இது குழந்தைகள் தினம்…! குழந்தைகளுடன் கூடி மகிழ்ந்த நாகை MLA!

image

image

image

நாகை தொகுதிக்குட்பட்ட ப.கொந்தகை என்ற கிராமத்தில் அரசு உதவிப்பெறும் மதாரியா தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அப்பள்ளிக்கு திடிர் வருகை மேற் கொண்டார் நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி!

தலைமையாசிரியை விமலா மேடம் அவர்களும், ஆசிரியைகளும், பிள்ளைகளும் அவரை வரவேற்றனர்.

1914 ல் O.M உசேன் மரைக்காயர் வாப்பா என்பவர் தான் இடம் கொடுத்து இதை உருவாக்கி 50 ஆண்டுகள் நிர்வாகித்திருக்கிறார். இன்று அவரது மகன் சேக் தாவூது என்பவர் வழி நடத்துகிறார். இப்பள்ளிக்கு வயது 104 ஆகிறது.

அரசு உதவிப்பெறும் பள்ளியாக இருந்தாலும், அது தனியார் பள்ளிப் போல தரத்துடன் பிள்ளைகளை உருவாக்கி வருகிறது என்பதுதான் அதன் சிறப்பம்சமாகும்.

அழகான சீருடை, ஷீ, நல்ல கல்வி என தாழ்வு மனநிலை ஏற்படாத வகையில் பிள்ளைகளை ஆசிரியர்கள் பாதுகாக்கிறார்கள்.

MLA அவர்கள் அந்த மாணவிகளை அழைத்து, தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களை வாசிக்க சொன்னார். அந்த பிள்ளைகள் பிழையின்றி வாசித்தனர்கள்.

பொது அறிவு, அரசியல் ஆகியவற்றையும் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கின்றனர். இந்தியன் எக்ஸ்பிரஸ், தி ஹிந்து போன்ற ஆங்கில தினசரிகளையும் வாசிக்க வைக்கிறார்கள்!

அங்குள்ள பிள்ளைகளிடம் நான் யார் வந்திருக்கேன் தெரியுமா ? என்றதும், நீங்கள்தான் எங்க MLA என்றனர் கோரசாக!

ஒவ்வொரு வகுப்புக்கும் சென்று மாணவர்களின் செயல் வழி கற்றல் முறையையும், அவர்களின் கலை மற்றும் அறிவியல்,ஒவிய திறன்களையும் MLA ஆய்வு செய்தார்.

மாணவ – மாணவிகளை கைக் கொடுத்து பாராட்டினார்.

பள்ளிக்கூடம் சுகாதாரமாக பராமரிக்கப்பட்டு வருவதுடன், மதிய உணவம் தரமாகவும் வழங்கப்பட்டு வருகிறது.

ஸ்மார்ட் வகுப்புக்கு சென்ற MLA அங்கு மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்படும் கற்கும் முறை குறித்தும் ஆய்வு செய்தார்.

அங்கு புரட்சி கவிஞர் பாரதிதாசனின் புகழ்பெற்ற கவிதைப்பாடல் நடத்தப்பட்டுக் கொண்டிருந்தது.

“தலைவாரிப் பூச்சூடி உன்னை…
பாட சாலைக்கு போ என்று
சொன்னாள் உன் அன்னை…

என்ற பாடலை எல்லோரும் உற்சாகமாக பாடினர்.

அதுபோல மீனவர்கள் கடலுக்கு செல்வது குறித்தும்,விவசாயிகள் வயலில் வேலை செய்வது குறித்தும், டெங்கு விழிப்புணர்வு குறித்தும் மாணவிகள் பாடிய பாடல்கள்  வியப்பூட்டின.

மிக முக்கியமாக “அன்புள்ள கொண்ட அம்மாவுக்கு…
மகள் எழுதும் கடிதம்” என்ற உருக்கமான பாடலை பிள்ளைகள் பாடியபோது வகுப்பறைகள் அமைதி காத்தன.

அந்த பாடலின் வரிகள்,ஒரு கூலித்தாயின் மகள் வறுமையின் காரணமாக தன் அம்மாவுக்கு செய்தி கூறுவது போல இருந்தது.

அம்மா…நீ வேலை செய்யும் வீட்டில் பழைய ஆடை இருந்தால் அதையாவது வாங்கி வா… பழைய சோறு இருந்தாலும் எடுத்து வா ..என ஒரு ஏழை மாணவியின் ஏக்கத்தை கூறும் வரிகள் அனைவரின் கண்களையும் குளமாக்கியது.

இது போல ஏராளமான வலிகளை கொண்ட அந்த பாடல் MLA அவர்களை கண் கலங்க வைத்தது!

ஆம்! அந்த பிள்ளைகள் மிகுந்த பொறுப்புணர்வுடனும்,அரசியல் விழிப்புணர்வுடனும்,சமூக அக்கரையுடனும் உருவாக்கப்படுகிறார்கள் என்பதுதான் சுருக்கமான செய்தியாகும்.

இப்பள்ளிக்கூடத்தில் தலித்துகள், MBC சமூகத்தினர், முஸ்லிம் சமூகத்தினர் வீட்டுப் பிள்ளைகள் தான் படிக்கின்றனர். சாதி – சமய நல்லிணக்கமும், சமூக நீதியும் இங்கு பாதுகாக்கப்படுகிறது.

தலைமையாசிரியை விமலா அவர்கள் 36 வருடமாக இங்கு பணிபுரிந்து வருகிறார். நல்லாசிரியர் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். பள்ளிக்கூடத்திற்கும் விருதுகளை பெற்று தந்துள்ளார்.

சக ஆசிரியைகளை, ஆசிரியர்களை இவர் அரவணைத்து செல்லும் முறையும், மாணவ – மாணவிகளை தன் பிள்ளைகளாக கருதும் போக்கும் இப்பள்ளியின் வளர்ச்சிக்கு உரமாக இருக்கின்றன.

அதுபோல ஆசிரியைகள் தங்கள் தலைமையாசிரியரை கொண்டாடுகின்றனர்.

இப்பகுதியில் ஏழை குடும்பங்களிலிருந்து பல பட்டதாரிகள் உருவாக இப்பள்ளி காரணமாக விளங்குகிறது.

இப்பள்ளிக்கூடத்தின் சிறப்புகளை பாராட்டிய M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள்,தனது தொகுதி நிதியிலிருந்து புதிய சமையல் கூடம் ஒன்றை கட்டித்தருவதாக வாக்களித்தார். மேலும், இப்பள்ளியின் வளர்ச்சிக்கு எல்லா வகையிலும் உதவுவதாகவும் கூறினார்.

அவர் விடைபெறும்போது பிள்ளைகள் “சல்யூட்” அடித்து வழியனுப்பினர் .ஒரு உண்மையான குழந்தைகள் தினத்தை கொண்டாடிய மகிழ்வுடன் MLA புறப்பட்டார்.

தகவல் :-
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
15.11.17