
மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி இரங்கல்…
உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும், AIMPLB அமைப்பின் பொதுச்செயலாருமான ஜாபர்யப் ஜீலானி (73) அவர்கள் இன்று லக்னோவில் உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து துயரமடைகிறோம்.
பாபர் மசூதி வழக்கில் உண்மையான ஆவணங்களுடன்; நீதிக்காக; சட்டத்தின் துணை கொண்டு போராடிய அவரது துணிச்சல் அளப்பரியது.
இந்திய திருநாட்டின் ஜனநாயகத்திற்காகவும், நீதிமன்ற சுதந்திரத்திற்காகவும் வாதாடிய நீதியின் குரல் ஒய்ந்துவிட்டது.
அவரது நியாயங்களும், வாதங்களும் நீதிமன்றங்களால் நிராகரிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் தோற்கவில்லை என்பதை நாளைய வரலாறு நிருபிக்கும்.
அவர் விரும்பிய ‘அயோத்தி சகோதரத்துவம்’ அவரது இறுதி காலத்திலேயே துளிர்விடத் தொடங்கி விட்டது.
ஆம். அயோத்தியில் பாபர் மஸ்ஜித் இருந்த பகுதியில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட சுல்தான் அன்சாரி என்பவர் 42 சதவீத வாக்குகளை பெற்று வென்றுள்ளார்.
அந்த வார்டில் வாக்களர்களாக முஸ்லிம்கள் 440 பேரும், பெரும்பான்மையாக இந்து சமுதாய உறவுகள் 3844 பேரும் உள்ள நிலையில் அவர் விரும்பிய நல்லிணக்கம் குறித்த நம்பிக்கை முகிழ்ந்துள்ளது.
அவர் எதிர்பார்த்த நீதி கிடைக்காமல் போயிருக்கலாம். ஆனால் அவர் எதிர்பார்த்த சகோதரத்துவம் மலர்ந்து வருகிறது என்பது ஒரு ஆறுதலாகும்.
ஜாபர்யப் ஜீலானி என்ற நீதிக்கான போராளியை உத்தரப் பிரதேசம் என்னும் மறக்காது.
சத்தியத்திற்காக போராடிய – இந்திய சட்ட மேதையாக அவர் சரித்திரத்தில் நினைவு கூறப்படுவார்.
அவரை மனிதநேய ஜனநாயக கட்சி என்றும் நினைவு கூறிக்கொண்டேயிருக்கும்.
அவரை இழந்து வாடும் உறவுகளின் துயரத்தில் நாங்களும் உணர்வுப்பூர்வமாக பங்கேற்கிறோம்.
அவரது மரணத்திற்கு பிந்தைய மறுவாழ்வு சிறக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.