மயிலாடுதுறை அருகே தேரிழந்தூரில் பத்திரிக்கையாளர்களை மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது…
எதிர்வரும் ஜூன் 23 அன்று பீஹார் தலைநகர் பாட்னாவில் பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் அவர்கள் எதிர்கட்சிகளை ஒரணியில் திரட்டி ஆலோசனை செய்வதை பாராட்டுகிறோம். வரவேற்கிறோம்.
நாட்டின் ஜனநாயகம், அரசியல் அமைப்பு சட்டம், பன்முகத்தன்மை ஆகியவற்றை பாதுகாக்க எதிர்வரும் தேர்தலில் ஆட்சிமாற்றம் ஏற்படுவது அவசியமாகும்.
பேதங்களை கைவிட்டு காங்கிரஸ் தலைமையில் எதிர்கட்சிகள் ஒரணியில் திரளும்போது, இதை புரிந்துக்கொண்டு அதற்கேற்ப காங்கிரஸ் கட்சியும் செயல்பட வேண்டும்.
குறிப்பாக மாநில கட்சிகளுக்கு அவர்களுக்குள்ள பலத்தை புரிந்துக்கொண்டு அவர்களுக்குரிய அரசியல் மரியாதையை தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அடுத்து பத்திரிக்கையாளர்கள், நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை குறித்து கேட்டனர்.
அதற்கு பதிலளித்தவர், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அதை எதிர்க்க முடியாது என்றவர், விஜய் தனது சித்தாந்தத்தை தெளிவுப்படுத்தி, ரசிகர்களை அரசியல் படுத்த வேண்டும் என்றார்.
பெரியார், அம்பேத்கார், காமராஜர் ஆகியோரை படிக்க வேண்டும் என்று விஜய் கூறியதை வரவேற்பதாகவும் கூறினார்.
பிரதமர் மோடி உள்நாட்டில் பற்றியெறியும் மணிப்பூருக்கு செல்லாமல், அமெரிக்காவுக்கு செல்வதை குறை கூறியவர், உடனடியாக மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
இச்சந்திப்பின்போது மஜக மாநில செயலாளர் நாகை முபாரக், தலைமை செயற்குழு உறுப்பினர் மாலிக், மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் சலீம் உள்ளிட்ட மஜக-வினரும் உடனிருந்தனர்.