர்கள் ஆற்றிய உரை).

மாண்புமிகு  பேரவைத்  தலைவர்  அவர்களே …

சிறைச்சாலைகள்  மானியக்  கோரிக்கையில்  பேச வாய்ப்பளித்தமைக்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறைகள் , பெண்களுக்கான 5 தனிச்சிறைகள்  உட்பட 138  சிறைச்சாலைகள்  உள்ளன .  அங்கிருக்கும் கைதிகளின்  நல வாழ்வுக்காக மாண்புமிகு  முதல்வர் அம்மா அவர்களின் அரசு எடுத்து வரும் சிறப்பான திட்டங்களுக்கு  எனது  பாராட்டுக்களை  தெரிவித்துக் கொள்கிறேன்.

சிறைக் கூடங்களில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் சிறை வாசிகளுக்கு அவர்களது உழைப்பு மதிக்கும் வகையில் அவர்களுக்கான சம்பளத்தை கடந்த அக்டோபர் 2011 முதல்  மாண்புமிகு முதல்வர் அம்மா  அவர்களின்  அரசு உயர்த்தியிருக்கிறது.

இதற்கு முன்னர் நாள் ஒன்றுக்கு 60 ரூபாய் சம்பளம் பெற்ற ”செயல்திறன் பெற்றோர்”  இப்போது 100 ரூபாய்  பெறுகிறார்கள்.

நாள்  ஒன்றுக்கு 50 ரூபாய் சம்பளம் பெற்ற ” ஓரளவு செயல்திறன் பெற்றோர் ” இப்போது  80 ரூபாய் பெறுகிறார்கள்.

நாள்  ஒன்றுக்கு 45 ரூபாய் சம்பளம் பெற்ற ” செயல்திறன் பெறாதவர்கள் ” இப்போது  60  ரூபாய் பெறுகிறார்கள்.

சிறையில் இருப்பவர்களும் மனிதர்கள் தான் என்ற மனிதாபிமான பார்வையோடு அவர்களின் உடல் உழைப்பை மதித்து அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கியதற்காக மீண்டும் மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களுக்கு நன்றி கலந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

சிறைவாசிகள்  கல்வி அறிவு  பெறுவது  என்பது சமூக  மாற்றத்தின் முக்கிய அம்சங்களில்  ஒன்றாகும்.

ஒரு முறை  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்ர் என்னும் போர்க்களத்தில் கைது செய்யப்பட்ட கைதிகளை பார்த்து,
” உங்களில் யாரெல்லாம் கல்வி கற்று இருக்கிறீர்களோ ….
அவர்கள் எல்லாம் மற்றவர்களுக்கு ,  உங்கள் கல்வியை கற்றுக் கொடுங்கள் என்றார்கள் .  அப்படி  செய்தால்  கல்வியை  கற்றுக்  கொடுத்தவர்களுக்கும் விடுதலை, கற்றுக் கொண்டவர்களுக்கும் விடுதலை என்றார்கள்.

14 நூற்றாண்டுகளுக்கு  ஆண்டுகளுக்கு முன்பாகவே கைதிகளின், கல்வி உரிமையை  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிலைநாட்டினார்கள். கல்வி சமூக மாற்றத்திற்கான அடிப்படை என்பதால் தான் அந்த காலத்திலேயே அம்முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இன்று தமிழ்நாட்டு சிறைகளில் கைதிகளுக்கு கல்வி விழிப்புணர்வு பெருமளவில் ஏற்படுத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழகத்தில் 2015-16 ஆம் ஆண்டில் 6,781  சிறைவாசிகள் பல்வேறு பாடப்பிரிவுகளை பயின்று வருகின்றனர். 

இதில் கலை அறிவியல் முதுகலைப் படிப்பில் 50 பேர், கலை, அறிவியல் வணிகவியல் இலக்கியம் உள்ளிட்ட இளங்களைப் படிப்பில் 69 பேர், வணிக மேலாண்மை முதுகலை மற்றும் முதுகலை சட்டப்படிப்பில் 10 பேர் என்பதும், பட்டயப்படிப்பில் 118 பேர் என்பதும், மன நிறைவை அளிக்கிறது.

இதற்காக மாண்புமிகு முதல்வர் அம்மா  அவர்களின் வழிகாட்டலில் செயல்படும் சிறைத்துறை அமைச்சகத்திற்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

சிறைத்துறையின் அடிப்படை நோக்கம் ,  குற்றவாளிகளை சிறையில் வைத்து,  மீண்டும் தவறு செய்யாமல் தடுப்பதுடன் அவர்களின் உடல் மற்றும் மனநலத்திற்கு  உகந்த சூழலை ஏற்படுத்தி அவர்களை நெறிப்படுத்தி – பக்குவபடுத்தி சிறந்த குடிமக்களாக சமூகத்தில் மீண்டும் இணைத்திடுவதுதான்….

எனவே சிறைவாசிகளும் மனிதர்கள் தான் என்பது அனைவரும் அறிந்ததே . தண்டனைக்காலம் முடிந்த பின்னால் அமைதியாக, கண்ணியமான ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே சிறைவாசிகளின் எண்ணமாக இருக்கிறது.

அவர்களைப் பிரிந்து பல ஆண்டுகளாக தவிப்போடு காத்திருக்கும் குடும்பத்தினரும் அதைத்தான் விரும்புகிறார்கள்.

இன்று 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள் தண்டனைக் கைதிகளாக வாழுபவர்கள் ஏராளம். 60 வயதைக் கடந்து சிறையில் வாடுபவர்களும் ஏராளம்.

இவர்கள் விஷயத்தில் மனிதாபிமான அடிப்படையில் மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களின் அரசு கருணைக் காட்ட வேண்டும்.

நாடெங்கிலும் குறைந்தது 14 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது.

இதற்கு காரணம் சமூகத்தில் அவர்களுக்கு மன்னிப்புடன் கூடிய ஒரு மறுவாழ்வு வழங்கப்பட வேண்டும் என்பது தான்.

கடந்த 2008 ஆம் ஆண்டு  அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி  அரசாணை எண். 1762/87 – ன் படி 7 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டார்கள்.

இந்த அரசாணைக்கு எதிராக ஒரு வழக்கு உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் இருப்பதாக கூறப்படும் நிலையில் ,  CBI விசாரித்த வழக்குகளை தவிர மற்றவர்களை மாநில அரசே விடுவிக்கலாம் என உச்ச நீதி மன்றம் கூறியுள்ளது.

எனவே அரசியலமைப்புச் சட்டம் ஆளுநருக்கு வழங்கியுள்ள 161 வது அதிகாரத்தை பயன்படுத்தி ,14 ஆண்டுகளை கடந்த ஆயுள் தண்டனைக் சிறைவாசிகளை  சாதி, மத, அரசியல் பேதமின்றி மாநில அரசு விடுதலை செய்ய வழி உண்டு என சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

நான் சொன்ன பட்டியலில் அனைத்து சமுதாயங்களையும் சேர்ந்த சிறைவாசிகள் உள்ளனர்.  இவ்விஷயத்தில் தமிழக அரசு பாராபட்சம் காட்டுவதில்லை என மாண்புமிகு சிறைத்துறை அமைச்சர் அவர்கள் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ளார்கள். அதற்கு நன்றி.

இவ்விஷயத்தில் தாயுள்ளத்தோடு, மனிதாபிமான சிந்தனையோடு மாண்புமிகு முதல்வர்  அம்மா  அவர்களின் அரசு சிறைவாசிகள் விஷயத்தில் இரக்கம் காட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

கண்ணீரும், துயரமும், வேதனையும் கலந்த வார்த்தைகளில் நான் பேசுவதாக எடுத்துக் கொள்ளுங்கள்.

ஆதரவின்மை, வறுமை, இயலாமை, முதுமை, நோய் என கண்ணீரோடு தவிக்கும் அவர்களின் உறவுகளும்; சிறு வயதில்; குழந்தை வயதில்; தந்தையை-தாயை  சிறையில் பறிகொடுத்துவிட்டு தவிக்கும் பிள்ளைகளும்,இதற்காக வாழ்நாள் முழுக்க உங்களுக்கு நன்றி கடன் பட்டிருப்பார்கள். என்பதை மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களின் மேலான கவனத்திற்கு எடுத்துக் கூறுகிறேன்.

சிறைவாசிகளின் வாடிப்போன வாழ்க்கையில் மல்லிகை பூக்கள் மலரட்டும்.

சிறைக் கொட்டடிகளில் நட்சத்திரங்களை பார்த்து ஏங்குபவர்கள் தங்கள் மறுவாழ்வு  பயணத்தில், நிலா வெளிச்சத்தில் நடக்க வாய்ப்பைக் கொடுங்கள்.

குடும்பத்தின் பாச மழையில் நனையும் வாய்ப்பை பறிக் கொடுத்தவர்கள் ; எஞ்சிய காலத்தில் , உறவுகளின் நிழலிலாவது வாழ வழி ஏற்படுத்தி தாருங்கள் , என்று கேட்டு வாய்ப்புக்கு நன்றி கூறி அமர்கிறேன். நன்றி.

அவர் பேசி முடித்து அமர்ந்ததும் , சிறைத்துறை அமைச்சர்  C.V.சண்முகம் அவர்கள் எழுந்து விளக்கங்களை கொடுத்து விட்டு மாண்புமிகு உறுப்பினர் (M.தமிமுன் அன்சாரி) அவர்களின் கோரிக்கைகள் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனக் கூறினார்கள்.

அவர் பேசிய உருக்கமான வார்த்தைகள் அவை உறுப்பினர்களை பேரமைதியில் தள்ளியது .அவரின் ஆழமான உரையை அனைத்து உறுப்பினர்களும் உணர்வுப் பூர்வமாக கவனித்தது குறிப்பிடத்தக்கது.

தகவல் : நாகை  சட்டமன்ற  உறுப்பினர் அலுவலகம்.