நாடாளுமன்ற தேர்தல் நிலைபாடு… முடிவெடுக்கும் அதிகாரத்தை தலைமைக்கு வழங்கி… மஜக தலைமை பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்…..

பிப்ரவரி.28.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை பொதுக்குழு கூட்டம் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் தலைமையில் மயிலாடுதுறை – AJK மஹாலில் 28.02.2024 அன்று நடைபெற்றது.

இதில் பொதுச்செயலாளர் மௌலா.நாசர் அவர்களால் வாசிக்கப்பட்டு, பொதுக்குழு உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-

01. எழுச்சி பயணம் தொடரும் :

மனிதநேய ஜனநாயக கட்சி 8-ஆண்டுகளை கடந்து 9-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்நாளில் இப்பொதுக்குழு நடைபெறுகிறது.

சோதனைகளை எல்லாம் சாதனைகளாக்கி, வீழ்ச்சிகளை எல்லாம் எழுச்சிகளாக்கி, அதிகார மையங்களை நோக்கிய நமது வெற்றி பயணம் தொடரும் என்று இப்பொதுக்குழு சூளுரைக்கிறது.

2. நாடாளுமன்ற தேர்தல் நிலைபாடு :

எதிர்வரும் 2024- நாடாளுமன்ற தேர்தலில், கட்சி எத்தகைய நிலைபாடு எடுக்க வேண்டும் என்பதை தீர்மானித்திடும் அதிகாரத்தை இப்பொதுக்குழு தலைமை நிர்வாகக் குழுவுக்கு வழங்குவது என ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது.

எனவே, தலைமை நிர்வாகக் குழு அரசியல் சூழலை கவனத்தில் கொண்டு உரிய முடிவை எடுக்குமாறு இப்பொதுக்குழு அறிவுறுத்துகிறது.

03. EVM வேண்டாம்:

வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலமாக இந்தியாவில் நடைபெறும் தேர்தல்கள் மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

எனவே, வாக்கு பதிவு இயந்திரத்துடன் ஒப்புகை சீட்டு வழங்கும் முறை ஏற்படுத்தப்பட்டு அதை வாக்காளர்கள் சரிபார்த்திடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

தேர்தல் முடிவானது அந்த ஒப்புகைச் சீட்டுகளை எண்ணுவதன் அடிப்படையில் அறிவிக்கப்பட வேண்டும் என இப்பொதுக்குழு இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறது.

04. தேர்தல் ஆணையம் நியமன சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் :

தேர்தல் ஆணையர் நியமனம் சட்டம் தவறானது என இப்பொதுக் குழு கருதுகிறது.

தலைமை தேர்தல் ஆணையரை இந்திய பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், தலைமை நீதிபதி ஆகியோர் கொண்ட குழுவே தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பே சரியானதாகும்.

ஆனால், இதில் உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு மாற்றாக பிரதமரால் நியமிக்கப்படும் அமைச்சர் அதில் இடம்பெறுவார் என ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள புதிய சட்டம் ஆளுங்கட்சி அரசியலுக்கே வலுச்சேர்க்கும் வகையில் உள்ளது.

எனவே, இச்சட்டத்தை திரும்பப் பெற்று உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தலைமை தேர்தல் ஆணையரை நியமிக்க வேண்டும் என இப்பொதுக்குழு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.

05. தொகுதி சீரமைப்பில் நீதி தேவை :

2026-ஆம் ஆண்டோடு இப்போதுள்ள நாடாளுமன்ற தொகுதி அமைப்பு முறைகள் முடிவுக்கு வருவதாகவும் அதன் பிறகு மக்கள் தொகை அடிப்படையில் உருவாக்கப்படும் தொகுதி முறையில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் வெகுவாக பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.

மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்காக தென் மாநிலங்களுக்கு கிடைத்த தண்டனையா? இது என்ற கேள்வி எழுந்துள்ளது.

எனவே, தொகுதி மறு சீரமைப்பிலும், கூடுதலாக உயர்த்தப்படும் எண்ணிக்கையிலும் எந்த ஒரு மாநிலமும் பாதிக்கப்படாமல் முடிவெடுக்க வேண்டும் என ஒன்றிய அரசையும், இந்திய தேர்தல் ஆணையத்தையும் இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

06. நீதி அமைப்புகளில் சமூக நீதி தேவை:

உயர் நீதிமன்ற நீதிபதி நியமனங்களில் சமூகநீதியை பாதுகாக்க கூடிய ஒரு புதிய அணுகுமுறை தேவை என்று இப்பொதுக்குழு கருதுகின்றது.

அதை செயல்படுத்துவதற்கு முன்னோட்டமாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் முதலான நீதி நிர்வாக அதிகாரத்தை ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும்.

அதற்கேற்ப அரசியல் அமைப்பு சட்ட பிரிவுகள் 217, 222, 223, 224, 224A ஆகியவற்றில் திருத்தம் செய்ய வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

07. மதவெறி-வன்முறை தடுப்புச் சட்டத்தை நிறைவேற்றுக :

சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் திட்டமிட்டு தூண்டப்படும் வெறுப்பு பரப்புரைகளையும், மதவெறி குற்றங்களையும் தடுத்திட நமது நாட்டிற்கு சிறப்பு சட்டம் தேவைப்படுகிறது.

திட்டமிட்டு தூண்டப்படும் “மதவெறி மற்றும் வகுப்புவாத வன்முறை” தடுப்பு சட்டத்தை இயற்றுமாறு ஒன்றிய அரசை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

https://bit.ly/3TgFQUu

08. இஸ்ரேலுக்கு கண்டனம்:

கடந்த அக்.07, 2023 முதல் பாலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் பயங்கரவாத தாக்குதலில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட சுமார் 30 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். சுமார் 70 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்திருக்கின்றனர்.

இதுகுறித்து ஐ.நாவின் சர்வதேச நீதிமன்றம் கடும் கண்டனத்தைத் தெரிவித்து இருக்கின்றது.

சர்வதேச சமூகத்தின் வேண்டுகோளை ஏற்று காஸா மீதான பயங்கரவாத தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இஸ்ரேலை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

மேலும், லெபனான் மற்றும் சிரியாவின் மீதும் தாக்குதலை நடத்திப் போரை விரிவுபடுத்தும் இஸ்ரேலின் போர் வெறியை இப்பொதுக்குழு கண்டிக்கிறது.

9. ரஷ்யா – உக்ரைனில் அமைதி தேவை:

ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் கடந்த ஈராண்டுகளாக நடைபெற்று வரும் தொடர் போர் நிறுத்தப்பட வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

மேலும், அங்கு நிரந்தர அமைதி ஏற்படுத்தவும், நேட்டோ கூட்டுப்படையை கலைக்கவும் ஐக்கிய நாடுகள் சபை உரிய நடவடிக்கைகளை அமைதி பேச்சுவார்த்தை மூலம் முன்னெடுக்க வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

10. மணிப்பூரில் அமைதி ஏற்படுத்த வேண்டும்:

கடந்த பல மாதங்களுக்கு மேலாக மணிப்பூரில் ஏற்பட்டு வரும் ஓயாத கலவரங்கள் ஆழ்ந்த வேதனையைத் தருகிறது.

அம்மாநிலத்தை ஆளும் பாஜக அரசே இக்கலவரங்களுக்கு காரணம் என்று இப்பொதுக்குழு குற்றம் சாட்டுகிறது.

மேலும், அங்கு அமைதியை நிலைநாட்ட உச்சநீதிமன்றம் நேரடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

11. பாலாறு உரிமை :

பாலாறு கர்நாடகத்தில் 93 கிலோ மீட்டரும், ஆந்திராவில் 33 கிலோ மீட்டரும், தமிழ்நாட்டில் 222 கிலோ மீட்டரும் பயணித்து இயற்கை சேவையை செய்து வருகிறது.

இந்நிலையில் ஆந்திர அரசு குப்பம் தொகுதியில் பாலாற்றின் குறுக்கே 22 ஆவது தடுப்பனையை கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது.

இதற்கு உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தடையாணைப் பெற வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

12. டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு :

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வமான உத்தரவாதம், சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துதல், விவசாயக் கடன் தள்ளுபடி, உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து வேளாண் துறையை நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உ.பி, பஞ்சாப், ஹரியாணா மற்றும் டெல்லி எல்லைகளில் போராட்டங்களை நடத்தி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை இப்பொதுக்குழு ஆதரிக்கிறது.

நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய விவசாயிகள் மீது நடத்தப்படும் தாக்குதல் மற்றும் அரச வன்முறைகளை இப்பொதுக் குழு கண்டிக்கிறது.

13. தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை :

கடந்த 24.12.2022 சென்னையில் நடந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்ட தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களை அங்கீகரித்திட வேண்டுமென தலைமை தேர்தல் ஆணையத்தை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

14. நீக்குதல் நடவடிக்கை:

கடந்த 07.02.2023 அன்று தஞ்சாவூர் மாவட்டம் வல்லத்தில் நடைபெற்ற தலைமை செயற்குழுவின் பரிந்துரையை ஏற்று, முன்னாள் பொருளாளர் S.S. ஹாரூண் ரஷீது, முன்னாள் தலைவர் T.K. பஷீர் அகமது ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

கடந்த 28.02.2024 அன்று தஞ்சாவூரில் நடைபெற்ற அவசர பொதுக்குழுவிலும் இந்த நடவடிக்கையை அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஒரு வருடத்திற்கும் மேலாக தொடர்ந்து அவர்கள் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் காரணத்தினால் அவர்கள் இருவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுவதாக இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.

15. தலைமை நிர்வாகிகளுக்கு அங்கீகாரம்:

மனிதநேய ஜனநாயக கட்சியின் கீழ்கண்ட இதர தலைமை நிர்வாகிகளை இப்பொதுக்குழு அங்கீகரிக்கிறது.

அவை பின்வருமாறு:-

பொதுச் செயலாளர்
மெளலா. முகம்மது நாசர்

பொருளாளர் :
J.S.ரிஃபாயி

துணைத் தலைவர் :
மன்னை. செல்லச்சாமி

இணைப் பொதுச் செயலாளர் :
செய்யது முகம்மது பாரூக்

துணைப் பொதுச் செயலாளர் :
நாச்சிக்குளம். தாஜ்தீன்

மாநிலச் செயலாளர்கள்:

A .ஷஃபி
N. செய்யது முபாரக்
அகமது கபீர்
M.H.ஜாபர் அலி
N. இப்ராகிம்
A. பாபு ஷாகின்ஷா

மேற்கண்ட 15 தீர்மானங்களுடன் பொதுக்குழு நிறைவுற்றது.

இதில் மாநில துணைச் செயலாளர்கள், மாநில அணிகளின் செயலாளர்கள் ஆகியோரும், மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர செயலாளர்கள் உட்பட பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

தகவல் :
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தலைமையகம்
28.02.2024