மணிப்பூரில் கடந்த ஏழு வாரங்களுக்கு மேலாக கலவரம் நடைபெற்று வருகிறது.
இதில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக தெரிய வந்தாலும், அதன் எண்ணிக்கை தாண்டும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் அங்கு அமைதியை நிலைநாட்ட தவறிய ஒன்றிய- மாநில பாஜக அரசுகளை கண்டித்து நேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் சென்னை- எழும்பூரில் ரயில் மறியல் போராட்டம் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் நடைபெற்றது.
ரயில் நிலையத்திற்குள் நுழைய விடாமல், அதை சுற்றிலும் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு, 30-க்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்தது.
அதையும் கடந்து தடுப்பு இரும்பு வேலிகளும் அமைக்கப்பட்டு போராட்டக்காரர்கள் முன்னேற விடாமல் கைது செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
துணை கமிஷனர் நேரில் வந்து ரயில் நிலையத்திற்குள் போராட்டக்காரர்கள் புக முடியாத அளவுக்கு காவல்துறையை இயக்கி கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
போராட்டத்தின் போது மணிப்பூரில் நடைபெறும் கலவரங்களையும்- மனித உரிமை மீறல்களையும் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பத்திரிகையாளர்களிடம் கூறினார்.
பிறகு காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கோபண்ணா அவர்கள் அங்கு ஒன்றிய அரசு உடனடியாக அனைத்து கட்சி குழு ஒன்றை அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதைத்தொடர்ந்து பேசிய மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா அவர்கள், அனைத்துக் கட்சிக் குழுவுடன் செஞ்சிலுவை சங்கத்தையும் சேர்த்து அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதே கருத்தை தமிழ் தேசிய பேரியக்க பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் அவர்களும் வலியுறுத்தினார்.
பிறகு போராட்டக்காரர்களை (பெண்கள் தவிர்த்து மற்றவர்களை) போலீசார் கைது செய்து மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பலர் கைதாகாமல் போராட்டத்தில் மட்டும் பங்கேற்று ஆதரவு கொடுத்து விட்டு புறப்பட்டனர்.
கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த மண்டபத்தில் அனைவரும் கையெழுத்திட்ட பிறகு உரையரங்கு மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது.
அதில் பேசிய சமூக செயல்பாட்டாளர் பேராசிரியர் குழந்தை அவர்கள், மணிப்பூரில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 500- ஐ கடந்ததாக குறிப்பிட்டார்.
மக்கள் கண்காணிப்பகத்தின் சார்பில் வந்திருந்த ராஜன் அவர்கள், இதை யாராவது முன்னெடுத்து செல்ல மாட்டார்களா? என எதிர்பார்த்து இருந்ததையும், அதை மஜக செய்திருப்பதாகவும் கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு மாநில துணை செயலாளர் ஸ்டீபன் பேசும்போது, தங்கள் கட்சி இதை செய்திருக்க வேண்டும் என்று ஆதங்கமாக கூறினார்.
விடுதலை தமிழ் புலிகள் தலைவர் குடந்தை அரசன் பேசும்போது, மணிப்பூரில் ஆட்சி செய்யும் பாஜக அரசே முன்னின்று இக்கலவரத்தை ஊக்குவிப்பதாகவும், அங்கு கலவரத்தில் ஈடுபடும் ஒரு குழுவினருக்கு ஆயுத உதவி பாஜக அரசு செய்திருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா பேசும்போது மணிப்பூருக்கு செல்ல, மணிப்பூருக்கு வெளியே வசிக்கும் இந்தியர்கள் செல்ல வேண்டும் எனில், 100 ரூபாய் பணம் செலுத்தி “இன்னர் பர்மிட்” வாங்க வேண்டும் என்ற உண்மையை போட்டு உடைத்து அங்கு சென்று வந்த தனது அனுபவத்தையும் கூறினார்.
திராவிடர் விடுதலைக் கழக தலைமை நிலைய செயலாளர் தவசி குமரன் பேசும் போது, இது போன்ற போராட்டங்கள் நடத்தி கைதாகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது என்றும், அந்தக் குறையை இன்று மஜக தீர்த்து வைத்திருப்பதாக கூறினார்.
தமிழ் தேசிய பேரியக்க பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் அவர்களும், தமிழ் தேசிய விடுதலை இயக்க பொதுச்செயலாளர் தோழர். தியாகு அவர்களும் மணிப்பூரின் வரலாற்றையும், அதன் உண்மையான பின்னணிகளையும் தெளிவாக விவரித்து வகுப்பெடுத்தனர்.
காவல்துறை 7 மணிக்கே அனைவரையும் விடுதலை செய்து, எல்லோரையும் போக சொன்னது.
ஆனால் உள்ளரங்கம் ஒரு அரசியல் வகுப்பாக மாறியதால், போராட்டக்காரர்கள், 8-மணிக்கு நாங்கள் விடுதலையாகி கொள்கிறோம் என்றதும், காவல்துறையினர் திகைத்தனர்.
மஜக-வின் இப்போராட்டம் தமிழகத்தின் உணர்வுகளை வெளிப்படுத்தி எழுச்சியாக அமைந்தது எனில், மறுபுறம் கைதான பிறகு நடந்த உரையரங்கு அரசியல் விரிவரங்கமாக மாறியதும் பலரது பாராட்டை பெற்றது.
இதில் CPI சார்பில் மாவட்ட செயலாளர் கருணாநிதி அவர்களும், தவாக சார்பில் துணைப்பொதுச்செயலாளர் வேணுகோபால் அவர்களும் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் மஜக மாநில செயலாளர் பல்லாவரம் ஷஃபி, மாநிலத் துணைச் செயலாளர் அசாருதீன், நெய்வேலி இப்ராஹிம், பாபு ஷாஹின்ஷா, பேராவூரணி சலாம், மாணவர் இந்தியா மாநிலத் தலைவர் பஷீர் அகமது, தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் தாம்பரம் தாரிக், மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் அப்துல் ரஹ்மான், இளைஞர் அணி மாநில பொருளாளர் புதுமடம் பைசல், MJTS மாநில பொருளாளர் கனி, MJTS மாநிலத் துணைச் செயலாளர் மாத்தூர் இப்ராஹிம், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் பிஸ்மில்லாஹ் கான், வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் S.M.நாசர், செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் ஜாகிர், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் அக்பர் உசேன் மேலும் ரவூப் ரஹிம், பஷீர் அஹமது, ஜாபர், ஹாஜா மைதின், நிஜாம், மீஞ்சூர் கமால், அன்சர், அப்ரார் உள்ளிட்ட சென்னை மண்டலத்திற்குட்பட்ட மாவட்ட, பகுதி, கிளை நிர்வாகிகள், தொண்டர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.