நாகை நகராட்சி திட்ட பணிகள் குறித்து அமைச்சர் வேலுமணியுடன் தமிமுன் அன்சாரி MLA சந்திப்பு .!

image

image

நாகப்பட்டினம் நகராட்சி 150 ஆம் ஆண்டுவிழாவை கொண்டாடவிருக்கிறது . இதனையொட்டி நாகை , நாகூர் நகரங்களை மேம்படுத்தும் வகையில் புதிய திட்டங்கள் தீட்டப்பட்டிருக்கிறது .

இது குறித்து நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்களும் , நாகை நகர்மன்ற தலைவர் மஞ்சுளா சந்திரமோகன் அவர்களும் ஆலோசித்து , அதன் அடிப்படையில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் திட்டங்கள் வரையறுக்கப்பட்டன .

புதிய பூங்காக்களை உருவாக்குதல்  , குளங்களை தூர்வாரி சுற்றிலும் நடைபயிற்சி தளம் அமைத்தல் , கடற்கரைகளை அழகு படுத்துதல் , சாலைகளை சீரமைத்தல் , குடிநீர் தொட்டிகள் அமைத்தல் , வரவேற்பு வளைவுகள் கட்டுதல் , பள்ளிகூட கட்டிடங்களின் தரம் உயர்த்தி விரிவாக்குதல் , ஆங்காங்கே கழிப்பறைகளை கட்டுதல் , நகராட்சி அங்காடிகளை சீரமைத்தல் , புதிய பேருந்து நிலையத்தை நவீனப்படுத்துதல் உள்ளிட்ட விசயங்கள் பரிசீலிக்கப்பட்டு அதற்கான உத்தேச திட்ட மதிப்பீடு 52 கோடி ரூபாய் என நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தரப்பட்டது .

இன்று கோவை வந்த நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் S.P. வேலுமணி அவர்களை சந்தித்து அத்திட்டங்களை கையளித்து விளக்கி கூறினார் .

இது குறித்து முதல்வரிடம் பேசி இத்திட்டங்களை செயல்படுத்திட வழிவகுக்குமாறு கேட்டுக்கொண்டார் .

நாகை , நாகூர் மக்களுக்கு இத்திட்டங்கள் அமல்படுத்தப்படுமேயானால், தொகுதி வரலாற்றில் இது ஒரு முக்கிய நிகழ்வாக இருக்கும் .

தகவல் : நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்  03-07-2016