தேவர் நினைவேந்தலில் மஜக பொதுச் செயலாளர் பங்கேற்பு..!
“தாய் மாமன்களே…” வருக என தேவர் இன மக்கள் முழக்கம்..!!
மஜகவினருக்கு உற்சாக வரவேற்பு..!!!
பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் 110வது ஜெயந்தியை முன்னிட்டு, முக்குலத்தோர் புலிப்படையின் சார்பில் “சமூக நல்லிணக்க விழா” நடைபெற்றது.
இதற்கு மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA, கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு MLA ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்தனர்!
இதில் மஜக தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா.நாசர், துணை பொதுச்செயலாளர் செல்லச்சாமி, மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன் ஆகியோருடன்,
தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் கோட்டை ஹாரிஸ், விவசாய அணி செயலாளர் நாகை முபாரக், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் இலியாஸ், சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் சேட்டு, ரஹ்மான் உள்ளிட்டோருடன் ஏராளமான வாகனங்களில் பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள், காலையில் இளையான்குடியில் இருந்து புறப்பட்டு பசும்பொன் கிராமத்தில் நுழைந்தார்.
அப்போது தேவர் சமுதாய மக்கள் கைகளை அசைத்து வாழ்த்துக்களை கூறினர், பல தேவரின இளைஞர்களும், மாணவர்களும் வாகனத்தை வழிமறித்து பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி அவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்,
தேவர் நினைவேந்தலுக்கு வந்ததற்கு ,வாழ்நாள் முழுக்க நன்றி கடன்பட்டிருப்போம் என உணர்ச்சி வசப்பட்டனர். ஒரு தேவர்இன இளைஞர், பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரியிடம் “மாமா…நாங்க பாத்திஹா ஓதி” (ஹலால் செய்ததை சொல்கிறார்) கிடா வெட்டி ,பார்த்திபனுரிலிருந்து எடுத்து வருகிறோம், எங்களுடன் வந்து சாப்பிட வேண்டும் என்றார் அன்பொழுக..!
மஜகவின் கொடிகளை பார்த்ததும் பலர் “தாய் மாமாக்கள் வர்றாங்க” என அன்பில் உணர்ச்சி வசப்பட்டனர்.
தனியரசு MLA அவர்கள், தமிழக கொங்கு இளைஞர் பேரவை தொண்டர்களுடன் வந்து மஜக அணிவகுப்பில் இணைந்து கொண்டார்.
இருதரப்பும் ஒன்று சேர்ந்து முக்குலத்தோர் புலிப்படை அமைத்த சமூக நல்லிணக்க பந்தலுக்கு வந்தபோது புலிப்படையினர் கைதட்டி வரவேற்றனர். கருணாஸ் அவர்கள் தனியரசு மற்றும் தமிமுன் அன்சாரி உள்ளிட்ட மஜக தலைவர்களுக்கும் சால்வை அணிவித்து உள்ளே அழைத்து சென்றார்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக மஜக துணைப் பொதுச் செயலாளர் செல்லச்சாமி அவர்கள் பேசினார். அப்போது தேவர் சமுதாயத்தை சேர்ந்த தன்னை மஜகவினர் எப்படி கொண்டாடுகின்றனர் என்பது குறித்தும், தேவர்-முஸ்லிம்கள் உறவுகள் குறித்தும் சிறப்பாக பேசினார்.
பசும்பொன் முன்னேற்ற கழக தலைவர் நெல்லை.மூர்த்தி தேவர் பேசும்போது, “தாய்மாமா” உறவுதான் முக்கியம், எங்கள் தேவருக்கு பால் கொடுத்த முஸ்லிம்கள் நமக்கு தாய் மாமன்கள், என அரங்கத்தை அதிர வைத்தார்.
கருணாஸ் அவர்கள் பேசும்போதும், தேவரய்யாவின் இவ்வூரில் சமூக நல்லிணக்க விழா நடைபெருவது இது தான் முதல் முறை. இதற்கு தமிமுன் அன்சாரி தான் யோசனை தெரிவித்தார் என்று கூறினார்.
தேவர் ஜெயந்திக்கு வருகை தந்த முதல் முஸ்லிம் தலைவர் தமிமுன் அன்சாரிதான் என உருகிய கருணாஸ், அன்று தேவருக்கு பால் கொடுத்தார்கள். இன்று தேவர் ஜெயந்திக்கு மஜகவின் அப்துல் ரஹ்மான் 5ஆயிரம் பேருக்கு மினரல் வாட்டர் கொடுத்திருப்பதை கூறி சிலாகித்தார்.
“மதவாத சக்திகளுக்கு எதிராக” நாங்கள் இணைந்து பணியாற்றுவோம், இஸ்லாமியர்களுக்கு ஒரு ஆபத்து என்றால் முக்குலத்தோர் புலிப்படை விடாது… என கருணாஸ் கூறியபோது கைத்தட்டல் காதை பிளந்தது. இஸ்லாமியர்களை அழித்துவிட்டு இந்துத்துவத்தை நிலை நாட்டுவதை ஏற்க முடியாது என சவால் விட்டார்.
அங்கு 9 அமைப்பின் சார்பில் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் புலிப்படை பந்தலில் தான் கூட்டம் நிரம்பி வழிந்தது.
முன்னதாக காலையில் அப்பகுதிக்கு வந்த முதல்வர் எடப்பாடியார், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஆகியோருக்கு சால்வை அணிவித்து கருணாஸ் மரியாதை செய்தார்.
அதுபோல் TTV தினகரன் 12மணியளவில் இப்பந்தலுக்கு வந்தபோது, மூன்று தலைவர்களையும் சேர,சோழ,பாண்டியர் என்று ” மூவேந்தர்கள் ” என குறிப்பிட்டபோது மக்கள் ஆர்ப்பரித்தனர்.
அவருக்கு மூன்று தலைவர்களும் சால்வை அணிவித்தனர். மஜகவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா.நாசரும் சிறப்பு செய்தார்.
தனியரசு MLA பேசும்போது நாங்கள் மூன்று கட்சியினரும், ஜல்லிக்கட்டு தொடங்கி, ரோஹிங்யா முஸ்லிம்கள் பிரச்சனை வரை தொடர்ந்து இணைந்து போராடி வருகிறோம். இங்கு மதவாத சக்திகளை காலூன்ற விட மாட்டோம் என சபதமிட்டார்.
மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி பேசும்போது, கூட்டத்தினரை பார்த்து, எங்கள் மாமாக்களே.., மச்சான்களே.., என அழைத்ததும் கைத்தட்டல் அடங்க வெகு நேரமானது.
அவர் பேச,பேச அங்கு வந்த தேவர் சமுதாய மக்கள் ஆர்ப்பரித்தனர்.
தேவரய்யா.. ஆயிஷா அம்மாவிடம் பால் குடித்தவர், அவர் எங்கள் வீட்டு பிள்ளை. அவர் சிறப்பை பேச உங்களை விட எங்களுக்கு அதிக உரிமை உண்டு என்றார்.
தொடர்ந்து தேவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே உள்ள நல்லுறவை விவரித்தார்.
1000ஆண்டுகளுக்கு முன்னால் ராமநாதபுரம்-சிவகங்கை சீமையிலிருந்து ஆலியப்ப தேவர் என்பவர் மெக்காவுக்கு சென்று இஸ்லாத்தை ஏற்றார்.
அதன் பிறகு அவரது பிரச்சாரத்தால் இப்பகுதி தேவரின மக்கள் இஸ்லாத்தை ஏற்றனர் என்றபோது மக்கள் ஆர்ப்பரித்தனர்.
வீரசோழன் முஸ்லிம்களுக்கும், தேவரய்யாவுக்கும் இருந்த உறவு பற்றி விவரித்தவர், ராமநாதபுரம் ஏரியாவில் மதக்கலவரத்தை நடத்த சில மதவெறியர்கள் திட்டமிட்டப்போது, அதை அறிக்கை மூலம் எச்சரித்து தேவரய்யா முறியடித்ததை நினைவூட்டியபோது மக்கள் அதை வரவேற்று முழக்கமிட்டனர்.
அவருக்கும், நரிக்குடி.ஜமால் முஹம்மது (திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி) குடும்பத்திற்க்கும் இருந்த உறவு பற்றி கூறியவர், மீலாது விழாக்களில் தேவரய்யா பேசிய நபிகள் நாயகம் பற்றிய உரைகளையும் குறிப்பிட்டார்.
தேவர் சாதியவாதி அல்ல. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வைத்தியநாத அய்யர் தலைமையில் தலித்துகளை அழைத்துக் கொண்டு ஆலயப் பிரவேசம் செய்தார்.
உழைப்பாளிகளுக்கு ஆதரவாக ஜமீன்தார் முறையை ஒழிக்க சட்டம்இயற்ற துணை நின்றார். அவர் கிறிஸ்துவ பள்ளிக்கூடத்தில் படித்தவர். முஸ்லிம் தாயிடம் பால் குடித்தவர் என தேவரின் சிறப்புகளை பட்டியலிட்டார்.
நிறைவாக தேவர் சமுதாய மக்கள், இதர பிற்படுத்தப்பட்ட மக்களுடனும், MBC மக்களுடனும், சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுடனும் ஒற்றுமையாக வாழ வழி செய்யவே, இங்கு தேவர் ஜெயந்தி, சமூக நல்லிணக்க விழாவாக நடைபெறுகிறது என உரையை முடித்தார்.
முத்தாய்ப்பாக மதுரை விமான நிலையத்திற்க்கு முத்துராமலிங்க தேவரின் பெயரை சூட்ட வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார். அப்போது பலத்த கரவொலி எழுந்தது.
இதை சற்றும் எதிர்பார்க்காத கருணாஸ் அவர்கள், மிகுந்த மகிழ்ச்சியோடு அதை வரவேற்று, பத்து ஆண்டுகளை நிறைவு செய்த அனைத்து ஆயுள் தண்டனை கைதிகளையும் MGR நூற்றாண்டுவிழா மற்றும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு முன் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்.
மேலும், கோவை விமான நிலையத்திற்க்கு தீரன் சின்னமலை பெயரை வைக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இவ்விரு கோரிக்கைகளையும் தேவர், முஸ்லிம் மற்றும் கொங்கு சமுதாய இளைஞர் கைத்தட்டி வரவேற்றனர்.
முதல் முறையாக பசும்பொன்னில் ‘தேவர் ஜெயந்தி’ சமூக நல்லிணக்க விழாவாக நடத்தப்பட்டதற்கு காவல்துறையினருக்கும், பத்திரிக்கை துறையினருக்கும் பாராட்டு கூறினார்.
மஜகவினரை பார்த்து அங்கு வந்த மக்கள் ‘மாமா, மாமா…’ என பாசம் பொங்க கட்டியணைத்தனர்.
மேடையில் தொப்பியணிந்த முஸ்லிம்கள் நிறைய பேர் நின்றதைப் பார்த்த, தேவரின இளைஞர்கள் மகிழ்ச்சிப் பொங்க கையசைத்தபடியே இருந்தனர்.
பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் மேடையை விட்டு இறங்கியபோது போட்டி போட்டு கை கொடுத்து, படம் எடுத்துக் கொண்டனர்.
சமூக நல்லிணக்க நிகழ்ச்சி முடிந்ததும் கருணாசும், தனியரசும் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க புறப்பட்டனர்.
அப்போது கருணாஸ் அவர்கள் தனது தொண்டர்களிடம் தமிமுன் அன்சாரியும், அவருடன் வந்த முஸ்லிம் நண்பர்களும் சிலைக்கு மாலை அணிவிக்கும் சடங்குகளில் ஈடுபடமாட்டார்கள். அவர்கள் தேவரய்யாவின் உறவுகளை பேசி நமக்கு வாழ்த்து சொல்ல மட்டுமே வந்திருக்கிறார்கள். எனவே இந்நிகழ்சியோடு அவர்களை வழியனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.
ஒருவர் கொள்கையை இன்னொருவர் மதிக்கும் வகையிலும், பிறர்க்கு சங்கடத்தை ஏற்படுத்தாத வகையிலும், இருதரப்பும் புரிந்துணர்வோடு செயல்பட்டது குறிப்பிடதக்கது.
இவ்வருட தேவர் ஜெயந்தி மூலம் தீய வகுப்பு வாத சக்திகளுக்கு எதிரான முழக்கம் கூர் தீட்டப்பட்டிருக்கிறது.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#ராமநாதபுரம்_மாவட்டம்