அப்துல் கலாம் ஒரு ஊக்க மருந்து …!

இன்று மேதகு அப்துல் கலாம் அவர்கள் நம்மைவிட்டு பிரிந்து ஓராண்டாகிறது . அவர் வாழும் காலத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை விட , இறந்த பிறகும் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார் .

இன்று அவருடைய முதலாமாண்டு நினைவேந்தல் நாளில் நாடு முழுக்க ஒருவித ஏக்கம் கலந்த சோகம் இழையோடுவதை உணர முடிகிறது.

தொலைக்காட்சிகளில் , F.M ரேடியோக்களில் , சமூக இணைய தளங்களில் , இன்று காலை முதல் அவரது நினைவுகள் ஊட்டப்படுகிறது . நாளிதழ்கள் சிறப்பு கட்டுரைகளை வெளியிட்டுள்ளன .

நாடெங்கும் , சிறப்பு கருத்தரங்கள் , நினைவேந்தல் ஊர்வலங்கள் நடைபெறுகின்றன . குறிப்பாக பள்ளி , கல்லூரிகளை சேர்ந்த மாணவ – மாணவிகள் தங்கள் வீட்டில் ஒருவரை இழந்த சோகம் மாறாத உணர்வுடன் நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள் .

அரசு அலுவலகங்கள் மட்டுமின்றி , தனியார் அலுவலகங்களிலும் அவரது நினைவேந்தல் போற்றப்படுகிறது .

கட்சி அரசியல் , சாதி – மத அரசியல் , பிராந்திய அரசியல் என எல்லாவற்றையும் கடந்து அவர் போற்றப்படுகிறார் .

காந்திக்கு நிகராக ; நாடு கொண்டாடும் ஒரு தலைவராக மக்கள் மனங்களை வென்றிருக்கிறார் . கடந்த 50 ஆண்டுகளில் இந்திய தலைவர்கள் யாருக்கும் கிடைக்காத ஒரு சிறப்பு இது.

அவருக்கு நாம் செய்யும் மரியாதை என்பது வெற்றுச் சடங்குகளுடன் முடிவதல்ல .  அவரது கனவுகளை வெல்வதற்கு ஒன்றுபட்டு பாடுபடுவது தான் . அவருக்கு நாம் செய்யும் மரியாதையாகும் .

அவரது பல பொன்மொழிகளில் சிறப்பானது பல . அதில் ஒன்று

” நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் .
  ஆனால் –
  இறப்பு ஒரு சரித்திரமாக
  இருக்க வேண்டும் “  .

இவ்வாசகம் ,
ஒவ்வொரு தனி மனிதனையும் சாதனையாளராக மாற்றும் உந்துசக்திக் கொண்டது . அதை நோக்கியே பயணிப்போம் . 

இவண்

M.தமிமுன் அன்சாரி MLA
பொதுச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
27-07-2016