You are here

புதுமடம் கல்வி நிகழ்ச்சி…

ராமநாதபுரம் மாவட்டம் புதுமடத்தில் புதுமடம் ஐக்கிய சபை சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டல் பயிற்சி முகாம் நடைபெற்றது.

இதில் பங்கேற்று மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பேசியதாவது…

இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த புதுமடம் ஐக்கிய சபையை பாராட்டுகிறேன்.

ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என மூன்று தரப்பினரும் பங்கேற்று இருப்பது பொருத்தமானதாக இருக்கிறது.

கல்வி கற்றல் என்பது மூன்று தரப்பும் இணைந்த ஒரு துறை என்பதே உண்மை.

கல்வி என்பது அறிவை உயர்த்தி, தனி நபர்களை மேம்படுத்துவது மட்டுமல்ல… அது ஒரு குடும்பத்தை – சமூகத்தை தூக்கி நிறுத்த கூடியது.

கல்வியில் சுயநலம் மட்டுமல்ல…. பொதுநலமும் இருக்க வேண்டும்.

இன்றைய மாணவர்களிடம் எதற்காக படிக்கிறாய்? எனக் கேட்டால், பணம் சம்பாதிக்க என்றும் வீடு- வாசல் வாங்க வேண்டும் என்றும், வெளிநாடுகளில் சென்று வாழ வேண்டும் என்றும் பதில் தருகிறார்கள்.

அந்த எண்ணம் மாற்றப்பட வேண்டும்.

நாம் கற்கும் கல்வி என்பது நேர்மை, சேவை, பொது முன்னேற்றம் என்ற அனைத்தையும் சார்ந்ததாக இருக்க வேண்டும்.

நமது கல்வி என்பது நாம் படித்த பள்ளி, குடும்பம், ஊர் ஆகியவற்றுக்கும் பெருமை சேர்ப்பதாக இருக்க வேண்டும்.

நல்ல கல்வி என்பது ஒழுக்கத்துடன் கூடியதாக இருக்க வேண்டும்.

அமெரிக்காவில் இதை விட தரமான கல்வி தரப்படுகிறது ஆனால் அங்கு ஏன் வகுப்பறையில் துப்பாக்கிச் சூடு நடக்கிறது? ஏன் சொல்ல முடியாத விபரீதங்கள் நடக்கின்றன.?

அங்கு கல்வியுடன் பண்புகள் ஒழுக்கங்களும் சொல்லித் தரப்படுவதில்லை. அதுதான் காரணம்.

எனவே நமது பிள்ளைகளுக்கு வாழ்வின் அர்த்தங்களையும், பொது நலனையும் சொல்லிக் கொடுத்து பழக்க வேண்டும்.

தேர்வில் சக மாணவனின் பேனா மை தீர்ந்து எழுதவில்லை எனில் தன்னிடமுள்ள இன்னொரு பேனாவை கொடுத்து உதவ வேண்டுமென சொல்லி கொடுங்கள்.

தனது சக மாணவன்- மாணவி வறுமையின் காரணமாக தேர்வு கட்டணம் கட்டவில்லை எனில், எல்லோரும் சேர்ந்து அவருக்கு உதவ வேண்டுமென சொல்லிக் கொடுங்கள்.

புத்தகங்களுக்கு வெளியையும் வாழ்க்கை உள்ளது என புரிய வையுங்கள்.

90% மதிப்பெண்கள் எடுப்பவர்கள் மட்டுமே அறிவாளி என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை

காரணம் மதிப்பெண்கள் மட்டுமே அறிவை தீர்மானிப்பது இல்லை.

சராசரி மதிப்பெண்களை எடுத்தவர்கள்தான் பெரும்பாலும் வாழ்வின் உயரங்களை எட்டி சாதிப்பவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் மறந்து விடக்கூடாது.

இனி எதிர்காலத்தில் பாட புத்தகங்களுக்கு மரியாதை குறைந்து ஸ்மார்ட்போன்கள் (smart phone) போதுமானது என்ற நிலை வரும். அதிலேயே எல்லாம் வந்து விடும்.

இப்போது கொரோனாவுக்கு பின்பு ஆன்லைன் (online) கல்வி அறிமுகமாகியுள்ளது.

எதிர்காலத்தில் நம் பேரன்- பேத்தி காலத்தில் வகுப்பறைக்கு வராமல் படிக்கும் சூழலும் உருவாகலாம்.

எனவே காலத்திற்கு ஏற்ப நம்மை புதுப்பித்து கொள்ள வேண்டும்.

B’com, computer science, MBA என்ற படிப்புகளை மட்டுமே பெரும்பாலான பலர் தேடுகிறார்கள்.

சட்டம், அரசியல், அறிவியல், வரலாறு என இதர படிப்புகளையும் நோக்கி சிந்திக்க வேண்டும்.

பெண்கள் திருமணத்திற்கு பிறகும் பயன்படும் வகையில் தங்கள் படிப்புகளை தேர்வு செய்ய வேண்டும்.

கற்றலுக்கு வறுமை என்பது தடையல்ல.

இவ்வாண்டு +2 தேர்வில் திண்டுக்கல்லை சேர்ந்த தச்சுப்பட்டறை தொழிலாளியின் மகள் நந்தினி 600-க்கு 600 என மதிப்பெண் பெற்று சாதித்துள்ளார். இது ஒரு சாதனையாகும்.

மார்ட்டின் லூதர் கிங் கூறியதை கேளுங்கள்.

பறக்க முயற்சி செய், இல்லாவிடில் ஓடு. ஓட முடியாவிட்டால் நட. அதுவும் முடியாவிட்டால் ஊர்ந்து செல், எந்த நிலையிலும் முன்னேறிக்கொண்டே இரு.

இதனை மனதில் கொண்டு இயங்குங்கள்.

துயரங்களை முறியடித்து செல்வதுதான் வாழ்வின் சாதனை.

உங்கள் கனவுகள் கைக்குட்டைகளை பிடிப்பதற்காக அல்ல. மேகங்களை பிடிப்பதற்காக இருக்க வேண்டும்.

இந்த மண்ணில் பிறந்த மேதகு டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் வறுமையை கடந்து தான் வெற்றி பெற்றார்.

அவரது வெற்றிக்கு அவர் கற்ற கல்வி மட்டும் அல்ல… பண்புகளும், நேர்மையும், உழைப்பும் என்பதை மறந்துவிடக்கூடாது.

அவர் ராமேஸ்வரத்தின் சிறப்பை தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தினார். தமிழ்நாட்டின் சிறப்பை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தினார். இந்தியாவின் சிறப்பை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.

அவர் கூறினார்.

வரலாற்றில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தப் பக்கத்தை உலகையே படிக்க வைப்பது உங்கள் கைகளில்தான் உள்ளது என்றார்.

உங்கள் பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் உங்கள் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் என்றார்.

இவற்றை மனதில் கொண்டு சிகரத்தை வெல்ல புறப்படுங்கள் வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் பேசினார்

இந்நிகழ்வில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி எம்.பி, k.திருநாவுக்கரசு MBA, A.C.ஜீவானந்தம், கல்வியாளர் சித்திக், மஜக மாநில துணைச் செயலாளர் பேராவூரணி சலாம், மஜக இளைஞரணி மாநில பொருளாளர் புதுமடம் பைசல், மாவட்ட பொறுப்பு குழு தலைவர் முகவை நசீர், பொறுப்பு குழு உறுப்பினர்கள் சையது இப்ராஹிம், அஜ்மல்தீன் புதுமடம் வடக்கு தெரு ஜாமியா மஸ்ஜித் தலைவர் நசீர் அகமது வடக்குதெரு நடுத் தெரு மஸ்ஜித் நூர் ஜமாத் பொருளாளர் ஹாஜா மைதீன் மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Top