முதல் கட்டமாக 12 பேர் விடுதலை! இது மக்களுக்கு கிடைத்த வெற்றி! பிப்ரவரி 10 திருச்சி சிறை முற்றுகை போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு! மஜக சிறப்பு நிர்வாகக் குழுவில் முடிவு

பிப்ரவரி.05.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாகக் குழுவின் அவசர கூட்டம் தலைவர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் காணொளி வழியே இரவு 10 மணிக்கு நடைபெற்றது.

இதில் பிப்ரவரி 10 அன்று நடைபெறவிருந்த திருச்சி மத்திய சிறை முற்றுகை போராட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.

இன்று மாலை குறிப்பிட்ட 36 சிறைவாசிகளில் 5 பேரை ஆளுனர் கையொப்பமிட்டு விடுதலை செய்தது குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் 7 பேர் உள்ளிட்ட மொத்தம் 12 பேர் விடுதலை ஆன நிகழ்வு குறித்து சட்ட நிபுணர்களிடமும் கருத்து கேட்கப்பட்டது

தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு பரிந்துரைத்த சிறைவாசிகளில் ஐந்து பேரை முதல் கட்டமாக ஆளுனர் விடுதலை செய்திருப்பதை ஒரு நல்ல முன்னேற்றம் என்றே இக்கூட்டத்தில் வரவேற்கப்பட்டது.

அடுத்தடுத்த பலரும் வெளி வரும் வாய்ப்புகள் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுவதால், பிப்ரவரி 10 அன்று மஜக சார்பில் அறிவிக்கப்பட்ட திருச்சி மத்திய சிறை முற்றுகை போராட்டத்தை தற்காலிமாக ஒத்திவைப்பது என இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

கடந்த இரண்டு வாரங்களாக தமிழ்நாடு எங்கும் மஜக நிர்வாகிகள் இரவு பகலாக இதற்காக உழைத்து வந்த நிலையில்; பல்லாயிரக்கணக்கான மக்களை தயார் படுத்திய சூழலில்; பிடிவாதத்திற்கு முன்னுரிமை கொடுக்காமல் சம கால நிகழ்வுகளை கருத்தில் கொண்டு மக்கள் நலனை முன்னிறுத்தி இம்முடிவை மேற்கொள்வதாக தீர்மானிக்கப்பட்டது.

இது குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு…

கடந்த 08.01. 2022 கோவை சிறை முற்றுகை தொடங்கி, கடந்த 11.10. 2023 அன்று நடைபெற்ற சட்டசபை முற்றுகை வரை சென்னை, நெல்லை, கடலூர், சேலம் என தமிழ்நாடு எங்கும் 6 மக்கள் திரள் போராட்டங்களை மஜக சமரசமின்றி சிறைவாசிகளின் விடுதலைக்காக முன்னெடுத்தது.

உச்சக்கட்டமாக ஆளும் கூட்டணி , எதிர்கட்சி கூட்டணி என சட்டமன்றத்தில் இயங்கும் அனைத்து கட்சி தலைவர்களையும் ஒருங்கிணைத்து மஜக வின் முன்முயற்சியில் சட்டமன்றத்தில் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானமே இக்கோரிக்கையை மக்கள் மயப்படுத்தியது.

இது சிறைவாசிகளின் விடுதலைக்காக மஜக முன்னெடுத்த நுட்பமான ராஜதந்திர நடவடிக்கையாகும்.

இவ்விஷயத்தில் செயல்படாத நிலையில் இருந்த தமிழக அரசை மஜக செயல்பட வைத்தது.

அதன் விளைவாகவே ஆதிநாதன் ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைத்தது என்பதை அனைவரும் அறிவர்.

தமிழ்நாடு அரசை இவ்விஷயத்தில் செயலாற்ற வைத்த மஜக வின் பணிகள் வரலாற்றில் சுடர் விடும் என்பதில் ஐயமில்லை.

இவ்விஷயத்தில் மஜக வை போலவே களத்தில் போராடிய அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் கிடைத்த வெற்றியாக இதை கருதுகிறோம்.

இக்களத்தில் துணை நின்ற தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள், அதிகாரிகள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

எங்களை போன்ற ஜனநாயக சக்திகளின் கோரிக்கையை கவனம் எடுத்த தமிழ்நாடு அரசுக்கும், அதை பரிசீலித்த தமிழ்நாடு ஆளுனருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

எஞ்சிய 31 பேர் உட்பட 20 ஆண்டுகளை கடந்த அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் சாதி, மத, வழக்கு வேறுபாடின்றி முழுமையாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கிறோம்.

ஒரு நீதி மிக்க போராட்டத்தில் சமசரமின்றி -நேர்மையாக செயலாற்றிய மனதிருப்தி எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

மேலும் இதனை களத்தில் நின்று போராடிய மக்களுக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறோம்.

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் பிப் 10 – திருச்சி சிறைச்சாலை முற்றுகை போராட்ட பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு செயலாற்றிய மஜக வினருக்கு பாராட்டு தெரிவித்த நிலையில், இதற்கான ஏற்பாடுகளுக்கு பெறப்பட்ட நன்கொடைகளை செலவு போக மீதியை சம்மந்தப்பட்டவர்களுக்கு நன்றியுடன் திருப்பி அளிக்குமாறும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்றைய கூட்டத்தில் பொதுச் செயலாளர் மெளலா நாசர், பொருளாளர் J.S.ரிபாயி, துணைத்தலைவர் மன்னை செல்லச்சாமி, இணைப் பொதுச் செயலாளர் செய்ய து முகம்மது ஃபாரூக்,துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்தீன் மற்றும் மாநிலச் செயலாளர்கள் உள்ளிட்ட தலைமை நிர்வாகிகளும், மாநில துணைச் செயலாளர்களும், மாநில அணி நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தலைமையகம்
05.02.2024.