நாகை தொகுதியில் சிறப்புடன் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி!

image

image

image

image

நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் MLA அலுவலகத்தின் சார்பில் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் ஏற்பாடு செய்திருந்த பிரம்மாண்டமான இஃப்தார் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

EGS பிள்ளை கல்லூரியின் வளாகத்தில் பிரம்மாண்டமான கலையரங்கம் ஆண்கள், பெண்கள் என நிரம்பி வழிந்தது.

கொடிகள், தோரணங்கள், விளம்பர பதாகைகள், ஆள் உயர தட்டிகள் எதுவுமின்றி அனைத்து மதத்தினரும், சாதியினரும் கலந்துக் கொண்ட நிகழ்வாக இருந்தது.

கோயில் குருக்கள், பாதிரியார்கள், ஜமாத்தார்கள், உலமாக்கள் என பல தரப்பினரும் ஒற்றுமையாக அமர்ந்து உரையாடி மகிழ்ந்தனர்.

மாவட்ட அமைச்சர் மாண்புமிகு O.S.மணியன், மாவட்ட ஆட்சியர் S.சுரேஷ் குமார், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சேகர் தேஷ்முக் ஆகியோர் வந்திருந்தது ஆச்சர்யமாக பார்க்கப்பட்டது. காரணம் அரசியல் வாதிகளும், அதிகாரிகளும் ஒன்றாக பொது நிகழ்ச்சியில் அமர்வதில்லை. ஆனால் இந்த இஃப்தார் தமிழகத்திற்கே முன்மாதிரியாக அமைந்துவிட்டது.

மேலும், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். கோபால், பூம்புகார் MLA பவுன்ராஜ், சீர்காழி MLA பாரதி, மயிலாடுதுறை MLA ராதாகிருஷ்ணன் ஆகியோரும் வருகை தந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம் அவர்கள் வருகை தந்து தனது தோழமையை வெளிப்படுத்தினார்.

மாவட்டத்தின் அனைத்து துறைகளையும் சேர்ந்த அதிகாரிகள் ஒருவர் விடாமல் கலந்துக் கொண்டது நிகழ்ச்சியின் ‘ஹைலைட்’ ஆக இருந்தது.

பெண்கள் பகுதி சிறப்பாக நேர் செய்யப்பட்டு அப்பகுதியில் 250க்கும் மேற்பட்டோர் வருகை தந்திருந்தனர்.

கல்லூரி வளாகம் வாகனங்களால் நிரம்பி, சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட, 6:00 மணிக்கு வர திட்டமிட்டவர்கள் 6:30 மணியை தாண்டிதான் அரங்கிற்கு வர நேர்ந்தது.

நிகழ்ச்சியின் தொடக்கமாக சகோதரர் தாரிஸ் அவர்கள் திருக்குர்ஆன் வசனத்தை மிகுந்த ராகத்துடன் ஓத, அரங்கமே. அங்கு வந்திருந்த சகோதர சமுதாய மக்கள் அதை மொழி புரியாவிட்டாலும், மிகுந்த மரியாதையுடன் ரசித்ததை பார்க்க முடிந்தது.

அடுத்து பிரபல பாடகர் தேரிழந்தூர்.தாஜுதீன் அவர்கள் ‘இறைவனிடம் கையேந்துங்கள்’ என்ற பாடலை பாட, அரங்கமே உருகியது.

1/2 மணி நேர நிகழ்ச்சி என்பதால் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். கோபால் மற்றும் MLAக்கள் பேசுவதை தவிர்த்துக் கொண்டனர்.

பிறகு புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர் அவர்கள் சில நிமிடங்களில் தனது வாழ்த்துரையை வழங்கினார். அவரும், நாகை மாவட்ட புதிய S.P.யும் மாவட்டத்தில் கலந்துக் கொள்ளும் முதல் பொது நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

பிறகு அமைச்சர் O.S.மணியன் அவர்கள் நோன்பு குறித்தும், மத நல்லிணக்கம் குறித்தும் சிறப்பாக பேசினார்.

தொடர்ந்து பேசியவர், தனக்கும் தமிமுன் அன்சாரி அவர்களுக்கும் உள்ள புரிதலை கூறினார். நாங்கள் பழகியது குறுகிய காலம் தான் என்றவர்,  உண்மையை அவர் எந்த இடத்திலும் துணிச்சலுடன் பேசக் கூடியவர் என்றார் . நானும் ,அவரும் சட்டமன்றத்தில் எதிர் , எதிரே அமர்ந்து வாயால் பேச முடியாததை , சைகையால் பேசிக் கொள்வோம் என்றார் .

எந்த இடத்திலும் மறைந்த முன்னாள் முதல்வர் அம்மா அவர்களை சந்தித்து , கடிதங்களை கொடுத்து பேசுவார் . அம்மாவின் நெஞ்சங்களில் நிறைந்தவராக இருந்தார் . அவர் சட்டசபையில் பேசி முடிந்ததும் அம்மா அவர்கள் மேஜையை தட்டி , அவரது பேச்சை அங்கீகரிப்பார் என்றார் .

நிறைவாக பேசிய மஜக பொதுச் செயலாளரும் , நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி அவர்கள் , இது ஒரு அரசியல் சார்பற்ற நல்லிணக்க நிகழ்ச்சி என்றார் . தான் இத் தொகுதியில் உள்ள அனைவருக்கும் MLA என்றும் , அதனால் தான் அனைத்து கட்சிக்கும் அழைப்பிதழ் கொடுத்து, அனைவரும் வந்துள்ளார்கள் என்றார்.

இந்த புனித ரமலானில் நோன்பு துறக்கும் போது பயங்கரவாதத்திற்கு எதிராகவும், மதவெறி – சாதிவெறிக்கு எதிராகவும் பிரார்த்திக்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொண்டார்.

நிறைவாக 6 : 35க்கு அனைவரும் நோன்பு துறப்புக்கு தயாராகினர். தனது அழகிய குரலில் தேரிழந்தூர் தாஜூதீன் அவர்கள் பாங்கு ஒலித்தார்.

அனைவருக்கும் கஞ்சி , பேரித்தம் பழம், வாழைப்பழம், குளிர்பானம்,மினரல் வாட்டர், பிரியாணி ஆகியவை வழங்கப்பட்டது.

300க்கும் மேற்பட்ட மஜக இளைஞர் அணியினர் ஓடி , ஓடி அனைவரையும் உபசரித்தனர்.

வியாபாரிகள், விவசாயிகள், மீனவர்கள், ஆட்டோ சங்கங்கள், டாக்டர்கள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள் என சகல தரப்பினரையும் அரங்கில் பார்க்க முடிந்தது.

மிகுந்த நல்லிணக்கத்தையும், புரிதலையும் ஏற்படுத்திய நிகழ்வில் EGS பிள்ளை கல்லூரி செயலாளர் பரமேஸ்வரன், ஆரிஃபா குழுமத் தலைவர் M.சுல்தானுல் ஆரிபீன், மலேசியா சுபைதா குழுமங்கள் தலைவர் டத்தோ.அஜீஸ், ரஹ்மத் அறக்கட்டளையை சேர்ந்த சிங்கை.யாசின்,  முத்துப்பேட்டை தர்ஹா தலைவர் பாக்கர், கோயில் அறங்காவலர் சுப்பையன், ரோட்டரி, லயன்ஸ் உள்ளிட்ட சங்கங்களை சேர்ந்தவர்கள் வந்திருந்தனர்.

மஜக தலைவர்கள் மெளலா. நாசர், மைதீன் உலவி, மதுக்கூர். ராவுத்தர்ஷா, நாச்சிக்குளம் தாஜுதீன் ஆகியோர் வந்திருந்து சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியை மாநில துணைச் செயலாளர் தோப்புத்துறை ஷேக் அப்துல்லாஹ், மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை. முபாரக், மாவட்ட நிர்வாகிகள் ரியாசுதீன், பரக்கத் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா உட்பட அனைவரும் சிறப்பாக வடிவமைத்தனர்..

தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் கோட்டை. ஹாரிஸ் தலைமையிலான குழுவினர் நிகழ்ச்சிகளை பதிவு செய்தனர். பலர் முகநூல் வழியாக நேரலையாகவும் ஒளிபரப்பினர்.

பலரும் அதை பார்த்துவிட்டு நிகழ்ச்சி, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள Trade Centre-ல் நடந்தது போல இருந்ததாக கூறினர்.

நிகழ்ச்சி நிறைவுற்றதும் ‘மஹ்ரிப்’ தொழுகை கூடைப்பந்து திடலில் ஏற்பாடு செய்யப்பட்டு, பல அணிகளாக தொழுகை நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு வந்திருந்த சிறப்பு அழைப்பாளர்களுக்கு ‘நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாறு’ அடங்கிய புத்தகம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது .

கடைசியாக இதற்காக உழைத்த அனைத்து ஊழியர்களையும் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் தனித்தனியாக அழைத்துப் பாராட்டினார்.

தகவல்;

நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
11.06.2017