பாராளுமன்றத் தேர்தல்! எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்…! மஜக தலைமை செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்…!

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழு கூட்டம் இன்று தஞ்சாவூரில் – கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா நாசர் தலைமையில் நடைபெற்றது.

இதில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி உள்ளிட்ட தலைமை நிர்வாகிகளும், மாநில துணை செயலாளர்கள், அணிகளின் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

இச்செயற்குழுவில் கட்சியின் வளர்ச்சியையும், வலிமையையும் முன்னிறுத்தி விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டது.

பிறகு கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது…

1)
தமிழக சிறைகளில் 20 ஆண்டுகளைக் கடந்து வாடும் நீண்டகால ஆயுள் சிறைவாசிகளை, பொது மன்னிப்பின் கீழ் தமிழக அரசு சாதி, மத, வழக்கு பேதமின்றி விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

2)
நீதியரசர் சச்சார் கமிட்டியின் பரிந்துரைகளை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்றும், சமவாய்ப்பு ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் இச்செயற்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

3)
டெல்டா மாவட்டங்களில் பிப்ரவரியில் பருவம் தப்பி பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களுக்கு ஹெக்டருக்கு 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கிய தமிழக முதல்வர் தளபதி திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இச்செயற்குழு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. அதே நேரம் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று இழப்பீட்டை அதிகப்படுத்தி தரவேண்டும் என்றும் இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

4)
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிடக்கூடிய திரு EVKS.இளங்கோவன் அவர்களின் வெற்றிக்கு உறுதியாக பாடுபடுவது என்றும் இச்செயற்குழு தீர்மானிக்கிறது.

5)
தாலிக்கு தங்கம் என்ற திட்டத்தை மீண்டும் செயல்படுத்திட வேண்டும் என்று பெண்கள் தரப்பில் எழும் கோரிக்கையை தமிழக அரசு கவனத்தில் கொண்டு, அதை பரிசீலிக்க வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

6)
அதானி நிறுவனத்தின் மோசடிகள் குறித்து விவாதிக்க, ஒன்றிய அரசு ஒரு உயர்மட்ட விசாரணை குழுவை அமைக்க வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

7)
தஞ்சாவூரில் உள்நாட்டு பயணிகள் பயனடையும் வகையில் புதிய விமான நிலையம் ஒன்றை ஒன்றிய அரசு அமைக்க வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

8)
கட்சியின் சார்பில் மண்டல வாரியாக அரசியல் பயிலரங்குகளை நடத்துவது என்றும், நிர்வாகிகளை அரசியல் மயப்படுத்தும் முயற்சிகளை தீவிரப்படுத்துவது என்றும் செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

9)
நிலக்கரி எடுப்புக்காக, 25 ஆயிரம் ஏக்கர் விலை நிலங்களை கையகப்படுத்தும் முயற்சிகளை நெய்வேலி அனல் மின் நிலையம் கைவிட வேண்டும் என இச்செயர்ப்பு கேட்டுக்கொள்கிறது.

10)
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மக்களுக்கு இச்செயற்குழு அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறது.

11)
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் , தேசத்தின் எதிர்கால நலன் கருதி காங்கிரஸ் தலைமையில் எதிர்கட்சிகள் ஒரணியில் திரள வேண்டும் என இச்செயற்குழு ஜனநாயக சக்திகளை கேட்டுக்கொள்கிறது.

12)
கட்சியின் எதிர்கால செயல்திட்டங்களை வரையறுக்க, இரண்டு நாள் சிறப்பு நிர்வாகக்குழு கூட்டத்தை நடத்துவது என்றும் இச்செயற்குழு தீர்மானிக்கிறது.

மேற்கண்ட தீர்மானங்களுடன், புதிய எழுச்சி பொங்க செயற்குழு நிறைவுற்றது.