You are here

ஜல்லிக்கட்டு தீர்ப்பு… தமிழர் மனம் குளிர்ந்திருக்கிறது…

மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அறிக்கை.!

ஜல்லிக்கட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியுள்ள தீர்ப்பை மனிதநேய ஜனநாயக கட்சி வரவேற்று மகிழ்கிறது.

மதுரையில் 2017 ஜனவரி 12 அன்று இதற்காக மனிதநேய ஜனநாயக கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, தமிழக கொங்கு இளைஞர் பேரவை ஆகியவை இணைந்து முதல் போராட்ட தீயை பற்ற வைத்ததை இத்தருணத்தில் நினைவு கூறுகிறோம்.

சென்னையில் லயோலா கல்லூரி மாணவர்களும், அதைத் தொடர்ந்து புதுக்கல்லூரி மாணவர்களும் தொடங்கிய அறவழிப் போராட்டம் மெரினா புரட்சியாக மாறியது.

சாதி, மத, அரசியல் பேதமற்று தமிழ் நிலத்தின் பிள்ளைகளாய் மக்கள் மெரினா மணல் பரப்பில் ஒருங்கிணைந்தனர்.

உலகமெங்கும் வாழும் தமிழர்கள் அந்தந்த நாடுகளில் போராட்டங்களை நடத்தி தங்கள் கலாச்சார உரிமைகளை பறைசாற்றினர்.

நான் மலேஷிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற அத்தகைய போராட்டத்திலும் பங்கேற்றேன்.

உலகமே தமிழர்களை திரும்பி பார்த்த அறவழிப்போராட்டமாக அது பரவியது.

இதை தமிழர்களின் வசந்த காலம் என நான் சட்டமன்றத்தில் குறிப்பிட்டேன்.

இதற்காக அன்றைய அதிமுக அரசும், இன்றைய திமுக அரசும் சமரசமின்றி சட்டப் போராட்டம் நடத்தியதை கட்சி சார்பற்று எல்லோரும் வரவேற்றனர்.

இதற்காக தமிழக அரசு சார்பில் நிறைவேற்றிய அவசரச் சட்டத்தை இன்று உச்சந்திமன்றம் ஏற்றுக்கொண்டு வரலாறு பாராட்டும் தீர்ப்பை வழங்கியுள்ளது.

இதில் எந்தவொரு பின்னடைவும் ஏற்படாமல் கவனமாக ஆவணங்களை தயாரித்து தீர்ப்பை வென்றெடுத்ததற்காக மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதியார் அவர்களுக்கும், அவர் தலைமையிலான தமிழக அரசுக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த மகிழ்ச்சியை இதற்காக அறவழியில் போராடிய அனைத்து தமிழ் உறவுகளோடும் பகிர்ந்துக் கொள்கிறோம்.

‘கொம்பு வைத்த சிங்கம்’ பாய்ச்சலில் வென்றிருக்கிறது.

தமிழர் மனம் குளிர்ந்திருக்கிறது.

இவண்;
மு.தமிமுன் அன்சாரி Ex MLA.,
பொதுச்செயலாளர்
மனித நேய ஜனநாயக கட்சி
18.05.2023

Top